சிறிலங்காவுக்குச் செல்லாமலேயே விசாரணைகளை மேற்கொள்ள முடியும் – நவநீதம்பிள்ளை. August 11, 2014 News சிறிலங்காவுக்குச் செல்லாமலேயே, அங்கு நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த மின்னஞ்சல் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,“சிறிலங்காவுக்கு வெளியே ஏராளமான தகவல்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே விசாரணைகளை நடத்த முடியும்.அறிக்கையின் நம்பகத்தன்மை விசாரணைக் குழு நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பதில் தங்கியிருக்கவில்லை.சரியான தரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஆதாரங்களை உறுதிப்படுத்துவதிலேயே அது தங்கியுள்ளது.விசாரணையாளர்கள் அனுமதிக்கப்படாத போதிலும், சிரியா, வடகொரியா போன்ற நாடுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டது இதற்கு உதாரணமாகும்.சிரியா, வடகொரிய அரசாங்கங்கள் தவிர, இந்த விசாரணைகள் குறித்து வேறெவரும் அரிதாகவே அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.எனவே, சிறிலங்கா விவகாரத்திலும், வேறுபாடு இருக்கும் என்று நான் கருதவில்லை.துரதிஸ்டவசமாக சில மோசமான தவறான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வருகின்றன.இந்திய, தாய்லாந்து அரசாங்கங்கள் விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை.சிறிலங்காவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ, விசாரணைக் குழுவினர் நுழைவிசைவு கோரி விண்ணப்பிக்கவில்லை.விசாரணைக் குழு இணைப்பாளர் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மீது சில சிறிலங்கா ஊடகங்களில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.அவை தவறானதும், திரிபுபடுத்தப்பட்டதுமாகும்.12 பேர் கொண்ட விசாணைக் குழு ஜெனிவாவைத் தளமாக கொண்டே செயற்படும்.தேவைப்படும் போது, அவர்கள் ஏனைய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.அவர்கள், சாட்சியங்கள் மற்றும் கொடுமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பரிசீலனை செய்து தகவல்களைத் திரட்டுவார்கள்.இவர்களின் அறிக்கை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.மீறல்களுக்கு யார் பொறுப்பு என்று கண்டறிந்து. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, விசாரணை அவசியமானது.இந்த விசாரணை, நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, எல்லா இலங்கையர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்வது முக்கியமானது.இந்தப் பின்னணியில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையின் படியான விசாரணையைப் பார்க்க வேண்டும்.அதனை மோதலாகப் பார்க்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.