திருவாளர் பிரவீன் காந்தி என்ன நினைத்து இப்படிப் பட்ட காட்சிகளை வைத்தார் என்பது தெரியவில்லை. இதில் தோழர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி வாங்கினேன் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், அப்படி வாங்கியிருக்கலாம் ஆனால் அவருக்கு இத்தகைய காட்சிகள் இருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. இன்னொரு பேட்டியில் இலங்கை தூதரகத்திடம் அனுமதி வாங்கினேன் என்கிறார் அதை தொடர்பு கொண்டு கேட்டால் கண் துடைப்புக்காக என்கிறார்.. இந்த அரசியல் பெரும் அரசியல் இதை கடைசியில் பார்க்கலாம்…

முதலில் பாலச்சந்திரனை கைது செய்யும் பொழுது ஈழ இராணுவ உடையில் இருப்பது போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச அரங்கில் தமிழ் சமூகம் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது. சிங்கள இனவாத அரசு பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று சொல்லி வருகிறது. அதையும் தாண்டி இங்கு சிங்கள இனவாத அரசுக்கு உதவும் வகையில் பாலச்சந்திரனை ஒரு புலிகள் இராணுவத்தின் போராளியாகவும் சித்தரித்து உள்ளார். இதைத் தான் சுப்பிரமணியன் சுவாமி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்து மாணவர் போராட்டம் நடந்த பொழுது சொன்னான் “பாலச்சந்திரனும் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளி” அவன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை புலிகள் இயக்க உறுப்பினர் என்று. இனி இனவாத சிங்கள அரசு சொல்லும் கைது செய்து வைத்திருந்த ஒரு புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று அடுத்தக்கட்ட புளுகுமூட்டையை அவிழ்த்துவிட வழிவகை செய்கிறீரார் போல் தெரிகிறது. இல்லை சிங்கள தூதரகத்தில் இவர் சென்று கதை சொன்ன பொழுது இப்படி காட்சி அமையுங்கள் எங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லி அதன் படி செய்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

இது வரை பாலச்சந்திரன் படங்கள் பல இணையத்தில் இருக்கின்றன ஆனால் அதில் எதாவது ஒரு படத்திலாவது அவன் தமிழீழ தேசிய இராணுவத்தின் உடையுடன் இருப்பதை ஆதாரமாக காட்ட முடியுமா? ஒரு இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ ஏன் எந்த ஒரு சீருடை பணியில் இருக்கும் ஒருவரின் குழந்தை தனது தந்தை தாய் போல் ஆடை அணிந்துகொள்ள விரும்புவது இயற்கை அதைப் போன்று நீங்கள் காட்சியை வடிவமைத்தது போல் தெரியவில்லை, சிங்கள பேரினவாத அரசுக்கு மிகவும் உதவிகரமாக கை கொடுப்பது போல் சிறுவர் போராளிகள் என்ற குற்றச்சாட்டை மறுபடியும் நிறுவ உதவுவது போலவே உங்கள் காட்சி அமைப்புகள் உள்ளன. அதுவும் பல சிறுவர்களின் நடுவே அனைவரும் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற உங்களது காட்சி அமைப்பு.

மேலும் 2009ம் ஆண்டு கடைசியாக தமிழீழ தேசிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈழ தேசியத்தில் இருந்து வெளியேறிய அமைப்பு ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பு UNICEF. இந்த அமைப்புடன் இணைந்து புலிகள் பல உடன்பாடுகளை செய்து கொண்டு சிறுவர்களின் மறுவாழ்வுக்காகவும், மற்றும் அவர்களின் படிப்பு முதற்கொண்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்த பல காரியங்கள் இருக்கின்றன. ஏன் செஞ்சோலை, காந்தரூபன் போன்ற சிறு குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை. ஏன் செஞ்சோலை படுகொலைகளும் தமிழ் சமூகத்தின் நினைவில் இருந்து அகற்ற விரும்புகிற நோக்கத்தில்இங்கு திருவாளர். ப்ரவீன் காந்தி திரும்பவும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு உதவ தனது காட்சி அமைப்புகளில் மிகவும் மெனக்கெட்டு நாம் எல்லாம் பெருமை கொள்வது போல் இருக்க செய்து, அதாவது வீர வசனங்களையும் வீரதீர செயல்கள் கயிறு ஏறுவது, மேலிருந்து குதிப்பது என்று பல செயல்களை நம் முன் நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் வீரத்தை ரசிக்கும் நேரத்தில் சிறுவர் போராளிகள் என்ற இல்லாத கட்டமைப்பை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முயல்வது போலவே தெரிகிறது.

