தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரக் கூடாது என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை எவர் மேற்கொண்டாலும் உண்மைகள் ஒருபோதும் மறைக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஓமந்தை சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை (25) இரவு தமிழ் ஊடகவியலாளர்கள் 07 பேரை படையினர் தடுத்து வைத்தமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் மேலும் குறிப்பிடுகையில்,

´கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்படவிருந்த ‘டிஜிற்றல் ஜேர்னலிசம்’ என்ற ஊடக பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காக  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற 07 பேர் கொண்ட ஊடகவியலாளர்கள் குழு ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடியில் நிறுத்திய படையினர் வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது இராணுவ வீரர் ஒருவர் சிகரட் பெட்டியில் வைக்கப்பட்ட கஞ்சாவினை வாகனத்தினுள் வைத்ததுடம், கடமையில் இருந்த பொலிஸார் அதனை மீட்டுள்ளனர். படையினர் அவ்விடத்தில் அரங்கேற்றிய நாடகத்தை ஊடகவியலாளர்கள் நன்கு அவதானித்துள்ளனர்.

ஊடகவிலாளர்களை அவ்விடத்தில் கைது செய்ய முற்பட்டதோடு ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் வாகனத்தின் சாரதி தடுத்து வைக்கப்பட்டார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையிலே கொழும்பு நோக்கி கற்கை நெறிக்காக சென்ற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் பூச்சியமாகவே காணப்படுகின்றது.
யுத்த காலத்தில் இல்லாத பிரச்சினைகள் தற்போது ஊடகவியலாளர்கள்களுக்கு தோன்றியுள்ளது.

தற்போது வடக்கில் இருந்து உண்மையை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றனர். தற்போது கஞ்சா போதைப் பொருளை வைத்து அவர்களை கைது செய்து பயணத்தை தடுக்க முற்படுகின்றனர்.

அண்மையில் கூட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு (ரி.ஐ.டி) இரண்டாவது தடவையாக அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதுபோன்று தொடர்ச்சியாக பல ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அரச படைகளினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரக்கூடாது என்பதே அரசின் இன்றைய முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களாக இருக்கின்றது. இதற்காகவே இன்று ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமது பலத்தை அரசு காட்ட முற்படுகின்றது.

எனவே ஊடகங்கள மீதும் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நாட்டின் ஜனநாயக குரலாக செயற்படும் ஊடகக் குரலை அடக்க முற்படுபவர்களுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுக்கும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.