தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நன்கு திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள அரசும் படைகளும் இன்று தமிழர் பிரதேசத்தில் தமது நிலையான ஆக்கிரமிப்புக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக தமிழர் பிரதேசத்திலுள்ள பெருமளவான நிலம் சிறீலங்காவின் படைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலுள்ள குறிப்பிடத்தக்களவு நிலம் படையினரின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து படையினரை எப்படி வெளியேற்றுவது என்று சிந்திப்பதற்கு இடையில் அடுத்த இடம் சுவீகரிக்கப்படுகின்றது. தமிழர் தாயகத்தில் இந்த நிலைமை நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வலிகாமம் வடக்கில் பெருமளவு நிலத்தை ஆக்கிரமித்துள்ள படையினரும் கடற்படையினரும் அந்த இடங்களுக்கு அண்மையாக உள்ள பொதுமக்களின் குடியிருப்பு நிலங்களையும் தற்போது ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள அவர்களின் வீடுகளைக் கூட சென்று பார்வையிட அனுமதி மறுத்திருக்கின்ற படையினர், அந்த இடங்களை அளந்து எல்லையிடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் காணிகளை எல்லையிடுகின்ற படையினரின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான குறைந்தளவு முயற்சிகளும் கைகூடாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்.குடாநாட்டில் வலி.வடக்கில் மட்டுமன்றி வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் போன்ற அனைத்து வலயங்களிலும் படையினருக்கு ஏற்றால் போன்று இருக்கின்ற நிலங்களை படையினர் தமது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கடந்த 1996 ஆம் ஆண்டு சிறீலங்கா படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர் இங்கு முகாம் அமைத்திருந்த நிலப்பகுதிகளுக்கு மேலதிகமாக பல புதிய நிலங்களை படையினர் தற்போது சுவீகரித்துள்ளனர். இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ள இடங்களில் புதிய மினி முகாம்கள் தொடக்கம் பாரிய முகாம்கள் வரை கட்டப்பட்டு வருகின்றன. அனைத்தும் நிலையான முகாம்களாகவே அமைக்கப்படுகின்றன. சிறீலங்கா படையினரின் பெரும் தொகையானவர்களை வடக்கிலேயே தங்க வைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்காகவே இந்த நிலம் சுவீகரிக்கப்படுகின்றது.

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் குடும்பத்தினரையும் வடக்கிலேயே குடியிருத்துவதற்குரிய நடவடிக்கைகளே சிறீலங்கா அரசின் பிந்திய நடவடிக்கைகளாக இருக்கின்றன. யுத்தம் நீங்கிய நிலையில் படையினரைத் தொடர்ந்தும் வடக்கில் பிரித்து வைத்திருக்கின்ற போது படையினர் குடும்பத்தினரைத் தேடி ஒளித்து ஓடுகின்ற செயற்பாடுகள் அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. படையினர் மட்டுமன்றி சிறிலங்கா காவல்துறையினரும் இவ்வாறே ஒளித்து ஓடுகின்றனர். இந்த நிலையில், கல்வியறிவில் குறைந்த அப்பாவிப் படையினரின் குடும்பத்தினரை வடக்கில் குடியேற்றுவதன் மூலம், நில ஆக்கிரமிப்புச் செய்வதற்கும் வடக்கு தனியே தமிழர்களின் நிலம் இல்லையென்று கூறுவதற்கும் வாய்ப்பாக அமையும் என்று அரசு கருதுகின்றது. ஒரு கல்லில் இரண்டு, மூன்று மாங்காய்களைப் பறிப்பதற்கான முயற்சியாக இது இருக்கும் என்றும் சிங்கள அரசு கருதுகின்றது. இதற்காகவே தற்போது படை முகாம்களுக்கு அண்மையிலுள்ள பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.

வடக்கிலுள்ள மாவட்டச் செயலகங்களில் காணி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் காணிகள் தொடர்பான உரித்துக்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. படையினர் தாங்கள் அடையாளப்படுத்துகின்ற காணிகளையும் காணி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மூலமாக தங்களுக்கு பெற்றுக்கொள்கின்றனர் என்றும் அதன் பின்னரே அளவீடுகள் இடம்பெறுகின்றன என்றும் உண்மையான தகவல்கள் மூலமாக தெரியவருகின்றது. ஆனால், தொடர்புடைய மேற்படி அதிகாரிகள் இது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதில்லை.

மக்கள் தங்களுக்கு துரோகிப் பட்டம் சூட்டுவார்கள் என்ற காரணத்தாலேயே இவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. அண்மையில் தெல்லிப்பழை பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட மூன்றுக்கு அதிகமான இடங்களில் காணி அபகரிப்பதற்கான அளவீடுகள் இடம்பெற்றபோது அங்கு சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் மக்களும் இணைந்து அந்த அளவீடுகளைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனாலும் குறித்த காணிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பதில் படையினர் உறுதியாகவே உள்ளனர். படை முகாம்களுக்கு முன்னுள்ள காணிகளை இவ்வாறு அளவீடு செய்வதன் மூலம் குறித்த காணிகளை சட்டத்திற்கு அமைவாகவே தாங்கள் பெற்றுக்கொள்கின்றோம் என்று படையினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

சிறீலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் படையினரின் ஆக்கிரமிப்புக்கள் தினமும் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்களின் பலம் போதுமானதாக இல்லை. தமிழ் மக்களின் பெரு விருப்பைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் காணி ஆக்கிரமிப்பு விடயத்தில் ஏதோ குரல் கொடுக்கின்ற போதிலும் அது முழுமையானதாக இல்லை. இந்த விடயத்தில் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படவில்லை. வெறும் பகட்டுக்காகப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றதே தவிர கூட்டமைப்பின் உயர்மட்டம் இந்த வியடத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் தற்போது சுமந்திரனின் கைப்பொம்மையாக இருக்கின்றார். சுமந்திரன் கூறுவதே அவருக்கு தாரக மந்திரமாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யபப்பட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் சம்பந்தர் அவர்களை மதிக்கவில்லை. அவர்களைக் கணக்கில் எடுக்காமல் சுமந்திரனின் தாளத்திற்கு மட்டும் ஆடிக்கொண்டிருக்கின்றார். ஆனால், சுமந்திரன் ஆளும் வர்க்கத்துடன், குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார். மீண்டும் ஒரு கதிர்காமராகச் செயற்படுகின்ற இவர், தமிழ் மக்களுக்கு ஏற்றதாக எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் – முஸ்லிம் மக்களிடம் இருக்கின்ற ஆதரவை வைத்துக்கொண்டு இந்தக் கட்சி தமிழ் மக்களுக்கான நிலையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் உருவாகியிருக்கின்ற கட்சி என்ற அடிப்படையில் சர்வதேச ரீதியாகவும் கூட்டமைப்புக்கு ஆதரவு, பலம் இருக்கின்றது. கூட்டமைப்பு சர்வதேச நாடுகளிடம் சென்று தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு, மற்றும் வளங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், கடல் வளம் சுரண்டப்படுதல் போன்ற அனைத்தையும் எடுத்துக்கூறி இதற்கு தீர்வு முன்வையுங்கள். சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று கோரினால் சர்வதேசம் நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கூட்டமைப்பு அவ்வாறு செய்யத் துணியவில்லை. சுமந்திரன் இருக்கும் வரை அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவும் வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக, இங்கு இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்பு போன்றவற்றைக் தடுத்து நிறுத்துவதற்காக தொடர்ந்தும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களே குரல்கொடுக்க வேண்டியவர்களாகின்றனர். தாயகத்தில் இருந்து வெளியேறி புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்கின்றவர்கள் தாயத்திற்காகவும் குரல்கொடுக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை உணர்ந்து செயற்படுங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடிய பலம், கடமை உங்களுக்கு உண்டு. கூட்டமைப்பை அழைத்து கலந்துரையாடுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு நில ஆக்கிரமிப்பை நிறுத்த முடியுமென்றில்லை. இப்பொழுது நாங்கள் வாளாவிருந்தால் எமக்குரிய தீர்வு கிடைத்தபின் குந்தியிருக்கவே குடிநிலம் இருக்காது.

எனவே, தாயத்தில் இடம்பெற்று வருகின்ற நில ஆக்கிரமிப்பைத் தடுக்க அனைவரும் ஒன்றுபடுங்கள். ஒற்றுமையே பலம்.

நன்றி: ஈழமுரசு