கிழட்டு நரியின் சூத்திரதாரப் பொறிக்குள் சிக்கிக் கொண்ட ராஜீவ். July 8, 2014 TCC போரும் சமாதானமும் என்ற இருமுனைத் தந்திரோபாய அணுகுமுறையைக் கடைபிடித்தார் ஜெயவர்த்தனா. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகான நேர்மையான முறையில் தான் முயல்வதாக இந்தியாவிற்கும் உலகிற்கும் ஏமாற்று வித்தைக் காட்டுவதற்காக, மாறிமாறி அரசியல் கட்சிகளின் மாநாடுகளைக் கூட்டி இனப் பிரச்சினையை இழுத்தடித்து வந்தார். அதேசமயம் பாகிஸ்தானுடனும் இஸ்ரேலுடனும் ஒப்பந்தங்கள் செய்து,பெருந்தொகையான ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்கள இராணுவ இயந்திரத்தை வலுப்படுத்தி வந்தார்.அத்துடன் இந்தியாவுக்கு மத்தியஸ்துவ பாத்திரத்தை வழங்கி, தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு இந்திய அரசு வழங்கிவந்த அரசியல் ஆதரவையும் இராணுவ உதவிகளையும் நிறுத்துவதில் வெற்றிகண்டார். சமாதானப் பேச்சுக்களில் தமிழ் அமைப்புக்கள் விட்டுக்கொடுக்காத கடும்போக்கை கடைப்பிடிப்பதாகப் புதுதில்லியை நம்ப வைத்து,ராஜிவ் ஆட்சிப் பீடத்திற்கும் தமிழருக்கும் மத்தியில் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தினார். பேச்சுக்களை சூத்திரக் கருவியாகப் பயன்படுத்தி,இந்திய அரசுக்கும் தமிழருக்கும் மத்தியில், ஒருபுறம் இராணுவ முரண்பாட்டையும் பகைமையையும் வளர்த்துக் கொண்டு மறுபுறம்,தமிழரின் சுதந்திர இயக்கத்தை இராணுவ பலம் மூலம் நசுக்கிவிடும் நோக்கத்துடன் சிங்கள ஆயதப் படைகளை நவீனமயப் படுத்தி விரிவாக்கம் செய்தார். ஜெயவர்த்தனாவின் நயவஞ்சக அரசியலை புரிந்துகொள்ளத் தவறிய ராஜீவ் காந்தி, அந்தக் கிழட்டு நரியின் சூத்திரதாரப் பொறிக்குள் சிக்கிக் கொண்டார். (அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலிலிருந்து…) நன்றி ஓவியர் புகழேந்தி