உலகத் தமிழரை அணிதிரட்டுவதில் ஏனைய அமைப்புகளும் எமது இயக்கத்திற்கு எதிராகப் பரப்புரை செய்து ஆதிக்கப் போட்டியில் குதித்து இருந்ததால்,அது எமக்கு பெரும் சவாலாக அமைந்தது.எமது விடுதலை அமைப்பை வளர்த்து, பலப்படுத்தி, விரிவாக்கம் செய்ய நிதிவளம் அத்தியாவசியத் தேவையாக எழுந்தது.இந்த நெருக்கடியான சூழ்நிலையிலேதான் நாம் சற்றும் எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது. அவ்வேளைதான் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள் அதிஷ்டத் தேவதையாகக் எமக்கு கைக்கொடுத்து உதவினார்.

1984 ஏப்ரல் மாதத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களை நான் சந்தித்த வரலாற்றுப் பின்னணி, வெற்றிகரமாக முடிந்த முதர்சந்திப்பின் போதே இரண்டு கோடி ரூபாவை ஆயுதப் போராட்டத்திற்கு தானம் செய்ய அவர் முன்வந்தமை.அவரது பாதாள பண அறை இரகசியங்கள்,தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் மத்தியில் ஏற்பட்ட நெருக்கமான நட்புறவு,அதன் பின்னர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்தெந்த வழிகளில் எப்படியான உதவிகளை செய்தார்,ஆபத்தான எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து செயற்பட்டார்.சிக்கலான அரசியல் சூழ்நிலைகளில் எமது அமைப்புச் சிக்குப்பட்டபோதெல்லாம் எவ்வாறு எமக்கு கைகொடுத்து உதவினார் என்ற பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் சம்பவங்களையும் “விடுதலை”என்ற எனது நூலில்”எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்”என்ற அத்தியாயத்தில் விபரமாக விளக்கியிருக்கிறேன்.இங்கு சுருக்கமாகச் சொல்வதானால் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய உறுதியான ஆதரவும் கோடிக் கணக்கில் அவர் வழங்கிய நிதியுதவியுமே எமது விடுதலை அமைப்பின் அபார வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அத்திவாரமாக அமைந்தன எனலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்து ஈழத்தமிழரின் தேசியப் போராட்ட அரங்கில் எம்.ஜி.ஆர்.அவர்கள் பிரவேசித்தமை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது.தமிழக முதல்வரின் ஆசியுடனும் நிதி உதவியுடனும் பிரபாகரனது இலட்சியக் கனவுகள் நிஜமாக மாறின.

(அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலிலிருந்து…)