பளையில் 50 ஏக்கர் காணிஅளவீடு மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்! July 22, 2014 News யாழ்ப்பாணம் பளை எழுதுமட்டுவாழ் பகுதியில் படையினரின் தேவைக்காக மக்களக்கு சொந்தமான 50 ஏக்கர் காணியை அளப்பதற்காக சென்ற நில அளவையாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் உட்பட அவரது கட்சி உறுப்பினர்களுடன் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உட்பட பல அரசியற் கட்சி உறுப்பினர்களுடன் பொது மக்களும் கலந்துகொண்டனர். ஏ9 வீதி ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் படையினரின் 52 டிவிசன் ஆவது படைத் தலைமையகம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்ககாக, காணிகளை அளக்க வந்த அதிகாரிகள் உரிமையாளரின் எதிர்ப்பால் திரும்பிச்சென்றனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான 53 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் தவிர்ந்த காணியை படையினர் சுவீகரித்து 52 ஆவது படைத் தலைமையகத்தை அதில் நிரந்தரமாக நிறுவியுள்ளனர். இந்த காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அந்த காணியை அளப்பதற்கு நில அளவையாளர்கள் அங்கு சென்றனர். இதன்போது காணி உரிமையாளரும் பொதுமக்களும் அங்கு கூடி தமது எதிர்ப்பபை வெளிப்படுத்தினர். சம்பவ இடத்துக்கு சென்ற கொடிகாமம் காவல்துறையினர் அதிகாரி, காணி உரிமையாளரை, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தார். இந்த நிலையில் காணி அளக்கும் பணிகளைக் கைவிட்டு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வெளியேறினர்.