ஊடகவியலாளர் விவகாரம் சிறிலங்கா அரசுக்கு சர்வதேச அழுத்தம். July 26, 2014 News ஓமந்தை சோதனைச் சாவடியில் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தில் சிறிலங்கா படையினன் ஒருவன் கஞ்சாப் பொதியை வைத்ததை ஊடகவியலாளர்கள் நேரடியாகவே கண்ட நிலையில் இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய வழமைபோன்று அதனை அடியோடு மறுத்திருக்கின்றார். ஊடகவியலாளர்கள் படையினராலும் காவல்துறையினராலும் மிக மோசமாக நடத்தப்பட்ட செய்தி காட்டுத் தீ போன்று உலகெங்கும் பரவிய நிலையில் பல்வேறு நாடுகளின் தூதரங்களும் ஊடக அமைப்புகளும் இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றன. ஊடகவியலாளர்கள் ஏன் இவ்வாறு நடத்தப்பட்டனர் என்று அவர்கள் விசாரிக்கின்ற செயலானது படைத்தலைமைக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை அவசரமாக ஊடக மாநாடொன்றை ஏற்பாடு செய்த படைத்தலைமை இந்த விடயங்களை அடியோடு மறுத்திருக்கின்றது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறையினரை நடுத்தெருவில் வைத்து அடித்து, கையடக்கத் தொலைபேசிகள், ஊடக அடையாள அட்டைகள் என்பவற்றைப் பறித்து, தகாத வார்த்தைகளால் ஏசி அவர்களைக் கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைக்கு சிறிலங்கா படையினரே முழுக் காரணமாக இருந்தனர். இதனை அத்தனை ஊடகவியலாளர்களும் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆனால், தாங்கள் ஊடகவியலாளர்களைத் துன்புறுத்தவில்லையென்றும் அவர்களை மோசமாக நடத்தவில்லையென்றும் படை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்ற தொனிப்பொருளில் படைப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் குழுவுக்கு படையினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை. ஓமந்தை சோதனை சாவடியில், காவல்துறையினரும் படையினரும் இணைந்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், வானொன்றில் பெருந்தொகையான ஹெரோயின் கடத்தப்படுவதாக ஓமந்தையிலுள்ள படையினருக்கு நேற்றிரவு 9 மணிக்கும் 9.15 க்கும் இடைப்பட்ட நேரத்தில் தகவலொன்று கிடைத்துள்ளது. பேருந்தில் வந்த ஒருவரினாலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட படையினரும் காவல்துறையினரும் அந்த பேருந்துக்கு பின்னால் வந்துகொண்டிருந்த சகல வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர். 10 நிமிடங்களுக்கு பின்னர் வந்த வானொன்றை சோதனைசெய்தபோது அந்த வானில், சாரதி ஆசனத்திற்கு கீழிருந்த சிகரெட் பெட்டிக்குள் சிறிய தொகை கஞ்சாவை காவல்துறையினரால் மீட்டுள்ளனர். அதனையடுத்து வாகனத்தின் சாரதியை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை காவல்துறையினர் எடுத்துள்ளனர். ஏனைய ஏழு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையின் போதே அவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. வானில் இருந்தவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரிந்துகொண்டு படையினர் இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும். காவல்துறையினரின் விசாரணைக்கு படையினர் இலகு படுத்தி கொடுத்துள்ளனர். அந்த ஊடகவியலாளர் மற்றொரு வாகனத்தில் இன்று அதிகாலையே கொழும்புக்கு திரும்பியுள்ளனர் என்றார். அந்த கஞ்சாவையை படையினரே போட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றரே என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காவல்துறையினரரே கஞ்சாவை மீட்டுள்ளனர். படையின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை படையினர் முற்றாக மறுக்கின்றது என்றார். இதேவேளை, படையினரின் இந்த மழுப்பல் பதிலை குறித்த ஊடகவியலாளர் குழாம் முற்றாக மறுத்துள்ளது. படையினன் ஒருவரே தங்கள் வாகனத்தில் கஞ்சா பொதியை வைத்ததை தாங்கள் நேரில் கண்டதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா படையினர் தாங்கள் செய்த பிழைகளை என்றுமே ஏற்றுக்கொண்டது இல்லை. இதேபோன்றுதான் ஊடகவியலாளர்களை முட்டாள்களாக்க நினைக்கிறது. நாங்கள் ஊடகவியலாளர்கள். மக்களுக்காக பணியாற்றுபவர்கள். எங்களுக்கு பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. படையினர்தான் கஞ்சா பொதியை வைத்தனர். இது தொடர்பாக நாங்கள் ஓமந்தை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளோம் என்றும் மேற்படி ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.