இலங்கையில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது மாத்திரம் தீர்வாக இருக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்..

தற்போதைய ஐக்கிய நாடுகள் சபையினால் தமக்கு நீதிகிடைக்கும் என்று தமிழ்மக்கள் நம்பவில்லை. எனினும் வேறுவழியின்றி ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படவேண்டியநிலை தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சில நாடுகள் தமது தனிப்பட்ட அக்கறையை கருத்திற்கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கைக்குள் கொண்டு வந்துள்ள னரே தவிர ஈழத் தமிழர்களின் மீது உண்மையான பற்றுக்கொண்டு இதனை அவர்கள் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.

போரின்போது நிகழ்ந்த உரிமைமீறல்கள் குறித்து போரின் ஒரு தரப்பான ஸ்ரீலங்கா அரசால் நிறுவபட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணையை ஏற்கமுடியாது. இதற்காக அரசாங்கம் மாறினால் விசாரணையின் முடிவுகளில் மாற்றம்வரும் என்றும் கூறமுடியாது.

ஏனெனில் தெற்கில் சில இடதுசாரி கட்சிகளை தவிர ஏனைய சிங்கள கட்சிகள் இனவழிப்பில் ஈடுபட்ட சிறிலங்காப் படையினர் பாதுகாக்கப்படவேண்டும் என்று கொள்கையை கொண்டிருப்பதாகும். எனவேதான் சர்வதேச விசாரணை ஒன்றை தமிழ்மக்கள் நம்பவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.