இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்குவதற்காக நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு மிகவும் வலுவானது என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆங்கில செய்திச் சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்துக்களை அந்த செய்திச்சேவை இவ்வாறு வெளியிட்டுள்ளது. காசா மோதல்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழு, றிச்சர்ட் கோல்ட்ஸ்ரோன் என்ற ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாகவே அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கை குறித்த விசாரணைக் குழு மூன்று நிபுணர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பலம் வாய்ந்தது.

இந்தக் குழு போருக்குப் பின்னரான, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் நிலையை கண்காணிக்கும். உள்நாட்டு மீளிணக்கச் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளும்.- என்றும் அவர் குறிப்பிட்டார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.