மாகாணசபை பற்றி இனியும் பேசிக்கொண்டிருப்பது வீணானது! அனந்தி எழிலன் சீற்றம்!! September 2, 2014 News காணாமல் போனோர் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகளில் எம்மை பங்கெடுக்காது தடுக்கவே முல்லைதீவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இனி வரும் தவணைகளில் வழக்கு தாக்கல் செய்த நாம் பங்கெடுக்க ஏதுவாக எமக்கு காவல்துறைப் பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்பட வேண்டுமென நீதிமன்றினை கோரவுள்ளதாக அறிவித்துள்ளார் வடமாகாணசபையின் கூட்டமைப்பு பெண் உறுப்பினரும் காணாமல் போனோர் தொடர்பில் செயற்பட்டுவருபவருமான அனந்தி சசிதரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் மேலும் அவர் தெரிவிக்கையில் அந்த ஆட்கொணர்வு வழக்குகளின் கண்கண்ட சாட்சியமாக நாமே உள்ளோம். அதனால் எம்மை நீதிமன்றிற்கு செல்லவிடாது தடுப்பதன் ஊடாக வழக்கை மூடிவிட அரசு முற்பட்டள்ளது. அதற்கு ஏதுவாக புதுக்குடியிருப்பு இராணுவ பண்ணைக்கு பொறுப்பாக இருக்கும் கப்டன் மகாதேவா எனும் நபரே ஆட்களை கட்டாயப்படுத்தி இப்போராட்டங்களை நடத்தியுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினரே இந்நடவடிக்கைகளில் பின்னின்று செயற்பட்டுள்ளனர். புலிகள் கட்டாயப்படுத்தி பிடித்து சென்று காணாமல் போனவர்களென இவர்கள் சாயம் பூசிக்கொண்டாலும் குறித்த மகாதேவா என்பவருடைய ஒரு பிள்ளைகூட காணாமல் போயிருக்கவில்லையெனவும் அவர் அம்பலப்படுத்தினார். இதனிடையே வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோர் போராட்டத்தை முடக்க நடந்த சதிகளும் ஏற்கனவே பிரிட்டிஸ் பிரதமரது விஜயத்தின் போதும் நடந்த அடக்கு முறைகளும் காணாமல் போனோர் விவகாரத்தை சர்வதேசத்திற்கு செல்லவிடாது தடுக்கும் சதி எனவும் அவர் அம்பலப்படுத்தினார். மறுபுறம் கால இழுத்தடிப்புக்காகப் பல்வேறு விசாரணைக் குழுக்களை இலங்கை அரசு நியமித்து வருகின்றது. தற்போதும் புதிதாக இலங்கை அரசு நியமித்திருக்கும் சர்வதேச பிரதிநிதிகளை கொண்ட குழு தொடர்பில் எமக்கு எந்தவித நம்பிக்கையுமில்லை. இவற்றின் பயன் என்ன? என கேள்வி எழுப்பிய அவர் இந்த அரசு காலத்தை இழுத்தடிக்க செய்யும் சதியே இதுவெனவும் தெரிவித்தார். முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று டெல்லி செல்வது பற்றி தமக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லையென ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெரிவித்த அவர் மாகாணசபை தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மக்களது நம்பிக்கை இழந்துவிட்ட 13 வது திருத்தச்சட்டம் பற்றி பேசிக்கொண்டு கால இழுத்தடிப்பு செய்யமுடியாதென தெரிவித்த அவர் தற்போதைய தண்ணீர் பஞ்சத்தில் மாகாணசபை என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பினார். மக்களை சந்திக்க முடியாதுள்ளது. மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இனி ஏதுமே 13 வது திருத்த சட்டத்தின் கீழான வடமாகாண சபையால் எதுவுமே செய்ய முடியாதென்பதை தெளிவுபடுத்துவதை தவிர வேறு வழியில்லையெனவும் அவர் தெரிவித்தார். நன்றி;பதிவு