‘முள்ளிவாய்க்கால்’ எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழர்களின் ஆழ்மனதில் இருந்து அழிக்கமுடியாத வலி நிறைந்த இரத்த ஆறு ஓடிய வரலாற்று மண். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்கள் என எந்த வேறுபாடும் பார்க்காது சிறீலங்காவின் முப்படைகளும் கூட்டுச் சேர்ந்து ஓர் இனத்தை வேரோடு கருவறுக்க முனைந்து நின்ற மண் அது. உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்திருக்க, சிங்கள இனவாதத்திற்கு தோள் கொடுப்பவர்கள் முண்டியடித்து நிற்க, கண் முன்னே நடந்த பலியெடுப்பு அது. அந்த மரண அவலத்தில் இருந்து மீண்டெழ, அந்த மக்களை அதற்குள் இருந்து மீட்டெடுக்க தாயகத் தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் ஒரு சேரப் போராடிக் கொண்டிருந்த அந்த ‘நெருப்பு நாட்கள்’ இன்றும் மனதைவிட்டு அகலாதவை.

முள்ளிவாய்க்காலின் குறுகிய நிலப்பரப்புக்குள், செறிந்திருக்க மக்கள் மீது போடுகின்ற எந்தவொரு குண்டும் வீணாகப் போவதில்லை என்ற நம்பிக்கையோடு சிங்களப் பேரினவாதம் அவர்கள் மீது முப்படைகளையும் ஏவிக் குண்டு மழையைப் பொழிந்துகொண்டிருந்தது. இதற்குள் இருந்து உயிரோடு மீண்டெழுவோம் என்ற எந்தவொரு நம்பிக்கையுமின்றி, மீட்பர்கள் யாருமின்றியே தமிழினம் ஏங்கிக் கிடந்தது.

அன்றைய முள்ளிவாய்க்கால் நிலைமைக்கும் இன்றைய காஸாவிற்கும் அதிக வேறுபாடில்லை. இப்போது பலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்களும் இவ்வாறானதொரு முள்ளிவாய்க்கால் நிலையிலேயே மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார்கள். இஸ்ரேலின் முப்படைகளும் அவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துகின்றது. குறுகிய நிலப்பரப்பிற்குள் செறிந்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ஏவும் குண்டுகள் எவையும் வீணாகப்போவதில்லை. இதனை உறுதிப்படுத்துவது போன்று தினந்தோறும் சாவுகள் நூறு, இருநூறு என அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகளே அதிகளவில் அங்கும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களை அழித்தபோது கிளர்ந்தெழவேண்டிய தமிழகத்தை, அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்கி வைத்திருந்ததுபோல, உணர்வுடன் எழும் அரபுலக மக்களை அடக்கி வைத்திருக்கின்றன அரபுலக ஆட்சித் தலைமைகள். விடுதலைப் புலிகள் அழியவேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருந்ததுபோல, காஸாவை ஆட்சி புரியும் ஹமாஸ் அழிய வேண்டும் என்பது அரபுலகின் எதிர்பார்ப்பு. எனவே, கொல்லப்படும் அப்பாவி மக்களை விட, அழிக்கப்படும் ஹமாஸ் குறித்தே அவர்கள் சிந்திக்கின்றார்கள். இந்தியாவின் அமைதி சிங்களப் பேரினவாதத்திற்கு எவ்வாறு உற்சாகத்தைக் கொடுத்து இனப்படுகொலையின் வேகத்தை அதிகரிக்க உதவியதோ, அதேபோன்று இப்போது அரபுலகத்தின் மௌனம் இஸ்ரேலை உற்சாகமடைய வைத்திருக்கின்றது.

பலஸ்தீனத்தில் இரத்த ஆறு ஓடுவது இப்போதுதான் என்றில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த மண் இரத்தத்தில் நனைந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இப்போது குறிப்பாக கடந்த ஒரு மாதமாக காஸா மண் பேரழிவிற்குள் சிக்கியுள்ளது. இஸ்ரேலிய மூன்று மாணவர்களைக் கொன்றதற்காக ஹமாஸ் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றபோதும், அப்பாவி மக்களையே இது அதிகளவில் பலியெடுத்து வருகின்றது. கடந்த ஒரு மாதத்திற்குள் 2000 மக்களைப் பலியெடுத்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை நடைப்பிணங்களாக்கி, இலட்சக் கணக்கானவர்களை அகதிகளாக்கியிருக்கின்றது.

பலஸ்தீனத்தின் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு, தமிழனத்தின் விடுதலைக்காக அவர்களிடம் போர்ப் பயிற்சி பெறுவதையே பெரும் கௌரவமாகக் கருதிய காலம் ஒன்று தமிழர்களிடம் இருந்தது. ஆனால், சர்வதேச சதி வலைப் பின்னலுக்குள் சிக்கி பலஸ்தீன விடுதலைப் போராட்டம் சிதைந்துபோனது போன்றே, சர்வதேசத்தின் ஒன்றிணைந்த நடவடிக்கையில் தமிழர்களின் போராட்டமும் சிதைக்கப்பட்டது.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற போர்வையில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பலஸ்தீன மக்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமை. ஆனால் அப்படி எந்தவொரு போராட்டமும் தமிழர்களுக்கு ஆதரவாக அந்த மண்ணில் நடந்துவிடவில்லை. மாறாக, இன அழிப்பில் ஈடுபட்ட சிங்களப் பேரினவாதி மகிந்த ராஜபக்சவை பலஸ்தீனத் தலைவர்கள் அழைத்துக் கௌரவித்தது மட்டுமல்ல, தங்கள் மண்ணின் வீதியன்றுக்கும் இந்த இனப்படுகொலையாளியின் பெயரைச் சூட்டியதுதான் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, பலஸ்தீன விடுதலைப் போராட்டம் குறித்து தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் பெரும் கரும்புள்ளியை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்தது.

ஆனாலும், இன்று பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படும்போது தமிழர்கள் அதனைக் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிடவில்லை. அந்த மக்களுக்கு ஏற்படும் அவலத்தைப் பார்த்து தங்களுக்கு ஏற்பட்ட அவலம்போன்றே வருந்தி நிற்கின்றார்கள். இந்த அழிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதற்காக உலகெங்கும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழர் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

‘உலகின் எங்கோ நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக உங்கள் மனம் கொதித்தெழுந்தால், நீயும் நானும் தோழர்களே’ என்றார் சே குவேரா. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பலஸ்தீன மக்களும் தமிழர்களுக்கு தோழர்கள்தான்.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு