தென்னிலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம் உறவுகளை இலக்கு வைத்து சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள இனவெறித் தாண்டவத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உலக சமூகத்திடம் நீதிகோரி இலண்டனில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிற்காக அழைப்பை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளே,

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கையிலிருந்து ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் கைமாறிய நாள் முதல் தமிழீழ தாயகத்திலும், தென்னிலங்கையிலும் ஈழத்தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் இலக்கு வைத்து திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சிங்களம், தற்பொழுது தனது இனவெறித் தாண்டவ நடவடிக்கைகளை தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை நோக்கியும் விரிவுபடுத்தியுள்ளது.

‘கலகம்’ என்ற போர்வையில் ஈழத்தீவில் முதன்முதலாக 1915ஆம் ஆண்டு சிங்களம் அரங்கேற்றிய இனவெறித் தாண்டவம் ஈழத்தீவில் வசித்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வாரம் இதேபாணியிலான இனவெறித் தாண்டவத்தை தென்னிலங்கையின் அளுத்கம, பெருவல ஆகிய பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம் உறவுகள் மீது கட்டவிழ்த்து விட்ட சிங்களம், தொடர்ச்சியாக இவ்வாறான இனவெறி நடவடிக்கைகளை எமது இஸ்லாமிய உறவுகளை இலக்கு வைத்து தொடர்ந்தும் தென்னிலங்கையிலும், மலையகத்திலும், தமிழீழ தாயகத்திலும் மேற்கொண்டு வருகின்றது.

சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்தின் இனவெறிக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, இரண்டரை இலட்சம் உறவுகளை இழந்தவர்கள் என்ற வகையில், ஈழத்தமிழர்களாகிய நாம் இதே நிலை எமது இஸ்லாமிய உறவுகளுக்கும் ஏற்படுவதற்கும் இடமளிக்க முடியாது.

தமிழீழ தாயகத்திலும், தென்னிலங்கையிலும், மலையகத்திலும் இனவழிப்பை எதிர்நோக்கியுள்ள எமது உறவுகளுக்காக உலகின் எட்டுத் திசைகள் தோறும் எழுச்சிகொண்டு அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள நாம், எமது இஸ்லாமிய உறவுகளுக்குத் தோள்கொடுத்து அவர்களுக்காகவும் போராட வேண்டியவர்களாக இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் உள்ளோம்.

இவ் வரலாற்றுக் கடப்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக வரும் 27.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இலண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமரின் வாசத்தலமாகிய 10 Downing Steet முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் அனைத்துப் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளையும் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி அணிதிரண்டு, எமது இஸ்லாமிய உறவுகளுக்கு தோள்கொடுக்க வருமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நிறைவேற்றுக் குழு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா