எம்.எச் 370 மலேசிய விமானம் காணாமல் போனதன் பின்னர் ஏற்பட்ட பரபரப்புக்கள் அடங்க முன்னரே தொடர்ச்சியாக மற்றுமொரு மலே­சிய விமானம். பல கன­வு­க­ளோடு பய­ணித்த மொத்தம் 298 பேரைச் சுமந்து சென்ற இந்த விமானம் உக்ரைனில் வீழ்ந்து நொறுங்­கி­ அத்­தனை பேரையும் பலியெடுத்­தி­ருக்­கி­றது.

இதற்கு யார் பொறுப்பு? ஏன் இத்­த­கை­ய­தொரு சம்­பவம் நிகழ்ந்தது? என்ற பல கேள்­வி­க­ளுக்கு விடை­தேட புறப்பட்டாலும் மாண்டவர்களை நாம் மீட்டு விடப்போவதில்லை என்­பது மட்டும் உண்மை.

இலங்கை நேரப்­படி கடந்த வியாழக்கிழமை (17) அன்று இரவு 9 மணி­ய­ளவில் அனைத்து ஊட­கங்­க­ளிலும் வெளியா­கி­யி­ருந்த தக­வல்­களின் அடிப்­ப­டையில், மலே­சிய ஏயார் லைன்ஸ் நிறுவ­னத்­திற்குச் சொந்­த­மான போயிங் 777 ரக எம்.எச்.17 பயணிகள் விமானம், கிழக்கு உக்ரைன் பகு­தியில் வைத்து சுட்டு வீழத்தப்பட்டதில் 298 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

மலேசிய விமானம் விழுந்த இடம், கிழக்கு உக்­ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நக­ருக்கு அருகில் உள்­ளது. அந்த பகுதி, கிளர்ச்சியா­ளர்­க­ளுக்கும், உக்ரைன் இரா­ணு­வத்­துக்கும் இடையே மோதல் நடை­பெற்று வரும் முக்கிய பகுதியாகும். மேலும், அப்­ப­குதி ரஷ்­யா­வுக்கு அருகே உள்­ளது. எனவே, ரஷ்ய எல்லைக்குள் நுழை­வ­தற்கு 40 கி.மீ. தூரத்­துக்கு முன்பே இச்சம்­பவம் நடந்­துள்­ளது.

எனவே, அந்த விமா­னத்தை கிழக்கு உக்­ரைனில் உள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்­கள்தான் சுட்டு வீழ்த்­தி­ய­தாக உக்ரைனின் உள்­துறை அமைச்­சக ஆலோ­சகர் தெரி­விக்கிறார். தரை­யி­லி­ருந்து பாய்ந்து சென்று வானி­லுள்ள இலக்கை தாக்கும் ‘பக்’ ரக ஏவு­கணை உத­வியால் இவ் விமா­னத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்­தி­ய­தா­கவும் அவர் இதன்­போது குறிப்­பிட்டார்.

இந்த ‘பக்’ ஏவுகணை நேட்டோ படை­களால் மிகவும் கொடூரமான­தாக வர்­ணிக்­கப்­ப­டு­கின்றது. இது, 22 ஆயிரம் மீற்றர் உயரம் வரை சென்று இலக்கை தாக்கும் திற­னு­டை­யது. 1970 ஆம் ஆண்­டு­களில் ஒருங்­கி­ணைந்த சோவியத் ரஷ்யாவால் இந்த ஏவு­கணை உரு­வாக்­கப்­பட்­டது.

இதன்­பி­றகு பல வகை­க­ளிலும் இந்த ஏவு­கணை உருமாற்றப்பட்டது, செயற்திறன் அதிகரிக்கப்பட்டது. பல நாடுக­ளுக்கும் இந்த வகை ஏவு­க­ணையை ரஷ்யா ஏற்­று­மதி செய்­துள்­ளது. உக்ரைன் பிரி­வி­னை­வா­தி­க­ளி­டமும் இந்த ஏவுகணை உள்­ளதாக உக்ரென் கூறுகின்றது. இந்த ஏவுகணையை பொறுத்­த­வரை மிகத் துல்லியமாக இலக்கை குறி­வைத்து தாக்கும் வல்­ல­மை­மிக்­கது. 

