மகிந்த ராஜபக்சவுக்கு செங்களம் விரிப்பதை சர்வதேச நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் – யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை July 23, 2014 News குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு செங்களம் விரிப்பதை சர்வதேச நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை சர்வதேச நாடுகளைக் கோரியுள்ளது. மேலும், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்க பிரித்தானியாவுக்கு வருகின்ற போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு கலந்துகொள்ளுமாறும் மேற்படி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகத்தில் விடுதலைக்காக போராடிய தமிழ் மக்களைக் கூண்டோடு அழிப்பதில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும் படைகளும் மிகக் கோரமாகச் செயற்பட்டன. இந்த வெறியர்களின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் தமிழரின் போராட்டக் கட்டமைப்புக்களும் அழித்தொழிக்கப்பட்டன. சர்வதேச நாடுகளிடம் பெற்ற உதவிகள் மூலமே தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நடத்தப்பட்டது. இதில் பிரித்தானியா அரசாங்கமும் பெருளவான நவீன ஆயுதங்களைக் கொடுத்துதவிய விபரங்கள் அனைத்தும் இப்போது அம்பலமாகியுள்ளன. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இன யுத்தம் ஆரம்பமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பிரித்தானியா தேசம். சிறிலங்கா சுதந்திரமடைந்த காலப்பகுதியில் பிரித்தானியா தேசம் தமிழ் மக்களைப் புறக்கணித்து சிங்களவர்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தமையாலேயே இன்று தமிழ் மக்கள் இரண்டாம்தரப் பிரஜையாக இருந்து சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்படவேண்டியுள்ளது. இதனை நன்கு உணர்ந்த பின்னரும் பிரித்தானியா தனது நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுக்கு சிறிலங்கா ஜனாதிபதியை அழைக்கின்றது. அதுவும் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜீலை தினத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது. இது தமிழ் மக்களை மேலும் மேலும் புண்படுத்துகின்ற செயலாகும். பிரித்தானியாவின் இந்தச் செயற்பாட்டுக்கு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவையினராகிய நாங்கள் எங்கள் கவலைகளை வெளிப்படுத்துகின்றோம். மேலும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய மகிந்தவுக்கும் அவரது பரிவாரத்தினருக்கும் செங்கம்பளம் விரிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு நாங்கள் சர்வதேச நாடுகளைக் கோருகின்றோம். ஒரு பக்கம் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை என்று கூறிக்கொண்டு மறுபக்கம் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு செங்கம்பளம் விரிப்பது முற்றிலும் முரண்பாடான செயற்பாடாகும். இந்தச் செயற்பாடானது மகிந்தவையும் அவரது பரிவாரத்தினரையும் மேலும் மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான அழிவுச் செயற்பாட்டைச் செய்யவே தூண்டும். இதேவேளை, நாளை புதன்கிழமை பிரித்தானியா வருகின்ற மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பிரித்தானியா தமிழ் மக்கள் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறும் நாங்கள் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம். இதன் மூலமே எமது மக்களின் பிரச்சினைகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் நாங்கள் நம்புகின்றோம். தமிழ் மக்கள் பேரவை யாழ்.மாவட்டம் 21.07.2014