காலகாலமாக கட்டிக்காப்பாற்றப்பட்டு வந்த தமிழ் இனத்தின் பாண்பாடுகள், காலை, கலாச்சாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை ஒரு காரணம் என்று செல்லிக் கொள்ளும் அதேவேளை ஏதோ ஒரு தேவைக்காக அல்லது வேறு வழியின்றி தமிழ் மக்களின் சிலர் இந்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு துணை போகின்றார்கள்.

இது சிலவேளை அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் நவநாகரீக உலகின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதற்கு அவர்கள் தமது வாழ்க்கைப் பாதையினை கொண்டு செல்வதற்குச் செய்யும் தெரிவும் எமது தமிழ்ப் பாரம்பரிய பண்பாடுகளை உடைத்தெறிகின்றது.

போதைவஸ்துப் பாவனை, குழு மோதல், களவு, கொள்ளை, கொலை, பாலியல் வல்லுறவு என்று ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் தாயகத்தில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான சம்பவங்களை இங்குள்ள காவல்துறையினர் நினைத்தால் ஒரு சில வாரங்களுக்குள் நிறுத்தி முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

ஆனால் அதனைச் செய்வதற்கு காவல்துறையினர் தயாராக இல்லை. காவல்துறையினர் தயாராக இருந்தாலும், சிறீலங்கா அரசாங்கம் அதற்கு இடம்கொடுக்கப் போவதில்லை. குறிப்பாக கடந்த சில வருடத்திற்கு முன்னர் யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை அதிபராக இந்திரன் என்கின்ற தமிழர் சிறீலங்காவின் காவல்துறை அதிகாரி பெறுப்பேற்றிருந்தார்.

அவர் பெறுப்பேற்று சில வாரத்திற்குள்ளேயே யாழ்ப்பாணத்தில்  பல்வேறுபட்ட குழு மோதல், களவு, கோள்ளை, கொலை, போதைப் பெருள் விநயோகம் என்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த யாழ்.ஜந்து சந்தியினைச் சேர்ந்த பேவியன் குழு மடக்கிப் பிடிக்கப்பட்டது. அவர்களின் பின்னணியில் சிறீலங்கா இராணுவத்தினர் இருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. மேலும் போதைப் போருள் விநியோகத்தின் பின்னால் உள்ள பல பிரபல்யமானவர்களுடைய தகவல்களும் வெளியிடப்பட்டது. இவை எல்லாம் நடைபெற்று அடுத்த வாரமே குறித்த காவல்துறை அதிகாரி அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டு தென்னிலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பகுதிகளில் நடைபெறும் சமூகவிரோதச் செயல்களை தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த விரும்பாத சிறீலங்கா அரசாங்கம், அவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளை மறைமுகமான ஒத்துழைப்பு கொடுத்து வளர்த்து வருகின்றது. கடந்த 16 ஆம் திகதி திங்கட்கிழமை கோண்டாவில் நடைபெற்ற சம்பவம் பற்றி அனைவரும் அறிந்திருக்கக் கூடும். அந்த சம்பவம் பல கனவுகளோடு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த யாழ்.சென்ஜோன் கல்லூரி மாணவனான ர.சுகிந்தன் என்பவனுடைய கனவுகளை தகர்த்து, அவனுடைய உயிரையும் காவு கொண்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக பார்த்தோமனால், உரும்பிராயில் இருந்து கோண்டாவிலுக்கு வந்து மோட்டார் சைக்கிலில் இருவர் சாகசம் காட்டினர். இதன் போது கோண்டாவில் வாசியான ஒருவரை மோதித்தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிலில் சாகசம் காட்டின இருவரையும் பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த உரும்பிராய் பகுதி இளைஞர்கள் கோண்டாவில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இதன்போது தமது நண்பர்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவருடைய வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதன்போது ர.சுகிந்தன் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் கழுத்தில் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த இளைஞனுடைய சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்தனர். ஆனாலும் அன்றிரவே கோண்டாவில் இளைஞர்கள் உரும்பிராய் பகுதிக்குச் சென்று அங்கிருந்த 7 வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளர். இத்தாக்குதல் சம்பவத்தில் சுமார் ஒரு வீட்டில் 5 இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டிருந்தது.

இத்தாக்குதல் சம்பவத்தினை அங்கு பாதுகாப்பு கடமையில் நின்ற காவல்துறை மற்றும் இராணுவத்தினர் நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அத்தாக்குதல் சம்பவத்தினை எதிர்பாத்திருந்தது போல் கண்டும் காணாதது போல் விட்டுவிட்டார்கள். மேலும் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கிற்கும் பெரும் தொகையான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

கலகம் அடக்கும் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் சகிதம் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில் கண்துடைப்பிற்காக மேற்படிச் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். ஆனாலும் உயிரிழந்த இளைஞனின் சகோதரன் வாள்வெட்டு நடத்தியவர்களின் பெயர், முகவரி அடங்கிய முறைப்பாட்டினைப் பதிவு செய்திருந்தபோதும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்கள் இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை.

அவர்கள் தலைமறைவாக இருக்கின்றார்கள் என்றும், விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கோண்டாவில் மற்றும் உரும்பிராய் இளைஞர்கள் இடையில் அடிக்கடி மோதல்கள், முறுகல் நிலமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பிரதான சந்தேக நபர்களை கைது செய்யும் வரைக்கும் இவ்வாறான மோதல் சம்பவங்கள் நடைபெறும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இதனை காவல்துறையினரும் அறியாமல் இருப்பார்கள் என்று கூறமுடியாது. அங்கு ஒரு அச்சமான நிலை காணப்பட வேண்டும், தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வு கேள்விக்குறியாக இருக்க வேண்டும், தமிழ் மக்களிடையிலேயே குரோதங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே மேற்படிச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என்பதுதான் உண்மையாகும்.

தாயகத்தில் இருந்து இளங்கீரன்

நன்றி: ஈழமுரசு