தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு, 2013 இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு ஆண்டுகள் தடையை ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது. அந்த அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடை ஐந்து ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கக் கோரி, தன்னையும் ஒரு தரப்பாகத் தீர்ப்பு ஆய விசாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வைகோ தீர்ப்பு ஆயத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இப்போதைய தீர்ப்பு ஆயத்தின் நீதிபதியாக, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீதிஅரசர் மிட்டல் செயல்படுகிறார். இன்று வைகோ மனு மீதான விசாரணை, தில்லி உயர்நீதிமன்ற அரங்கில் பிற்பகல் 3.30 க்கு நடைபெற்றது. அப்பொழுது வைகோ தமது வாதங்களை எடுத்து வைத்தார்:
நான் விடுதலைப்புலிகளின் முழு ஆதரவாளன். இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் இருக்கின்றார்கள் என்று தடை ஆணை கூறுகிறது. நான் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்பதற்காக, பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 19 மாதம் சிறையில் இருந்திருக்கின்றேன். இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.
2010 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை நான் ஆதரித்துப் பேசினேன் என்பதற்காக, இதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ், என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆய நீதிபதி, நீதிஅரசர் விக்ரம்ஜித் சென் தனது இறுதித் தீர்ப்பில், ‘மறுமலர்ச்சி தி.மு.க. விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். நான் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கின்றேன். எனவே என்னை இந்தத் தீர்ப்பு ஆய விசாரணையில் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்;
இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் அங்கு வாழ முடியாமல் உலகின் பல நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்லுகிறார்கள். ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாட்டுக்கு அதுபோல வருகின்ற ஈழத்தமிழர்கள் பலரை, அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைக்கின்றது. அதனால், தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. எனவே, இந்த விசாரணையில் என் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி வேண்டும்.
2010 ஆம் ஆண்டு தீர்ப்பு ஆய விசாரணையிலும் நான் இதுபோன்ற மனு தாக்கல் செய்தேன். என்னை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், விசாரணை அமர்வுகளில் பங்கு ஏற்கவும், என் வாதங்களை முன்வைக்கவும் தீர்ப்பு ஆய நீதிபதி அனுமதித்தார்.
மீண்டும் 2012 ஆம் ஆண்டில், தீர்ப்பு ஆய நீதிபதி நீதி அரசர் ஜெயின் அவர்கள் முன்பு, அதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்தேன். அவரும், முன்னைய தீர்ப்பு ஆயம் அனுமதித்ததைப் போல எனக்கு அனுமதி தந்தார்.
எனவே, என்னை இந்த அமர்வில் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டுகிறேன். அதற்கு வாய்ப்பு இல்லையேல், விசாரணையில் பங்கு ஏற்று என் வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ தமது வாதங்களை எடுத்து வைத்தார்.
இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், ‘வைகோ அவர்கள் நல்ல நோக்கத்தோடு போராடி இருக்கலாம். ஆனால் அவர் விடுதலைப்புலிகளின் அமைப்பில் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ இல்லை. எனவே அவரை ஒரு தரப்பாக ஏற்கக் கூடாது. அப்படி நீங்கள் அவருக்கு அனுமதி அளிப்பதாக இருந்தால், கடந்த தீர்ப்பு ஆயங்களில் எவ்வகையான அனுமதி கொடுக்கப்பட்டதோ அதுபோன்ற அனுமதி கொடுக்கலாம்’ என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டதற்குப்பிறகு நீதி அரசர் மிட்டல், ‘வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது. ஆனாலும், அவர்  இந்த அமர்வு விசாரணையில் பங்கு ஏற்கவும், வாதங்களை முன்வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. புலிகள் தடை மீதான தீர்ப்பு ஆய விசாரணை செப்டெம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் நடைபெறும்’ என்று அறிவித்தார்.
இந்த விசாரணையின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாÞ, டெல்லி வழக்கறிஞர்கள் அனந்தசெல்வம், ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்