புலம்பெயர் உறவுகளின் அயராத உழைப்பே இங்கு மூலதனமாக்கப்படுகிறது. வாழ்வாதார மேம்படுத்தல் என்ற இலக்கோடு பயணிக்கும் இச்செயற்திட்டங்களுக்கு உங்களின் முயற்சியும் உழைப்பும் வெற்றியை தேடித்தரட்டும். என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வாழ்வாதார நலிவுற்ற குடும்பங்களை மேம்படுத்தும் திட்டநிகழ்வொன்றில் பங்கெடுத்தே மேற்படி கருத்துக்களை ரவிகரன் தெரிவித்திருந்தார்.

ரவிகரன் ஊடாக நோர்வே வாழ் ஈழத்தமிழரின் உதவியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயற்திட்டத்திற்காக 22 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா 25000 ரூபா வீதமான வாழ்வாதார உதவிகளும் அந்நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

கணவரை இழந்த அல்லது கணவரை காணாமல் தேடிக்கொண்டிருக்கும் மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக புலம் பெயர் தமிழ் உறவுகளின் பங்களிப்பில் வாழ்வாதார மேம்படுத்தல் திட்டங்கள் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் ஊடாக, நோர்வே வாழ் ஈழத்தமிழர்களின் தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் மூலம் ஏற்கனவே 20 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

இதன் இரண்டாம் கட்டம் அண்மையில் முத்தரிப்புத்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய வளாகத்தில் முன்னெடுக்கபட்டு மேலதிகமாக 22 குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்படுத்தல் உதவிகள் வழங்கப்பட்டன.

முள்ளிக்குளம் பகுதியில் காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்டு காயாக்குளி என்ற இடத்தில் குடியேறியுள்ள 7 குடும்பங்களும், பொற்கேணி கிராமத்தில் 5 குடும்பங்களும், முத்தரிப்புத்துறையில் 10 குடும்பங்களும் என மொத்தம் 22 குடும்பங்கள் மேற்படி செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவராவர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி நிகழ்வை சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தனது உரையில் இவ் ஏற்பாட்டை முன்னெடுத்த நோர்வே வாழ் ஈழத்தமிழர்களின் முயற்சியை பாராட்டியதோடு அவர்களின் சமூக பொறுப்புமிக்க செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஈழத்து உறவுகளை மென்மேலும் பலப்படுத்தி வளப்படுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

help2

மேலும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொண்ட குடும்பங்களோடு உரையாடுகையில்,

புலம்பெயர் உறவுகளின் அயராத உழைப்பே இங்கு மூலதனமாக்கப்படுகிறது. தங்களின் வளர்ச்சி என்பதை கடந்து தங்கள் இனத்தின் எழுச்சி என்ற இலக்கினை வகுத்தே இவ்வாறான உதவித்திட்டங்களை ஈழத்தில் செய்கிறார்கள். அவர்களின் கனவு வாழ்வதும் மறைவதும் இவ் உதவியினை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதில் தான் உள்ளது. வாழ்வாதார மேம்படுத்தல் என்ற இலக்கோடு பயணிக்கும் இச்செயற்திட்டங்களுக்கு உங்களின் முயற்சியும் உழைப்பும் வெற்றியை தேடித்தரட்டும். வளம்பெற்ற உங்கள் வாழ்வே எங்கள் அனைவரதும் இலக்காக அமைகிறது.
என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திரு.து.ரவிகரன், முத்தரிப்புத்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு. பற்றிக் இமானுவேல் குறூஸ், காயாக்குளி பாடசாலை அதிபர் எ.மரியதாஸ், பொற்கேணி பாடசாலை அதிபர் பி.தேவபாலன் பர்னாந்து உட்பட சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.