தமிழ்நாட்டிலுள்ள 115 தொடக்கம் 130 வரையான அகதி முகாம்களில் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். July 9, 2014 News ஜெனீவாவின் 1951 அகதிகள் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என Hiding the Elephant என்கின்ற நூலின் ஆசிரியரான பேராசிரியர் இராமு மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். இவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சாட்சியமளிப்பதற்கான ஒரு சுயாதீன கண்காணிப்பாளராகக் கலந்து கொண்டவர். இடைக்கால குடியுரிமை தொடர்பாக ஆலோசனை வழங்குகின்ற PN Bhagwati ஆணைக்குழுவால் வரையப்பட்ட அகதிகள் தொடர்பான மாதிரிச் சட்டத்தையும் இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இந்தச் சட்டவரைபானது 2006லிருந்து நாடாளுமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பேராசிரியர் இராமு மணிவண்ணன் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுக்குள் நுழைவுவிசாவின்றி சட்டவிரோதமாக நுழையும் அனைத்து அந்நியர்களும் இந்தியாவின் 1946ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் மற்றும் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படுவர். ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் சான்றிதழானது இந்தியாவில் அகதிகள் தடுத்து வைக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு வழங்கவில்லை. இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 115 தொடக்கம் 130 வரையான அகதி முகாம்களில் 100,000 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த அகதிகளில் சிலர் கிடுகால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட குடிசைகளிலும் ஏனையோர் சீமெந்தால் கட்டப்பட்ட சிறிய வீட்டுத் தொகுதிகளிலும் வாழ்வதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். இங்கு போதியளவு மலசலகூட வசதியோ, குளியலறை வசதியோ அல்லது போதியளவு குடிநீர் வசதியோ காணப்படவில்லை. இங்கு குப்பைகளைச் சேகரிப்பதற்கான வசதியோ, மருத்துவ வசதிகளோ மேற்கொள்ளப்படவில்லை. மின்சாரம் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழமையாக காலை ஆறு தொடக்கம் மாலை ஆறு மணிவரையே மின்சாரம் வழங்கப்படுகிறது. சில முகாம்களில் மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை. திருவநந்தபுரத்தில் உள்ள அகதி முகாமில் உள்ள ஆறு வீடுகள் அண்மையிலேற்பட்ட பருவப்பெயர்ச்சி மழையால் சேதமடைந்தன. இதில் சிறுமி ஒருவர் இறக்க நேரிட்டது. இங்கு இரண்டு வகையான முகாங்கள் காணப்படுகின்றன. பொதுவான முகாம்கள், சிறப்பு முகாங்கள் போன்றனவே அவையாகும். பொதுவான அல்லது சாதாரண முகாங்களிலுள்ள மக்கள் வெளியில் செல்ல முடியும். ஆனால் இவர்கள் மூன்று விதமான காவற்துறையின் அனுமதிப் படிவத்தைப் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படுகின்றன. போக்குவரத்தில் சில மட்டுப்படுத்தல்கள் இங்கு உள்ளன. அகதி முகாம்களில் பணியாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையகம் கூட இந்த முகாம்களுக்குள் பிரவேசிக்க முடியாது. சாதாரண முகாம்களில் வாழ்வோர் பாதுகாப்பு அதிகாரிகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கும்மிடிப்பூண்டி முகாமிலிருந்து இரும்புத் தொழிற்சாலைக்குப் பணிபுரியச் செல்வோர் அங்கிருந்து இரும்புகளைக் களவாடிக் கொண்டு வந்து தம்மிடம் தரவேண்டும் என தமிழ்நாடு காவற்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான கியுப் பிரிவு காவற்துறையினர் பலவந்தப்படுத்துவதாக அங்குள்ள அகதி ஒருவர் அனைத்துலக மன்னிப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார். இதேபோன்று 2008 மற்றும் 2011 காலப்பகுதியில் வங்கிகளில் கொள்ளையடிக்குமாறு அகதிகள் பலவந்தப்படுத்தப்பட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றங்களைப் புரியும் அகதிகள் கைதுசெய்யப்பட்டால் அவர்கள் “சிறப்பு முகாம்களுக்கு’ மாற்றப்படுவர். போரின் பின்னர் இலங்கைக்குத் திரும்பிய அகதிகள் பலர் தமது சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றவாதம் இடம்பெறுவதாக தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. “எனது சகோதரன் தனது நிலத்தைப் பார்ப்பதற்காகச் சென்றபோது எமது சொந்தக் கிராமத்தின் கிட்டத்தட்ட 100 சதவீதமான நிலங்கள் தற்போதும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ளதைக் கண்டார்’ என இந்தியாவிலுள்ள தமிழ் அகதி ஒருவர், அனைத்துலக மன்னிப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகியும், காவற்துறையின் தடுப்பிலுள்ள போதான சித்திரவதைகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை ஒரு எதேச்சாதிகாரப் போக்குடைய ஒரு நாடாக மாறிவருவதாக 2013 இல் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், கொலை, தடுத்துவைப்பு மற்றும் பலவந்தக் காணாமற் போதல்கள் ஆகிய ஆபத்தைச் சந்திக்கின்றனர் என சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் யுவான் மென்டெஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மார்ச் 2014 தொடக்கம் தமிழர் பகுதிகளில் சிங்கள அதிகாரிகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இங்கு கைதுசெய்தல்கள் அதிகரித்துள்ளன. கொலைகளும் இடம்பெற்றுள்ளன. சுதந்திரமான நடமாட்டம் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தளவில் தற்போது இனப்படுகொலைக்கான ஆபத்து மத்திமத்திலிருந்து உச்சம் வரை அதிகரித்துள்ளது எனவும் மீண்டும் இலங்கையில் மோதல் உருவானால் இனப்படுகொலை உட்பட பாரிய வன்முறைகள் வெடிக்கும் என Sentinel Project மதிப்பீடு செய்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகும் இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த 12 மாதங்களாக அவுஸ்திரேலியாவால் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக இலங்கையின் மனித உரிமைச் சட்டவாளர் லக்சன் டயஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு பலவந்தமாக நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்கள் அவர்களது சொந்த நாட்டில் விசாரணை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாவதுடன், மீண்டும் இவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் லக்சன் டயஸ் தெரிவித்துள்ளார். Source: Thinakkural