1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது உடனடியாக இடம்பெற்ற சம்பவம் அல்ல எனவும்- எந்தெந்த இடங்களில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற தகவல்கள் சேரிக்கப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு சம்பவமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார்.

வட மாகாண சபையின் 11ஆவது அமர்வு- கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை பகல் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
பேருவளை- தர்க்காநகர் வலப்பனை போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகள் சொத்தழிப்புக்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் உறுப்பினர் அஸ்மினால் சபையில் கொண்டுவரப்பட்டது.

அது குறித்து உரையாற்றும் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது :-

சிறுபான்மை இனங்களான தமிழ்- முஸ்லிம் மக்கள் இணைந்து சேர்ந்து வாழ்வதன் மூலமே இத்தகைய தாக்குதல் சம்பவங்களில் இருந்து எதிர்காலத்தில் தம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

1958 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்கள் தமது வாழ்க்கையையும் நல்லமுறையில் நடத்திக்கொண்டு இருந்தார்கள். தனிச்சிங்கள மசோதா கொண்டுவரப்டபட்டு தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சிலர் வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.

இன்னும் சிலர் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். இது கூட தமிழ் மக்களை தென்னிலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உடனடியாக இடம்பெற்ற சம்பவம் அல்ல. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னரே நன்கு திட்டமிட்டு எந்தெந்த இடங்களில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் சேகரிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கும் தென்னிலங்கையில் இருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில் திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகி 13 இராணுவத்தினர் மரணம் அடைந்ததை காரணமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதே உண்மையாகும்.
தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேருவளையில் தர்காநகர் வலப்பனை போன்ற இடங்களில் எல்லாம் கலவரம் நடைபெற்று முடிவடைந்த நிலையிலும் ஏனைய இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுவதின் பின்னணியைப் பற்றியும் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

தற்போது நடைபெறும் கலவரங்கள் சொத்தழிப்புக்களும் கூட முஸ்லிம் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலும் மற்றும் அவர்களுடைய பலத்தைக் குறைக்கும் வகையிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றதா? என்பதையிட்டும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகளின் அடிப்படையில்தான் இந்த வன்செயல்கள் இடம்பெறுகின்றன. இல்லாவிட்டால் ஓர் இடத்தில் முடிவடைந்த பின்னர் மற்றைய இடங்களுக்கும் தொடர வேண்டிய தேவையும் அவசியமும் இல்லை.

வடமாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் தரமாட்டோம் என்று கூறுகின்றார்கள். இன்று சிங்கள மக்களிடம் பொலிஸ் அதிகாரம் இருக்கையில் முஸ்லிம் மக்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இந்த வகையில்தான் நாம் கேட்கின்றோம் வட மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரத்தை தரும்படி. இத்தகைய நிலையில சிறுபான்மை இனங்களான தமிழ்- முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்வதன் மூலம் இத்தகைய திட்டமிட்டு சிறுபான்மை மக்களை அழிப்பதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் – என்றும் கூறினார்.

Kilde: Athavan news