ம.தி.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ‘ஆய்வுக்களம்’ என்ற பெயரில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வைகோ அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?.

பதில்:- இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்‌ஷவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரிகளுக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது. போர் குற்றவாளிகளுக்கு அழைப்பு விடுத்ததை ஐ.நா. மன்றம் திரும்ப பெற வேண்டும். அப்போதுதான், ஐ.நா.வின் சுயமரியாதை காக்கப்படும். இதை ஐ.நா. மன்றத்திற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.

கேள்வி:- இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ஒருங்கிணைந்த இலங்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆனால், நீண்ட காலமாக நீங்கள் தனி ஈழத்திற்கு குரல் கொடுத்து வருகிறீர்களே?.

பதில்:- மத்திய ஆட்சியாளர்கள் தனி ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க வேண்டும் என்றால் சுதந்திர தனி ஈழம் அமைந்தால்தான் முடியும். எனவே, உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று வைகோ கூறினார்.