17.06.2014 புதன்கிழமை நோர்வே இந்தியத்தூதரகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் நடாத்தப்பட்டது இப்போராட்டம் பிற்பகல் 1530 மணியில் இருந்த 1630 வரை நடைபெற்றது. இதுவரை காலமும் இந்தியத்தூதரகத்திற்கு முன்பாக நடாத்திய போராட்டங்களை இந்தியத்தூதரக அதிகாரிகள் மறைந்து நின்று படம் பிடித்ததுதான் வரலாறாக இருக்கின்றது. ஆனால் முதற்தடவையாக நேரடியாக வந்து போராட்டத்தில் மக்கள் வைத்திருந்த பதாகைகளை வாசித்து மக்களோடு பேசிச்சென்றார்கள். செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரியை சந்தித்த செல்வி ஜெயலலிதா அவரிடம் கையளித்த பிரேரணையில் ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர்வுக்கு இந்தியா முன்னிற்க வேண்டும் என்றும் ஐநா சபையில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை விசாரணை செய்யும் முகமாக ஒரு தீர்மானத்தை இந்தியா முன் வைக்க வேண்டும் என்றும் தமிழீழ மக்களிடையே – ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் தமிழீழத்தை வலியுறுத்தி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் . ஈழத்தமிழர்களின் விடுதலை வேண்டி திரு நரேந்திர மோடியிடம் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையை ஈழத்தமிழர்களாகிய நாமும் அதை வலியுறுத்த வேண்டிய கடமை உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஆகிய எமக்கும் உண்டு என்ற அடிப்படையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து நோர்வே மக்களின் சார்பில் இந்த ஆதரவுப்போராட்டத்தினை மக்களவையினர் ஒழுங்குசெய்திருந்தனர்.