சாட்சியமளிக்கக்கூடாது முல்லைத்தீவில் மக்களை அச்சுறுத்தும் புலனாய்வுப் பிரிவு! July 5, 2014 News காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட அமர்வு இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில் சாட்சியமளிப்பதற்காக முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களுக்கு ஆணைக்குழு அழைப்புக் கடிதங்களை அனுப்பியிருந்தது. இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டவர்களது வீடுகளுக்குச் சென்ற புலனாய்வுத் துறையினர், ‘ நீங்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கக்கூடாது, அவ்வாறு சாட்சியமளித்தால் உங்களுக்கெதிராக நாம் சில நடவடிக்கைகள் எடுப்போம். நீங்கள் எங்களிடம் வந்தால் காணாமற்போனவர்களுக்கு மரணச் சான்று தருவோம்’ என்று அச்சுறுத்தினர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை அச்சுறுத்தப்பட்டவர்கள் சிலர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் இதுகுறித்து தெரிவித்தனர் என்றும், அவர் அவ்வாறு அச்சுறுத்தப்பட்டவர்களை ஆணைக்குழு அமர்வுக்கு அழைத்துச்சென்று சாட்சியமளிக்க தான் ஏற்றாடு செய்வேன் என்று தெரிவித்தார்.