Prof-John-Galtung-1024x198

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன? உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. அவ்வாறானால் அரசுகள் இல்லாத தேசியங்கள் மிகப் பெரும் தொகையாக உள்ள நிலையில் இரண்டு பெரும் தேசியங்கள் உள்ள இலங்கையில் எவ்வகையான தீர்வை நோக்கிச் செல்வது?

இவ்வாறான அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களை உலகில் முதன் முதலாக சமாதானத்திற்கான கற்கைகளுக்காக நிறுவனம் ஒன்றை நிறுவியவரும், இலங்கையில் நோர்வேயின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதில் ஈடுபட்டு 2002 – 2006 ஆண்டு காலப் பகுதியில் 34 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே நாட்டினைச் சேர்ந்த பேராசிரியர் ஜொகான் கல்ருங் ( John Galtung ) தந்துள்ளார்.

புகலிடத்தில் 10 லட்சம் தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. அவ்வாறாக எடுத்துக்கொண்டால் அவர்களே பணம் திரட்டி விடுதலைப் புலிகளுக்கு வழங்கினார்கள். மிகப் பெரும் தொகையான பணம் திரட்டப்பட்டது. இப் பின்னணியில் மிகவும் எளிதான நோக்கில் இன்னொரு விதமாக பார்;ப்பதானால் இப் 10 லட்சம் மக்களும் உலகிலுள்ள ஊடகங்களுக்கு தமது கதைகளை அதுவும் எவருக்கும் அச்சுறுத்தல் இல்லாமல் இன்னும் விபரமாக அறிய வாய்ப்பு உண்டு என்கிறார். தமிழ் மக்கள் ஏதோ ஒரு வகையில் ஐ நா சபையில் பேசப்படும் விவகாரமாக எடுத்துச் சென்றுள்ளார்கள்.

போர்க் காலத்தின் போது கூட்டுத் தலைமை நாடுகள் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் அவர்கள் முரண்பாடுகளைக் களையும் நோக்கில் உண்மையில் ஈடுபடவில்லை. பதிலாக விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பை இல்லாதொழிப்பதே நோக்கமாக அமைந்தது. இதற்கான பிரதான காரணம் ஒரு நாட்டிற்குள் இரு வேறு ராணுவம் செயற்பட முடியாது. இக் கோட்பாட்டினை ஒவ்வொரு நாடுகளும் கொண்டிருப்பதால் அவர்களது செயல்கள் அரசினைப் பலப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்குவதாக அமைந்தது. கூட்டுத் தலைமை நாடுகளின் அடிப்படை நோக்கங்கள் குறித்து விபரிக்கும் அவர் ஐ நா சபையும் ஒரு வகையில் அரசுகளின் நலன்களைப் பேணும் கூட்டுச் சங்கமாகவே செயற்படுவதை கடமையாகவும் கொண்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் பூகோள அரசியல் நலன்கள் குறித்து விபரிக்கையில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் குறித்து மட்டும் கவலை கொள்ளவில்லை. பதிலாக பிஃறிக்ஸ் ( BRICS) என்ற கூட்டிலுள்ள பிறேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகியவை குறித்தும் கவலை அடைந்துள்ளது. ஏனெனில் இக் கூட்டிலுள்ள நாடுகள் உலகின் 39 சதவீத மக்கள் தொகையையும் கொண்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

மகாவம்ச மனநிலையில் சிங்கள பௌத்தர்கள் மட்டும் வாழவில்லை. அமெரிக்கர், இஸ்ரேலியர்கள், யப்பானியர்களும் இதேவிதமான தத்தவார்த்த பின்னணியில் தாமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனவும், தமக்கென இறைவனால் வழங்கப்பட்ட நிலமே தமது தேசங்கள் எனவும் உரிமை பாராட்டுகின்றனர். அவ்வாறான ஐதீகத்தை தமக்குள் கொண்டுள்ளனர். இத்தகைய ஓர் பின்னணியில் இலங்கையைப் பொருத்திப் பார்த்தால் அமெரிக்கா, இஸ்ரேல், யப்பான் போன்றவை நிச்சயமாக சிங்கள பௌத்தத்தை தமிழருக்கு எதிராக ஆதரிக்கும் என்பதாக ஆருடம் கூற முடியும். இங்கு யப்பானியர்களின் போக்கை சற்று வேறு விதமாக பார்க்கலாம். யப்பானின் பொருளாதாரத்திற்கான மூலப் பொருட்களின் போக்குவரத்தை அதாவது இந்து சமுத்திரத்தினூடாக மேற்கொள்ளும் வர்த்தகத்தை அமெரிக்காவே உறுதி செய்கிறது.

அமெரிக்காவின் மனித விரோத செயல்களை விபரிக்கும்போது உலகிலுள்ள சுமார் 134 நாடுகளில் இடம்பெறும் மனிதப் படுகொலைகளின் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. உள்நாட்டு அரசுகளைப் பயன்படுத்தி தமக்காக அவற்றைச் செய்விக்கின்றனர். அது சாத்தியமாகாத போது அடுத்து வரும் அரசு மூலமாக அதனைச் சாதிப்பர். பேராசிரியரின் அரசியல் பார்வை சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகளை நோக்கியதாவே உள்ளன. இன்று சமஷ்டி என்ற வார்த்தை வெறுக்கப்படும் ஒன்றாக உள்ளது. பிரித்தானியா எவ்வாறு ஐக்கிய ராஜ்யம் என தன்னை அழைக்கிறதோ, அதே போன்று ஐக்கியத்தை வெளிப்படுத்தும் தேசியக் கொடியைக் கொண்டுள்ளதோ, அதே போன்று தமிழர்களும் ஒன்றியம் ( UNION) என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

