யாழ்ப்பாணம் உட்பட வடக்கிற்கு வருகின்ற புலம்பெயர் தமிழர்களை சிறிலங்கா படைப் புலனாய்வாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சில சமங்களில் புலனாய்வாளர்களால் பணம் பறிக்கப்பட்டு அந்தப் புலம்பெயர் உறவுகள் தாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறு ஒருவர் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

புலம்பெயர் மக்கள் தென்னிலங்கை விமான நிலையங்களில் வந்திறங்கியவுடன் இவர்களைத் தொடர்கின்ற புலனாய்வாளர்கள் அவர்கள் தங்குகின்ற இடங்கள் உட்பட அவர்கள் சென்றுவருகின்ற இடங்களையும் அச்சொட்டாக அறிந்து வருகின்றனர். சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமையவே இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனால் தற்போதைய விடுமுறையைப் பயன்படுத்தி வடக்கிற்கு வருகின்ற புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பட யாழ், குடாநாட்டிலுள்ள பல ஆலயங்களில் தற்போது வருடாந்த மகோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பங்குபற்றுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றனர். பலர் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் பல செல்வந்தர்களும் தற்போது வடக்கிற்கு வந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்தில் இறங்கியது தொடக்கம் அவர்களுக்கு தெரியாமலே அவர்களைப் பின்தொடர்கின்ற புலனாய்வுத் துறையினர் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் சேகரித்து வருகின்ற விடயம் அம்பலமாகியுள்ளது.

அண்மையில் இவ்வாறு வடக்கிற்கு வந்த ஒருவர் விமான நிலையத்திலிருந்து புலனாய்வுத் துறையால் பின்தொடரப்பட்டுள்ளார். அவர் பயணித்த வாகனத்தில் சாரதி தங்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்பவர்கள் தொடர்பில் சந்தேகமடைந்து வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று இளைப்பாறினார். அதன்போது அந்தப் புலனாய்வாளர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இவர்களிடம் வந்து விசாரித்துள்ளனர். இதன்போது இவர்கள் நியாயம் கேட்டபோது அவர்களை அச்சுறுத்தி அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு கொண்டு சென்று அவர்களிடம் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்துவிட்டு அவர்களைத் தாக்கிய பின்னர் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக எவரிடமாவது கூறினால் கொன்றுவிடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஜனநாயகம் நிலவுவதாக அரசாங்கம் சர்வதேச ரீதியாகப் பிரச்சாரம் செய்துவருகின்ற நிலையில் வடக்கில் தொடர்ந்தும் இராணுவ அராஜகங்கள் நிலவுவதையே இவ்வாறான செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தச் செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தின் போலி முகத்திரை கிழிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே, புலம்பெயர் நாடுகளில் இருந்து வடக்கிற்கு வருகின்ற தமிழ் மக்கள் தங்கள் விடயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறும் சிறிலங்கா படைகளாலோ புலனாய்வாளர்களாலோ ஏதாவது விபரீதங்கள் நடந்தால் அவற்றை மறைக்காமல் வெளிப்படுத்துமாறும் வடக்கிலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.