இப்படியான ஏவுகணைகளை ஏதா­வது ஒரு நாட்டு படை­களால் மட்­டுமே இயக்க முடியும். கிளர்ச்­சி­யா­ளர்­களால் அதை செய்ய முடி­யாது என்று தெரி­விக்கப்படுகின்றது. இந்­நி­லையில், உக்ரைன் இரா­ணு­வத்­தி­னரே விமா­னத்தை சுட்டு வீழ்த்தி விட்டு தங்கள் மீது பழி போடு­வ­தாக தங்கள் மீதான குற்­றச்­சாட்டை கிளர்ச்­சி­யா­ளர்கள் மறுத்துள்ளனர்.

உக்­ரைனை ரஷ்­யா­வுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கிளர்ச்­சி­யாளர் படை­களின் தலைவர் அலெக்­சாண்டர் போரோடாய் இது­குறித்து கூறு­கையில், “மலேசிய விமானம் உக்ரைன் எல்­லை­யில்தான் சுட்டு வீழ்த்தப்­பட்­டுள்­ளது. எனவே, உக்ரைன் இரா­ணு­வம்தான் விமானத்தை வீழ்த்­தி­யுள்­ளது என்­பது உறுதி” என்றார்.

ஆசிய கண்­டத்­தி­லி­ருந்து ஐரோப்பா மற்றும் அமெ­ரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்­டு­மாயின், உக்ரைன் வான் எல்லை வழி­யாக பறந்து செல்­வது தூரம் குறைந்த பாதை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. உக்ரைன் கிளர்ச்சியா­ளர்கள் பல்­வேறு உள்­நாட்டு விமானங்களை இப்­ப­கு­தியில் ஏற்­க­னவே சுட்­டு­வீழ்த்தியிருந்ததால், இந்த பாதையை சர்­வ­தேச விமான சேவை நிறு­வ­னங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்­பே­ எச்சரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், ஆபத்து நிறைந்த பாதை என்­பதை அறிந்திருந்தும் 298 உயிர்கள் பலி­யாக கார­ண­மாக இருந்த மலே­சியன் எயார்லைன்ஸ் விமானம் அவ்­வ­ழி­யாக சென்­றது ஏன்? என இந்த விபத்தில் பலி­யா­ன­வர்­களின் உறவினர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த விமானப் போக்­கு­வ­ரத்து பாது­காப்பு துறை பிர­பல பேரா­சி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான நார்மன் ஷேங்க்ஸ், “உக்ரைன் கிளர்ச்­சி­யா­ளர்­களின் ஆதிக்கம் மேலோங்­கி­யுள்ள கிழக்கு உக்ரைன் பகு­திக்கு மேலே உள்ள வான் எல்­லையில் பறப்­பதை தவிர்க்க வேண்டும் என்றே அனைத்து நாடு­க­ளுக்கும் அறி­வு­றுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்­ளது. உலகின் அனைத்து விமான நிறுவனங்களும் எரி­பொருள் மற்றும் நேரத்தை சிக்கனப்படுத்தும் பாதை­களை தேர்ந்­தெ­டுப்­ப­தையே விரும்புகின்­றன. கிழக்கு உக்­ரைனின் வான் வெளியின் மீது பறப்­பது ஆபத்து நிறைந்­தது. அவ்­வ­ழியே பறக்க வேண்டாம் என்று பிரத்­தி­யே­க­மாக எச்­ச­ரித்­தி­ருந்தால் அவ்­வ­ழியே பறப்பதை விமா­னங்கள் தவிர்த்­தி­ருக்கும்.

