இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்க எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோதபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் இவ்வாறான ஓர் முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுடன் அமெரிக்கப் பிரஜையான கோதபாய ராஜபக்ஷ எவ்வாறு தொடர்புபட்டிருக்கின்றார் என்பது குறித்து அமெரிக்க பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பிலான நியூயோர்க் சட்டக் கல்லூரியின் பேராசிரியர் ரெயன் குடிமென் விரைவில் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் குற்றச் செயல்களில் ஈடுபட்டரா என விசாரணை நடத்தி, அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை இன நல்லிணக்கத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் துணைச் சபைக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென குறித்த காங்கிரஸ் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குடிமான் ஏற்கனவே ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இராணுவ உதவிகள், தொழில்நுட்ப பரிமாற்றம், சர்வதேச நிதி நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் உதவிகள் ஆகியனவற்றை வரையறுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை ரத்து செய்ததனை அமெரிக்கா பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் தமிழர்களுடன் அமெரிக்காவிற்கு நீண்ட கால தொடர்பு காணப்படுவதாகவும் இதனால் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென குடிமென் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.