சிங்கள அரசு தமிழர் தாயகத்தில் கடந்த 60 வருடங்களாக எத்தகைய அழிவுகளைச் செய்ததோ அதையே இன்றும் செய்துகொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றுவரை தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருக்கின்ற சிங்களப் படையினர் தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு தடையாக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை காரைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் இறுதியில் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசு எதனை செய்து வந்ததோ அதனையே இன்றும் செய்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் இந்தப் படைகள் தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டு இருந்து இவ்வாறான செயல்களை செய்து வருகின்றன. இதனாலேயே நாம் இங்கிருந்து படையினர் வெளியேற வேண்டும் எனக் கூறி வருகின்றோம்.

கடற்படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்ற காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வீரமுத்து கண்ணன் (ரஜனி) இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று கூறியிருக்கின்றார். நாங்கள் இந்த மண்ணிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழமுடியாத நிலை காணப்படுவதாக கூறி போராடிக்கொண்டு இருக்கையில் அரசின் அடிவருடிகளாக செயற்படுகின்ற ஈ.பி.டி.பியினர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

இந்தப் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் ரஜனியின் தாய்க்கோ தமக்கைக்கோ தங்கச்சிக்கோ இவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால் அவர் அந்த பிரச்சனையை அப்படியே விட்டு இருப்பாரா? ஒருவேளை அவர் அப்படி விட்டு இருக்கக்கூடும். ஏனெனில் அவர் தன் இனத்தையே காட்டிக்கொடுக்கும் போது கூட்டிக் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்று கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.