புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இரு தினங்களும் முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் இரு தினங்களும் என நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணைகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு அவை தொடர்பிலான பதிவுகளையும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மேற்கொண்டுள்ளார்.

விசாரணைகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று புலனாய்வுப்பிரிவினர் மக்களுக்கு கூறியதான நிலையிலேயே அவர்களை விசாரணைகளுக்கு பங்கெடுக்கும் படி கூறி தானும் அங்கு சென்று மக்களுடன் உரையாடி அவர்களை உறுதிப்படுத்தி விசாரணைகளில் பங்கெடுக்க வைத்திருந்தார்.

இவை தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான சனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் கடந்த 5ம் திகதியில் இருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மேற்படி விசாரணைகளுக்கு செல்லவேண்டாம் எனவும் இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளும் படியும் தேவையான வசதிகளை தாம் ஏற்படுத்தித்தருவதாகவும் தொலை பேசி அழைப்புக்கள் ஊடாக தமக்கு புலனாய்வுப்பிரிவினர் வற்புறுத்தியதாக ரவிகரனிடம் மக்கள் முறையிட்டிருந்தனர்.

இவ்வாறான விசாரணைகளில் கலந்து கொள்ளவேண்டும். இவ்வளவு காலமும் எடுத்த முயற்சிகள் பலனில்லாமல் போகக்கூடாது. அதனால் இவற்றில் பங்கெடுக்க அவசியம் வாருங்கள். நானும் அங்கிருப்பேன் என்று உறுதிகூறி நான்கு நாட்களும் விசாரணைகளுக்கு வருகை தந்த மக்களோடு உரையாடி அவர்களை உறுதியாக்கி விசாரணைகளில் பங்கெடுக்க வைத்திருந்தார்.

இவை தொடர்பில் கருத்து தெரிவித்த ரவிகரன்,

பதினைந்திற்கும் மேற்பட்ட மக்கள் என்னை நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு இராணுவ அழுத்தங்கள் தொடர்பில் முறையிட்டிருந்தனர். அவர்களுக்கு சாட்சியமளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி நானும் அங்கு அவர்களுடன் விசாரணை அறையிலும் இருப்பேன் என்பதை கூறி உறுதிப்படுத்தினேன்.

முதல் நாளில் பங்கெடுத்த ஒருவர் வெளிப்படையாகவே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னை அந்த நாளிலேயே கிளிநொச்சிக்கு வரும் படி கூறியதையும் இறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும் படி கூறியதையும் விசாரணையில் அம்பலப்படுத்தியமை புலனாய்வுப்பிரிவினர் மக்களை விசாரணைகளுக்கு செல்ல விடாமல் தடுத்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மக்கள் வசிக்கும் இடங்களில் படையினரின் பிரசன்னத்தை மக்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். தங்களின் பாதுகாப்பு அடையாளமாக படையினரை முன்னிறுத்த மறுத்திருக்கிறார்கள். எம் உறவுகள் காணாமல் போகவில்லை. படையினரிடம் நாம் கொடுத்துள்ளோம். அவர்களை மீட்டுத்தாருங்கள் என்றும் தமது கருத்துக்களை வலிமையாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.

அரசாங்க உதவிகள் இன்றி தனது கணவர், உழைக்கும் பிள்ளைகள் என்று குடும்ப பொருளாதாரத்தின் முதுகெலும்பின்றி ஒரு நாள் பசியகற்றக்கூட தாம் படும் இடர்பாடுகளை அவர்களின் வார்த்தைகளும் கண்ணீரும் சாட்சியமாக்கியுள்ளது.

230 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் 129 உறவுகள் மாத்திரமே சமூகமளித்திருந்தமை, இன்னும் அவர்கள் அழுத்தங்களுக்குட்பட்டு திறந்த விசாரணைகளை முகங்கொடுக்க மறுக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. இதுவே அழுத்தங்களற்ற நம்பிக்கையான ஒரு பொறிமுறையாகும் பட்சத்தில் மக்களின் சுதந்திரமான வெளிப்படையான கருத்துக்களும் ஓங்கி ஒலிக்கும். பங்கெடுப்பு வீதமும் அதிகரிக்கும். அதுவே விசாரணைகளின் உள்ளார்ந்த தேவைகளையும் நிவர்த்தி செய்யும் என்றார் ரவிகரன்.