செய்தியாளர்களுக்கான பயிற்சி நெறிகளையோ, அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது – பாதுகாப்பு அமைச்சு. July 8, 2014 News இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்தியாளர்களுக்கான பயிற்சி நெறிகளையோ, அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருக்கின்றது. சில அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளல்ல என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே அதிகாரமளிக்கப்படாத இந்த நடவடிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளரும், பதிவாளருமாகிய டி.எம்.எஸ்.திசாநாயக்க அறிவுறுத்தியிருக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் இந்த நடவடிக்கையானது, அதிர்ச்சியளிப்பதாக அமைந்திருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறினார். ´அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்தியாளர்களுக்குப் பயிற்சியளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமானால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நாட்டில் எத்தனையோ சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடானது, நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்துள்ள மோசமான அடியாகவே கருத வேண்டியுள்ளது´ என பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். இம்மாதம் முதலாம் திகதியிடப்பட்டு, உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை திங்களன்று தங்களுக்குக் கிடைத்திருப்பதாகத் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்