மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பொலிஸாரின் துணையுடன் யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் கடற்படையினரால் காணி அளவிடப்பட்டுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தி, அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு உட்பட கீரிமலைப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 127 ஏக்கர் பரப்பளவான காணியை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் அந்த காணிகளை நிலஅளவைத் திணைக்களத்தினரின் உதவியுடன் அளக்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் திங்கட்கிழமை 14.07 மீண்டும் காணிகளை அளப்பதற்கான முயற்சியை நிலஅளவைத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என்ற தகவல் அறிந்து அந்தப் பகுதி மக்கள் கீரிமலை சோதனைச் சாவடியில் கூடியிருந்தனர். எனினும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு படையினர், நிலஅளவை அதிகாரிகளை காங்கேசன்துறை வீதியூடாக உள்ளே அழைத்து சென்று இரகசியமாக அந்தப்பணியை மேற்கொண்டுள்ளனர்

இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் அங்கு சென்று இராணுவத்துடனும் மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். எனினும் கடற்படையினருக்கான காணியை அளவிடும் முயற்சி கைவிடப்படாது நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான 6300 ஏக்கர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அதில் 127 ஏக்கர் காணியே தற்போது கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேருக்கு சொந்தமான காணிகளும், சமாதி, மயானம் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது. இதேவேளை இராணுவத்தினரின் காணி அபகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ப்பட்டுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kaani
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடர நடவடிக்கை

வலிகாமம் வடக்கு, கீரிமலைப்பகுதியில் கடற்படையினர் பொதுமக்களின் காணிகளை அபகரிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையின் உயர் நீதிமன்றில் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்த வழக்குத் தொடரப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் யாழ்.நகரிலுள்ள யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மாவை, கீரிமலை பகுதியில் பொதுமக்களின் காணிகளைக் கடற்படையினரது தேவைகளுக்காகக் கையகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இதனைத் தடுக்கும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடகவியலாளர் மாநட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மாக்ஸிஸ் லெனினிய கட்சி பிரதிநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

Source: Malarum & Athavannews