ஈழம் முழுதும் அவர்களின் வேட்டைக்காடு… – ச.ச.முத்து July 25, 2014 News வேட்டையாட வேண்டும் என்று தினவு எடுத்தவுடன் துப்பாக்கியை எடுத்து தோளில் மாட்டிச் சென்று தேடி வேட்டையாட ஒரு காடு இருப்பதுபோல, தமிழீழம் முழுதும் இப்போது சிங்களப் பேரினவாத படைகளினதும் அவர்களின் துணையோடு குடியேறியவர்களதும் வேட்டைக்காடுதான். யாரும் எந்த நேரத்திலும் வேட்டையாடப்படலாம் என்பதுதான் யதார்த்தம். பண்டைய காலங்களில் அடிமைகளின் குடியிருப்புகளில் எந்த நேரமும் புகுந்து நினைத்த பெண்ணை தூக்கிச் சென்றுவிடும் செயலைப் போன்றே எங்கள் தாயகத்திலும் நடந்தேறுகின்றது. போனவாரம் காரைநகரில் 11 வயது 9 வயது சிறுமிகளுக்கு நடந்திருப்பது… கடற்படை மிருகங்களால் கொடூரமாக சிதைக்கப்பட்ட அந்த சின்னஞ் சிறுமிகளுக்கான நீதியை யார் தருவது..? சிங்கள தேசத்தின் அரசியலமைப்பின் கீழான எந்தவொரு சட்டமும் அதற்கான நீதியை ஒருபோதும் தந்துவிடாது. தமிழினத்தின் மீது பாலியல் வல்லுறவையும் கொலைவெறியையும் கூடுதாலாகக் கட்டவிழ்த்துவிடுபவர்களே சிங்கள இனத்தின் வழிபாட்டுக்கு உரியவர்கள் என்ற நிலைமை இருக்கும்போது எந்த நீதி கிடைக்கும்? இதோ… சிறுமியால் அடையாளம் காணப்படவில்லை என்று கூறி கடற்படைச் சிப்பாய்கள் சுதந்திரமாக வெளியே வந்துவிட்டனர். இதற்கிடையில் சிறுமியின் வீட்டின்மீதும், பெற்றோர் மீதும் கடற்படை பகிரங்கமான மிரட்டல்களை தொடர்ந்து விடுத்த வண்ணமே இருக்கின்றனர் என்ற சேதி வேறு. பாடசாலைக்குச் சென்ற சிறுமிகளை மிரட்டி கொடூரங்களை நிகழ்த்திவிட்டு இப்போது கொலை மிரட்டல்கூட வீட்டுக்கு விடுகிறார்கள் என்றால் இந்த சிங்களப் பேரினவாதமும், அதன் படைமிருகங்களும் எந்தவொரு சட்ட அமைப்பையும் அது அவர்களின் சிறீலங்காச் சட்டமாகட்டும், உலக மனித உரிமை சட்டமாகட்டும் எதையுமே பொருட்படுத்தவில்லை என்பதையே காட்டுகின்றது. வழமைபோல அரசியல்வாதிகள் அந்தக் குடிசை வீடுகளுக்கு விஜயம் செய்து விட்டு ஒப்புக்கு ஒரு அறிக்கையை விட்டுவிட்டு ஓய்ந்தே போனார்கள்… அவர்களின் பயமெல்லாம் எங்கே 6வது திருத்த சட்டத்தை மீறி விடுவோமோ என்பதில்தான்… சுதந்திர இறைமையுள்ள சிங்கள தேசத்தின் படைகளை ஏகமாக கண்டித்தால் இறையாண்மைக்கே கேடு என்று சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற பயம்.. முற்போக்குக் குரல்கள் எதுவுமே இதற்கு எதிராக சிங்களத்திலிருந்தோ முஸ்லீம்களிடமிருந்தோ இன்னமும் எழவில்லை… தூக்கம் கலையட்டும்… பொறுத்திருப்போம். முஸ்லீம்களுக்கு அளுத்கமவில் சிங்களம் அடித்தபோது தமிழர்களை நோக்கி இதனை கண்டிக்கவில்லையா என்று இதற்கு எதிராக இன்னமும் போராட்டம் எதுவுமே ஏன் செய்யவில்லை என்று கேள்விக்கணை தொடுத்த சர்வதேச மனச்சாட்சி