30 ஆயிரம் அடி­க­ளுக்கு உட்­பட்ட உய­ரத்தில் அந்த விமானம் பறந்த நிலையில் அதன் உருவ அமைப்பை வைத்தே, அது இரா­ணுவ விமானம் அல்ல பய­ணிகள் விமானம் தான் என்பதை கிளர்ச்­சி­யா­ளர்கள் உறு­திப்­ப­டுத்தி இருக்கக்கூடும். பய­ணிகள் விமானம் என்று தெரிந்த பின்­னரும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்­தி­யுள்­ளனர்” என்றார். 

விமானத்தின் கறுப்புப் பெட்­டியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதா­கவும் அது தங்கள் வசம் இருப்­ப­தா­கவும் கிளர்ச்சியா­ளர்கள் அறி­வித்­துள்­ளனர். அந்த கறுப்பு பெட்­டியை ஆராய்ந்தால் விமானம் விபத்துக்குள்­ளா­னதா? ஏவுகணை மூலம் தாக்­கப்­பட்­டதா? என்று தெரி­ய­வரும். எது எவ்­வா­றா­னாலும் இந்த சம்­ப­வத்தில் 3 குழந்­தைகள் உள்ளடங்­க­லாக 280 பய­ணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகள் உட்பட மொத்தம் 298 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

பய­ணி­களில் 154 பேர் நெதர்­லாந்து பிர­ஜைகள். 43 பேர் மலேசியர்கள், அவுஸ்­தி­ரே­லி­யர்கள் 27 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்­த­வர்கள் 12 பேர். பிரித்­தா­னி­யர்கள் 9, ஜேர்­ம­னி­யர்கள் 3, பிலிப்பைன்ஸ் நாட்­ட­வர்கள் 3, கனே­டியர் ஒருவர், 4 பேர் பெல்­ஜி­யத்தைச் சேர்ந்­த­வர்கள் என சர்­வ­தேச ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன.

இதில், பெல்­ஜியம் நாட்டைச் சேர்ந்­த­வர்கள் எவரும் அந்த விமா­னத்தில் பய­ணிக்­க­வில்லை என அந்­நாட்டின் வெளிவிவகா­ரத்­துறை அமைச்சர் தெரி­வித்­துள்ளார். இந்த விமா­னத்தில் பணியாற்­றிய ஊழி­யர்­களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்றும் தெரி­ய­வந்­துள்­ளது. அவ­ரது பெயர், ஏஞ்செலின் பிர­மிளா ராஜேந்­திரன் (வயது 30). விமானப் பணிப்பெண்­ணாக வேண்டும் என்ற கனவு நன­வாகி மலே­சியன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் இணைந்து பணியாற்­றிய நிலையில் அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

இந்த செய்தி கேள்­வி­யுற்­ற­தி­லி­ருந்து, “சிறு வய­தி­லி­ருந்தே விமா­னத்தில் பறக்க வேண்டும் என்­பதை கன­வாகக் கொண்டிருந்த நிலையில், அந்த கனவே அவரை கருகச் செய்து விட்­டதே” என அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும், உறவுகளும் கதறி அழு­கி­றார்கள்.

இது­போன்று, பலரின் கன­வு­களும் இன்று கரு­கி­போய்­விட்­டன. இத­னி­டையே, மேற்­படி விமா­னத்தில் பய­ணித்த கோர்பேன் என்ற இளை­ஞரின் பேஸ்புக் பதிவு பலரின் மன­தையும் உருக்கியுள்­ளது.

தான் பய­ணிக்கும் விமானம் விபத்­துக்­குள்­ளாகப் போகி­றது என்பதை அறி­யா­ம­லேயே, விமானம் புறப்பட சற்று முன்னர் அந்த விமா­னத்தை புகைப்­ப­ட­மெ­டுத்து அதில், “இந்த விமானம் கடத்­தப்­பட்டால் இது தான் அதன் உண்மை­யான புகைப்­படம்” என நகைச்­சுவை உணர்­வுடன் பேஸ்­புக்கில் கருத்தை பகிர்ந்திருந்தார்.