சுங்கவரி செலுத்தவில்லை என்கிற பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டதாக அறிகிறோம். இது வன்மையாக கண்டிக்க தக்கது.

தமிழகத்தில் சுங்கவரி வசூலிப்பதே அயோக்கியத்தனமானது. தோழர்.சீமான் சுங்கவரி செலுத்தாமல் இருந்தாலும் கைதுசெய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எவனுடைய ஊரில், எவன் வரி வசூலிப்பது.

இந்திய தேசிய சாலைகள் எமது விவசாய நிலத்திலும், ஊர்புறத்திலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய சாலைகளுக்கு எதற்கு நாங்கள் வரி கட்டவேண்டும். உனது பன்னாட்டு நிறுவனங்கள் விலைமதிப்பில்லா வாகனங்களுக்கான சந்தைக்காக உருவாக்கிய இந்த சாலைகள் எமது ஊர்களை பிளக்கின்றன. விவசாயநிலத்தினை இரண்டாக்கியது.

ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சராசரியாக 1 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை செய்வது பன்னாட்டு நிறுவனங்கள், பெருமுதலாளிகள். ஒருமுறை திருச்சி சுங்க சாவடியில் பணம் கட்ட முடியாது என்று நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்ற வண்டியை நிறுத்தியபொழுது கடுமையாக நடந்து கொண்டனர். இரண்டுமணி நேரம் சாலையை அடைத்து நின்றிருந்தோம். இதே போல பெரியார் தி.க தோழர்கள் வேலூர் சுங்கசாவடியில் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்தி வெளியேறினார்கள். இதுபோல பல தோழர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது நிகழ்வதை சொல்லி இருக்கிறார்கள்.

நாம் தமிழர் தோழர்கள் சுங்கவரிக்கு உரிய விளக்கம் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?… பல சுங்க சாவடிகள் தமது கால அளவினை மீறியும், குத்தகை நாளினை மீறியும் பணம் வசூலிக்கிறார்கள். சுங்கச்சாவடிகளை அகற்றுவது உழைக்கும் மக்கள் மீது இந்திய தேசம் வரி என்கிற பெயரில் நிகழ்த்தும் சுரண்டலை தடுக்கும். இந்த சுங்கச் சாவடிகளில் நிகழும் வரி வசூல் நமது விலைவாசி ஏற்றத்தினையும், உழைக்கும் மக்கள் தமது உற்பத்தி பொருளை கொண்டு செல்வதில் சுரண்டியும் வளர்கிறது…

சாலை வசதி செய்து தருவது நாட்டின் கடமை. பின் என்ன காரணத்திற்கு எமது வண்டிகளுக்கு சாலைவரி?…

சுங்க வேலையில் 2006இல் இருந்து 123 நபர்களை இந்தியா தென்ம்ணடலத்தில் தேர்ந்தெடுத்தது. இதில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் வெறும் 14 பேர். இதில் எத்தனை தமிழன் இருக்க முடியும் . மீதி அனைவரும் வடமாநிலத்தவர்.. வரி வசூலிப்பது வட இந்திய நிறுவனம், அதற்கான அதிகாரிகளும் வட இந்தியர்கள். என்ன நடக்கிறது இங்கே?

அன்பான தோழர்களே, சீமான் தோழரை கைது செய்வதை கண்டிப்போம். எந்த காரணத்தினைக்கொண்டும் இந்திய அரசின் வன்முறை, சுரண்டல் நம்மை வீழ்த்திவிடக்கூடாது.

சீமானை விடுதலை செய். சுங்கச் சாவடிகளை இழுத்து மூடு.

– மே பதினேழு இயக்கம்.