15.09.2014 – தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் தமது உணர்வுகள் அனைத்தும் தாயகத்தை நோக்கியே துடிக்கின்றது என்பதற்கமைவாக 15.09.2014 திங்கட்கிழமை அன்று ஜெனிவா நகரில் ஐ.நா சபை முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் நடாத்தப்பட்டது.

ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரல்கள் மற்றும் அவர்கள் தாங்கிய பதாதைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது. இவ் கவனயீர்ப்புப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த திரளான மக்களுடன், சுவிஸ் வாழ் மக்களும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்திருந்தனர்.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலில் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்குரிய ஈகைச்சுடருடன் ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்வணக்கத்துடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு வெளியீடாக ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாகவும், தமிழ் இன விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த அனைத்து ஈகியர்களுக்கு சமர்ப்பணமாகவும் விடுதலை நெருப்பு எனும் இறுவட்டு மீள்வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி கிகேன் பொற்ரம் அவர்களின் சிறப்பு பேச்சுடன் இளையோரின் வேற்றின மொழியிலான உரைகளுடன் ஈருருளி பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்களின் எழுச்சி உரைகளும் உணர்வு வெளிப்பாடும் இடம்பெற்றிருந்தன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் நிறைவுபெற்றன.