மேலும் தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் அன்பு பிள்ளை பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. இவரது விளம்பரப்படத்தில், ஒரு வேளை முழு படத்தில் எங்காவது வரலாம் ஆனால் அதை ஒரு சிறு துளியை இவரது ட்ரைலரிலும் காட்டியிருக்கலாம் ட்ரைலர் முழுவதுமே ஒன்று சீருடையில் இருப்பது போலவும் இல்லாவிடில் கடைசியில் பாலச்சந்திரன் இறந்த உடலில் இருக்கும் உடையுடன் பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் இந்த இரண்டு உடைகளை மட்டுமே அணிந்திருந்தாக மட்டுமே காட்டி இருக்கிறார்.

ஒரு படம் அதுவும் நடந்த சம்பவத்தை ஒட்டி சித்தரிக்கப்படும் பொழுது அதன் கூறுகள் சிறிதாவது நடந்த சம்பவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமையவேண்டும். அதைவிடுத்து சித்தரிப்பு என்ற பெயரில் அதுவும் நமக்கு ஆதரவாக என்ற நிலையில் இருந்தால் கூட அது தவறானதாகவே முடியும். மேலும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் சர்வதேச நாடுகளின் முன்பு நாம் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வு பாலச்சந்திரனின் மரணம் இதை ஒட்டிய கதையை பின்ணனியாக வைத்து ஒருபடம் எடுக்கப்படும் பொழுது பாலச்சந்திரனின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய இந்தியாவை, நாம் விரும்புகிறோம் என்று தனது படத்தின் இடைச்சொறுகலாக வைத்துவிட்டு பிராபகரன் ஈழத்திற்காக இந்தியா பேச வேண்டும் என்று என்றோ விரும்பியதை இன்று கோடிட்டு காட்டுகிறார். அதே போல் இந்தியாவில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்த பொழுது சென்னை பெசண்ட் நகரில் அனிதா பிரதாப் அவர்கள் எடுத்த பேட்டியில் இன்று பயிற்சி கொடுக்கும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும் என்று சொன்னதையோ அதன்பிறகு இந்திய அமைதிப் படையுடன் சண்டையிட்டதையோ அவருடன் பேசிய தோழர்களிடம் எடுத்துக்காட்டி பேசியதாக தெரியவில்லை..

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தின் ஒரு படலை எழுதியவர், இந்த படத்தை வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் தயாரித்த பச்சை முத்து ஈழ விடுதலையை ஒரே ஒருவர் தான் கேட்டார் அவருக்காக 1,50,000 லடசம் பேர் செத்தார்கள் என்று 2014 தேர்தல் நேரத்தில் பத்திரிக்கை பேட்டியில் சொன்னார். இதே பாரி வேந்தரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன தமிழர் மீட்சிக்காக கட்சி நட்த்துகிறேன் என்று சொல்கிறார் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை தமிழனும் வந்து இவர் கட்சி ஆரம்பிக்க தவம் இருந்தானா என்ன என்று.. இவர் தூக்கி பிடிக்கும் இந்திய தேசிய விடுதலைக்காக இந்தியாவில் இருக்கும் அனைவரும் போராடி சிறை சென்றானா என்ன என்று எல்லாம்.. ஆனால் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை கொச்சைப் படுத்தி பேசிய அதுவும் தேசியத்தலைவரை சர்வதேச நாடுகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று வைத்த குற்றச்சாட்டை வழிமொழியும் இந்த பச்சைமுத்து தயாரிக்கும் படம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப நாம் என்ன முட்டாளா…

நன்றி: குமரிக்கண்டம்

பச்சைமுத்துவின் ஊடக பேட்டி… ஈழத்தைப் பற்றி…

http://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk