ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டமைக்கு, அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. July 28, 2014 News கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வில் பங்குபற்றவிடாமல் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டமைக்கு, அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பில் நடைபெறவிருந்த இந்த செயலமர்வில் கலந்துக் கொள்வதற்காக 15 ஊடகவியலாளர்கள் கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் இராணுவத்தினர் போதைப் பொருட்களை மறைத்து வைத்தனர். இதனை ஓமந்தையில் வைத்து சோதனை செய்த காவற்துறையினர் குறித்த ஊடகவியலாளர்களை 6 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருந்து பின்னர் விடுவித்தனர். எனினும் இது குறித்த செயலமர்வில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை பங்குபற்றவிடாமல் இராணுவத்தினர் மேற்கொண்ட சூழ்ச்சி என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் யாரும் எந்த கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதகரம், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.