மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பத்து ஆண்டுக்கால காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் வீழ்ந்து கிடந்த இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து மீட்டு உயர்த்துகின்ற வகையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த, இந்திய அரசின் பொது வரவு, செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில உரிமைகளை மதிக்கும் அரசாகத் திகழும் என்பதற்கு அடையாளமாக, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்காக சென்னையில் அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்ப மருத்துவமனை, சூரிய மின்சக்தித் திட்டம், ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா, சென்னை மருத்துவக் கல்லூரியில் காசநோய், பல் மருத்துவ சிகிச்சைகள் தொடங்குதல் போன்ற அறிவிப்புகளைத் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சியில் 4.1 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 3.6 விழுக்காடாகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரி வருமானம் மட்டும் இன்றி மாற்று வழிகளிலும் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதும், அரசின் செலவினங்களை நிர்வகிக்கத் தனி ஆணையம் ஏற்படுத்தி இருப்பதும் மிகத் தேவையான நடவடிக்கைகள் ஆகும்.

பெரும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டு இருந்த விவசாயத்துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. நிலம் இல்லாத 5 இலட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் நிதி உதவி, வேளாண் துறையில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்க ரூபாய் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, வேளாண் கடன் வழங்க ரூபாய் 8 இலட்சம் கோடி ஒதுக்கீடு, நீர்ப்பாசனத் திட்டங்கள் மேம்பாட்டிற்காக ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு, நிலங்களுக்கு ஏற்ற பயிர் சாகுபடிக்கு மண்வள அட்டை வழங்கும் திட்டம், விவசாய துறைக்குத் தனி தொலைக்காட்சி அலைவரிசை, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு 33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து விவசாயத்தைப் பயனுள்ள வகையில் மாற்றுவது போன்ற அறிவிப்புகள் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மின் உற்பத்தித் திட்டங்களுக்கு பத்து ஆண்டுகள் வரி விலக்கு, காற்றாலை, சூரிய ஒளி மின்சக்திக் கருவிகளுக்கு வரி குறைப்பு போன்றவற்றால் மின்சார உற்பத்தித் துறை தன்னிறைவு அடையும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நகர்ப்புற வளர்ச்சிக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

25 கோடி ரூபாய் மூலதனத்தில் உருவாகும் தொழிற்சாலைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 விழுக்காடு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதும், தொழில் துறைக்குத் தனி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது. கிராமப்புறங்களில் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதும், இணையதள வசதி அளிப்பதும் கிராமப்புற வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் அளித்தல், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம், பெண்கள் பாதுகாப்பிற்கு மேலாண்மை வாரியம் போன்ற அறிவிப்புகள் பெண்கள் நலனில் மத்திய அரசின் அக்கறையைக் காட்டுகிறது. பார்வையற்றோர் அறிந்து கொள்கின்ற வகையில், ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்துகள் அச்சிடுவது புரட்சிகர அறிவிப்பாகும்.

வங்கிகளில் சேவைகளை மேம்படுத்தத் தன்னாட்சி அளிப்பதும், சேமிப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளதும், மீண்டும் கிசான் விகா பத்திரம் வெளியிடுவதும் வரவேற்கத்தக்கது ஆகும். வருமான வரி உச்சவரம்பு, சேமநல நிதி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குப் பயன் தரும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தனி நிதியமும், பயிற்சி அளிக்க ‘திறன் இந்தியா’ திட்டமும், விளையாட்டுத்துறை மேம்பாட்டுத் திட்டமும் இளைஞர்களுக்கு நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தருகிறது.

சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது சுமைகள் விழக்கூடிய அளவுக்குப் புதிய வரிகள் இல்லாததும், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு இருப்பதும் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்புக் கூறுகள் ஆகும். மொத்தத்தில் இந்தியத் திருநாட்டை வளர்ச்சிக்கான புதிய திசையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வரவேற்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source: Tamizl.com