இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழமுடியாதவொரு சூழ்நிலையிலேயே, பல்வேறு அபாயங்களுக்கு மத்தியிலும் தமிழர்கள் வேறு நாடுகளில் பாதுகாப்பாக வாழ்வதற்காகப் புகலிடம் கோருகிறார்கள் என்று வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

153 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிய படகொன்று ஆஸ்திரேலிய அரசினால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜோ ஜார்விஸ் தயாரித்து வழங்கிய பெட்டகமொன்றிற்கு எழுத்துமூலம் பதிலளித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், இலங்கையில் சமாதானம் நிலவுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளமை குறித்துக் கேள்வியெழுப்பியுள்ளதோடு “யுத்தம் இல்லாத ஒரு சூழ்நிலையை சமாதானமாகக் கருதமுடியாது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”சுமார் 150,000 படைவீரர்கள் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும்போது சமாதானம் தோன்றிவிட்டது போலத்தான் தெரியும். நாட்டின் ஊடகத்தினை அரசு தனது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கும்போது சமாதானம் தோன்றிவிட்டது போலத்தான் தெரியும். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியுடன், நாட்டுமக்கள் மீது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பிரயோகிக்க வழிசெய்யும் 18வது திருத்தச் சட்டம் நடைமுறையிலுள்ளபோது சமாதானம் தோன்றிவிட்டது போலத்தான் தெரியும். இது உண்மையான சமாதானமா? நீங்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். நான் பெருமதிப்புக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பிரதமரின் கருத்துக்களுடன் எவ்வாறு முரண்பட முடியும்,” என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாசூக்காகப் பதிலளித்திருக்கிறார்.

யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவிற்கு வந்திருந்தபோதிலும், 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரொன்றில் கலந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியா, இலங்கை உள்நாட்டில் தொடரும் கடத்தல், காணாமற்போதல், படையினராலும் பொலிசாரினாலும் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் போன்றவற்றை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தது. ஆனாலும், கடந்த இரண்டு வருடங்களாக படகுகள் மூலம் நாட்டிற்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர் மீது அது கடுமையான போக்கினைக் கடைப்பிடித்து வருகிறது.

கடந்தவாரம்கூட ஆஸ்திரேலிய அரசினால் 41 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களிற் பலர் இன்னமும் இலங்கைப் படையினரால் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது படையினர் பாரியளவில் யுத்தக் குற்றங்களையும், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளார்கள் என்ற பரவலாக எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து, இது குறித்த சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தலைமையில் சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

”சண்டையில் ஈடுபட்டுத் தற்போது யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் அதே இராணுவம்தான் தற்போது வடக்கு, கிழக்கில் பாரியளவில் நிலைகொண்டிருக்கிறார்கள். இங்கே சுமார் 150,000 படைவீரர்கள் நிலைகொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவர்கள் மக்களிடமிருந்து சகலத்தையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மக்களின் வளமான வயல் நிலங்களை இவர்கள் கைப்பற்றி தாம் விவசாயம் செய்கிறார்கள், தெற்கிலிருந்து பெருமளவிலானவர்களை இங்கு கூட்டிவந்து மீன்பிடியில் ஈடுபடுத்துகிறார்கள், வியாபாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். இதனால் உள்ளூர் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். மக்களுடைய காணிகளையும், அரச காணிகளையும் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பெண்கள் சமூகம் மிகவும் மோசமாகப் பாதிப்புக்களுக்கும், ஆபத்துகளுக்கும் முகம்கொடுத்து வருகிறார்கள்,” என்று தமிழ் மக்கள் நாளாந்தம் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை ஆஸ்திரேலிய வானொலிக்கு விளக்கியுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

Source: Athavan News