பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அடக்குமுறைகள் அநீதிகளுக்கு எதிராக போராடியவர்கள் – சிவசக்தி ஆனந்தன் July 7, 2014 News பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். இதுவே எமது வரலாறு. நாம் இனியும் அநீதிகளுக்கு எதிராகப்போராடுவோம் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்று நாடக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை எமது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளதாக அமையும். பிரித்தானியரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிய பண்டார வன்னியன், இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரம் நிறைந்த ஒரு மாவீரன். பண்டாரவன்னியனில் இருந்து பிரபாகரன் வரைக்கும் நாட்டில் இருக்கக்கூடிய அடக்குமுறைகள் அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடிய வரலாறு தான் எமது வரலாறு. இந்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நாம் சந்ததி சந்ததியாக வெளிப்படுத்த வேண்டும்.-என்றார்.