முல்லைத்தீவில் கடற்கரையோரப்பகுதிகளில் இல்மனைட் தொழிற்சாலைக்காக சுமார் 20 km கடற்கரைப் பகுதியில், பாரியளவில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கான ஆரம்ப திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,

முல்லைத்தீவு கரையோர எல்லையான கொக்கிளாயில் கம்பித் தரை வெளியில் 11 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் தனியார் காணி சுவீகரிக்கப்பட்டு,இல்மனைட் கனிய மணல் தொழிற்சாலை அங்கு அமைக்கப்படுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தனியார் காணியானது அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே சுவீகரிக்கப்பட்டு , தற்போது அக்காணிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கான வேலைகள் நடைபெறுவதாகவும் என்னிடம் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இத்தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்கப்படுவதன் மூலம் அண்மித்த எதிர்காலத்தில் மிகப்பெரியளவில் முல்லைத்தீவில் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் இத்தொழிற்சாலைக்கான மூலப்பொருளை முல்லைத்தீவு கரையோரங்களில் அகழ்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை பகுதி வரையான கடற்கரைப்பகுதியில் இல்மனைட் செறிவு அதிகமாக காணப்படுவதால், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20 km தூரக் கடற்கரையோரம் , கணியமணல் அகழ்வு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இதனால் அக் கடற்கரையோரப்பகுதியின் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படுவதோடு, இப்பகுதியின் இயற்கைச் சமநிலையையும் மோசமாக பாதிக்கப்படும்.

முல்லைக்கரையோரத்தின் இயற்கை இருப்பை ,இந்நடவடிக்கை கேள்விக்குள்ளாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எங்கள் மக்களையும் இயற்கையையும் அழிக்கவல்ல இந்த செயன்முறையை முற்றிலும் எதிர்க்கிறேன் என்றார்.