காவியமானவனின் ஓவியம்.

காலித் துறைமுகத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு நாள் வழக்கமானத் தொடர்பாடல்களுக்குப் பின் “அண்ணா உங்களோடு கதைப்பதற்காக உங்கள் மாணவர்(போராளி)வைத்திருக்கிறார் கொஞ்சம் கதையுங்கள் அண்ணா” என்று கூறி அவருக்கு வழிவிட்டார்சேரலாதன்.

“மாஸ்டர் நான் பிரபு கதைக்கிறேன். நலமா மாஸ்டர்”என்ற அவர் குரல் கேட்டதுமே அவர் முகம் என் நினைவுக்கு வந்துவிட்டது.என்னிடம் ஓவியப் பயிற்சிப் பெற்ற 60 போராளிகளில் அவரும் ஒருவர்.ஒருவருக்கொருவர் விசாரிப்புகள் முடிந்து “மாஸ்டர் ஒரு முக்கியமான செய்தியை கூறுவதற்காகத்தான் நான் வந்தேன்’ என்று என்னிடம் ஓவியம் பயின்ற ஒரு போராளியின் பெயரைச் சொல்லி “அவர் காலித் துறைமுகத் தாக்குதலில் கரும்புலியாகச் சென்று வீர காவியமாகிவிட்டார்”. என்று அவர் கூறும் போதே நான் அதிர்சியில் உறைந்து போனேன்.”

அவர் செல்வதற்கு முன் உங்களுக்காக அவர் வரைந்த ஒரு ஓவியத்தை என்னிடம் கொடுத்து எப்படியாவது உங்களிடம் சேர்ப்பித்து விடும் படியும்,தகவலையும் உங்களிடம் தெரிவிக்கும் படியும் கூறினார் மாஸ்டர்” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் கலங்கிவிட்டேன். அதற்குமேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை அமைதியாகிவிட்டேன்…… எல்லாப் போராளிகளுமே என் மீது அன்பும் பற்றும் மதிப்பும் கொண்டவர்கள் என்பதையும் நான் உணர்ந்திருந்தவன்,

எப்படியாவது அம் மாவீரனின் ஓவியத்தை அவர் விரும்பியபடி எனக்கு அனுப்பிவிடுங்கள் என்னிடம் அவன் நினைவும் வரலாறும் பத்திரமாக இருக்கும் என்று தெரிவித்தேன்.ஆனால் போர் உக்கிரமானதால் எல்லாம் குழம்பிப் போய்……….

அந்த கடலில் காவியமானவனின் ஓவியத்திற்காக இன்னும் காத்திருக்கின்றேன்…..

நன்றி :ஓவியர் புகழேந்தி