ஒட்டுசுட்டானில் மினிகூசூறாவளியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு அவசர உதவிகள் தேவை படுவதாக நாடாள மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவத்துள்ளார்.

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

காற்று மினிசூறாவளி போன்று பலமாக வீசியதினால் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மன்னாங்கண்டல் கிராமங்களை சேர்ந்த மக்களினதும், புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராம மக்களினதும் 42 வீடுகள் சேதமடைந்துள்ளது.

பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி தூரத்தே வீசப்பட்டமையினாலும், மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்ததாலும் இவற்றில் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

மக்கள் சேமித்து வைத்திருந்த நெல் மூடைகள், பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் அப்பியாசக்கொப்பிகள், அத்தியாவசிய வீட்டு ஆவணங்கள் பதிவு பத்திரங்கள், உடுபிடவைகள், உணவுப்பொருள்கள் மழையினால் நனைந்து சேதமடைந்துள்ளன.

வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு வீட்டு கட்டுமாணத்துக்கு அரிந்த சீமேந்து கற்களும் மழை நீரில் கரைந்து போயுள்ளன. பயன்தரு நிலையிலிருந்த வாழை மரங்களும் முறிந்து போயுள்ளன.

இன்று காலை (13.09.2014) அப்பகுதிகளுக்கு சென்று அனர்த்த நிலைமைகளை பார்வையிட்டுள்ள கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் பிரதேசசெயலர்களுடன் தொடர்பு கொண்டு,

இன்றும் மழை பெய்வதற்கான வானிலை அவதானிப்புகள் காணப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இருப்பதால் அவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் அவலநிலை காணப்படுவதாகவும், ஆகையால் அவசர உதவிகளாக தறப்பாள்களையும், உலர் உணவுகளையும் வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களும் தமது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக முடிந்தவரையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான இறுதிப்போரில் கணவரை இழந்த கெருடமடுவைச்சேர்ந்த சிறீரஞ்சன் புவனேஸ்ஸ கமலாம்பிகைவதி எனும் விதவைத்தாய் கூறுகையில்,

‘ஏற்கனவே போரில் சேதமடைந்து இருந்த எங்கட வீடுகள் திருத்தியமைக்கும் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடிய வீட்டுத்திட்டம் தான் எங்களுக்கு கிடைச்சது.

நிறுவனம் கொஞ்ச காசு தரும். மிச்சத்துக்கு எங்கட காசப்போட்டுத்தான் நாங்க வீட்ட கட்டி முடிக்கோணும். காதுல கழுத்தில இருந்த நகைகளை எல்லாம் ஈடு வைச்சுத்தான் மரம் தடி சீட் வாங்கிப்போட்டிருந்தன்.

எல்லாத்தையும் காத்து கொண்டு போயிட்டுது. அடுத்து என்ன செய்யிறது எண்டே எனக்குத்தெரியேல்ல.’ என்று தனது கையறுநிலையை வெளிப்படுத்தி கண்ணீர் மல்கினார்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் போரினால் குடும்பத்தலைவர்களை இழந்து பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்களும் காணப்படுவதால், ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும், ஏனைய நலன் விரும்பிகளும், நல்லுள்ளம் கொண்டோரும் தம்மால் முடிந்த வகையிலான உதவிகளை, குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 நன்றி:பதிவு