தமிழீழத்துக்கான நட்பு நாடுகளை உருவாக்கும் பணியில் அனைத்துலக மக்கள் அவை. July 27, 2014 News 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பின் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு அரசு இல்லையேல் , தமிழனுக்கு எதும் இல்லை என்ற நிலை இலங்கை தீவில் உருவாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையை தனி மனித உரிமைபிரச்சனையாகவும் , மனிதவுரிமை பிரச்சனையாகவும் சுருக்கிவிடும் முயற்சியில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் சர்வதேசம் பயணிக்கின்றது . ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத்துக்கு வெறுமனே புனர்வாழ்வும் , பொருளாதார அபிவிருத்தியையும் சிங்கள பேரினவாத அரசோ அல்லது சர்வதேச நாடுகளோ பேசிப் பயனல்ல , மாறாக ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தாமே நிர்ணயிக்கும் ஒரு தீர்வைப் பற்றியே சர்வதேசம் பேச வேண்டும் என்பதுக்கு அமைய தமிழீழத்தை அடையச் செல்லும் வழியில் ஒரு படியாக அதுக்கான வலுச்சேர்ப்பு நகர்வாக நட்பு நாடுகளை உருவாகும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கடந்த வருடங்களாக தனது அரசியில் நகர்வுகளை செய்துவருகின்றது . அந்தவகையில் கடந்த நான்கு நாட்களாக மொரிசியஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் செயலாளர் திரு .திருச்சோதி அவர்கள் மொரிசியஸ் நாட்டின் பிரதமர், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச அறிஞர்கள் ,முன்நிலையில் “ஈழத்தமிழர்கள் தேசிய இருப்பும் , தேசிய ஒடுக்குமுறையும் “எனும் தலைப்பில் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இன அழிப்பை எடுத்துரைத்தது அனைவரையும் கவர்ந்தது . அத்தோடு மொரிசியஸ் நாட்டின் பிரதமரோடும் , எதிர்க்கட்சித் தலைவரோடும் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் , தமிழ் அமைப்புகளோடும் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார் . மொரிசியஸ் நாட்டில் தமிழ்க் கோயில் கூட்டமைப்பும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையும் இணைந்து செய்த முன்னைய மாநாட்டின் தொடர்ச்சியாலும் அரசியல் நகர்வாலும் சிறிலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மொரிசியஸ் புறக்கணித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை