சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்! எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“லீ குவான் யூவுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச்சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலிலேயே “சிங்கப்பூரின் நவீன சிற்பி” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப்போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் இன பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே எல்லோரும் ஏற்கவும், நம்பவும் வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

வீழ்ந்து விடா வீரம்! மண்டியிடா மானம்!

ஈழத்தமிழர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும் சிறுபான்மையினராகிய தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் சிங்களவர்களுக்கு நிச்சயம் இல்லை. எல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தமிழர்களை சிங்களவர்களால் நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.

சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் மிகப்பெரும் ஆயுதப்போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழித்து விட முடியும் என்ற சிங்களவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

நடந்ததும், நடப்பதும் இன அழிப்பே!

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான இன அழிப்புத்தான். இதனால் தமிழர்கள் மீண்டும் ஆயுதப்பேராட்டத்தை தொடங்குவார்களா? என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். சிங்களவர்களை விட தமிழர்களுக்கே அதிகளவான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.