மொன்ணைகள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்..? காரைநகரின் ஓர் ஓலைக்குடிசையின் சிறுமிக்கு நடந்ததைவிட காசாவில் கொட்டும் குண்டுகளை கதைத்தால்தானே உலக பொதுவுடமைவாதி நட்சத்திரம் மார்புக்கு விருதாகும்… டில்லியில் நள்ளிரவில் ஓடும் பேருந்துக்குள் மிகக் கேவலமான மானுடமிருகங்களால் ஒரு பெண் சிதைக்கப்பட்டபொழுது உடனே ஓடிவந்து குரல்கொடுத்த பான் கீ மூன் இத்தனை நாட்களாக இன்னும் மௌனம் காத்துவருகிறார். முள்ளிவாய்க்காலில் இலட்சம்பேர் இனப்படுகொலைக்கு உள்ளானபோது ஓடி வராத இவர், இப்போது பாலஸ்தீன காசாவில் 400 பேர் செத்தவுடன் உடனே விதிர்விதிர்த்து இஸ்ரேல் நகரங்களான டெல் அவிவ் க்கும், ஜெரூசலேமுக்கும் ஓடுவதைப் பார்த்தால் தெரியவில்லையா எண்ணெய்ப் பூமிக்கும் பனை மர மண்ணுக்கும் உள்ள பாகுபாடு…? தமிழ்நாட்டில் இருந்தபடியே காஷ்மீரத்தில் என்ன நடக்கிறது, கந்தகாரில் என்ன நடக்கிறது என்று தூரநோக்கி வைத்துப் பார்த்து எல்லா மீறல்களையும் எழுதிப் பேசி கண்டிக்கும் மார்க்சிஸ்ட்டுகள் யார் கண்ணிலும் காரைநகர் கொடூரம் படவில்லை போலும். மனித உரிமை ஆணையம்… அதற்கென்ன… அது சாகவாசமாக காத்திருக்கிறது… அடுத்த கூட்டத்தொடரில் யாராவது ஒரு பேர்வழி இந்த பிரச்சினையை எழுத்துவடிவில் கொண்டு வரட்டும் என்று. அதற்கு பிறகும் என்ன வாழுமாம். சிங்களத்துக்கு ஒரு வருட அவகாசம். கடற்படைக்கு இன்னொரு வருட கவன இருத்தல். அதற்கு பிறகு இது மத ரீதியான வன்மமா அல்லது சிறுபான்மை மீதான சீற்றமா என்ற நொடித்துப்போன தீர்மானம்தானே வரும். இப்படியாக யாராலுமே கேட்க நாதியற்றதாக இந்த இனம் போய்விட்டது. ஆனால் நாம் என்ன செய்யபோகின்றோம். இதிலே சம்பந்தப்பட்ட கடற்படை மிருகத்தை அழைத்தே விளையாட்டு போட்டிகளையும் பட்டம்விடும் போட்டிகளையும் நடாத்தி இன்னும் வா வேட்டைக்கு என்று கதவு திறந்து வைத்திருப்போம். அல்லது, வெறுமனே கட்டடங்களை ஊருக்கு ஊர் எழுப்புவதற்கு இங்கிருந்து பணம் அனுப்பி என்னூரின் கல்யாண மண்டபம் இத்தனை அடி நீளம், அகலம் என்று பெருமை பேசிக் கொண்டிருப்போம். அல்லது, ஒரு இனத்தின் வாழ்வு சகஜ நிலைக்கு வருவதற்கு முன்னமேயே கட்டமைப்புகளை மட்டுமே பெரிதாக எழுப்பி அதற்குள்ளாக அங்கு பாலும் தேனும் ஓடுவதாக இங்கிருந்து ரீல் விடுவோம். ஒப்புக்கு ஏதாவது ஒரு நாள் அடையாளப் போராட்டம் ஒன்றை நடாத்தி நாமும் போராடினோம் என்ற வரலாற்று பதிவை செய்துவிட்டு ஓய்ந்து போய்விடுவோம். இதுதானே செய்யப்போகின்றோம் நாம்..? இதனையே செய்துகொண்டிருந்தால் ஒருநாள்…. ஒருநாள்… எங்கள் கதவுகளும் அந்த வல்லூறுகளால் தட்டப்படும்… எங்கள் உறவுகளின் கதவுகளும் ஒருநாளில் தட்டப்படும். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவருமே சிந்திக்கவேண்டும். மிருகங்களை தடுக்காதுவிட்டால் வேட்டைகள்தான் தொடரும். நன்றி: ஈழமுரசு