நவநீதம்பிள்ளையின் இடத்துக்கு ஜோர்தான் நாட்டுத் தூதுவர் இளவரசர் சையிட் அல் ஹுசேன்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் நாட்டுத் தூதுவர் இளவரசர் சையிட் அல் ஹுசேனை நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம், வரும் ஓகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளது.

இந்தநிலையிலேயே புதிய ஆணையாளராக இளவரசர் சையிட் அல் ஹுசேனை நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இளவரசர் சையிட் அல் ஹுசேன், நீண்டகாலம் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர் என்பதுடன், முன்னாள் ஐ.நா அமைதி காப்பாளருமாவார்.

இவர் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்குமான ஜோர்தான் தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.

எனினும், ஐ.நா தூதுவர் பதவியை விட்டு விலகுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

ஐ.நா பாதுகாப்புச்சபையில் ஜோர்தானின் தூதுவராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.

அனைத்துலக நீதி மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான விவகாரங்களில் இவர் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதால், பான் கீ மூன் இவரை இந்தப் பதவிக்குத் தெரிவு செய்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் இவரைத் தெரிவு செய்தாலும், பொதுச்சபையில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

முன்னதாக, இந்தப் பதவிக்கு மர்சுகி தருஸ்மன், ஜோஸ் ராமோஸ் ஹோர்டா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

எனினும், மேற்காசியாவைச் சேர்ந்த இளவரசர் சையிட் அல் ஹுசேனை பான் கீ மூன் தெரிவு செய்துள்ளார்.

சிரியா உள்ளிட்ட மேற்காசியா மற்றும் வடஆபிரிக்க நாடுகளில் உள்ள மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதைக் கருத்தில் கொண்டு ஐ.நா பொதுச்செயலர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.