இந்திய அரசும் ஏனைய அரசுகளின் மோசமான செயற்பாடுகளைப் போலவே நக்ஸலைட் விடயத்திலும் நடந்து கொள்கிறது. இது ஒரு வர்க்கப் போராட்டம். தேசியம், வர்க்கம் என்ற இரு பிரச்சனைகளை 2000 தேசியங்களைக் கொண்டிருக்கும் 200 அரசுகள் முகம் கொடுக்கின்றன. தேசியங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சமஷ்டி அடிப்படையிலும், அதிக சமத்துவத்தை வழங்குவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தையும் தணிக்க முடியும்.ஐ நா சபையில் சீனா தவறான விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார். அவர்களுக்கு மிக அதிக அளவிலான மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன. தமக்கு கிடைக்கும் தவறான தகவல்களால் சில சமயங்களில் தவறான முடிவுகளுக்குச் செல்கிறார்கள். நான் உங்கள் நிலையில் இருந்தால் உயர்மட்ட குழு ஒன்றினை சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் அனுப்பி நிலமைகளை விளக்குவேன் என்கிறார்.

Johan_Galtung-2

ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவையும் ஒருமித்து பார்த்தால் தமிழர்களுக்கு ஆதரவாக பாதுகாப்புச் சபையில் மூன்று நாடுகள் உள்ளன. தற்போது ஜேர்மனியையும் ஆறாவதாக இணைத்துப் jg-01பார்க்கப்படுவதால் இது இன்னமும் சாதாகமாக உள்ளது. இதன் பிரகாரம் பார்த்தால் பாதுகாப்புச் சபையில் உள்ள 28 நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் வீட்டோ அதிகாரம் உள்ள 3 நாடுகளைக் கொண்டுள்ளது. மறு பக்கத்தில் சீனா, ரஷ்யா மட்டுமே உள்ளது. இந்த இரண்டு நாடுகளும் தமிழர்களுக்காக பேசும் நிலை ஏற்படும் என தாம் உறுதியாக நம்புவதாக குறிப்பிடுகிறார்.
கணிதத் துறையில் நிபுணத்தவம் பெற்ற பேராசிரியர் துழாயn புயடவரபெ அவர்கள் தற்போது அரசியல் சமூக விஞ்ஞானத் துறையில் பாண்டித்தியம் பெற்றவராகவும் உள்ளார். பல்வேறு கௌரவப் பட்டங்களைப் பெற்ற அவர் சுமார் 160 நூல்களுக்கு மேலாக வெளியிட்டதோடு 1600 இற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல்வேறு தேசியங்களினதும், அரசுகளினதும், மதப் பிரிவுகளினதும் 100 இற்கு மேற்பட்ட பிரச்சனைகளில் சமாதானத்தை ஏற்படுத்தும் ஒருவராக இருந்துள்ளார்.

நோர்வே நாட்டின் சார்பில் இலங்கை இனப் பிரச்சனையில் ஈடுபட்டிருந்த அவர், புலம் பெயர் தமிழர்கள் காரணமாகவே நோர்வே இதில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். சமாதான முயற்சிகளின் போது தமிழர்கள் பிரச்சனைக்கு அதிகளவு காது கொடுத்துக் கேட்டதால் முஸ்லீம்கள் உட்பட ஏனையோர் நோர்வே நாடு தமிழர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சாட்ட வாய்ப்பு ஏற்பட்டது என்கிறார். அவ்வாறு சிந்தித்ததில் தவறில்லை எனக் கூறும் அவர் குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிரித்தானியர்கள் தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டதாக தற்போது ஆய்வாளர்கள் குறிப்பிடுவதை ஒத்த நிலையே அது என்கிறார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து அவரது கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன. வட மாகாணத்தினையும், கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியையும் இணைத்து அதற்கு சுயாட்சி நிர்வாகத்தை இலங்கை அரசு வழங்குமெனில் அது ஒரு புத்திசாலித்தனமான ஓர் முடிவாக அமையும். ஆனால் அவ்வாறான முடிவை எடுக்க அவர்களுக்கு விருப்பமும் இல்லை. அதே போன்று தமிழர்களும் மிகவும் வன்முறையாகவும் உள்ளனர். தனது கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் அவர் இந்தியாவின் உதாரணத்தை முன்வைக்கிறார். இந்தியா ஓர் சமஷ்டி அமைப்பாக மூன்று தலைமைக்குள் கல்கத்தா, பம்பாய், மதராஸ் என இயங்கியது. இதுவே அதன் நிர்வாகத்தின் கருவாக அமைந்தது. 1950- 60 ஆண்டு காலப்பகுதியிலே சமஷ்டி என்பதற்கு மொழிவாரியான வடிவம் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் மொழிவாரி தேசியங்களாக விரிவாக்கம் பெற்றது. இது தமிழ் நாட்டிற்கென பிரத்தியேகமாக எதுவும் நடந்துவிடவில்லை. இரு தேசியங்கள் வாழும் இலங்கையை இவ் வரலாற்றோடு ஒப்பிட முடியாது. அவ்வாறான ஒப்பீட்டு முயற்சி பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் சிறு தொகையான கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி கவனத்தை திருப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனையே அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்தின் மூலம் முயற்சிக்கப்பட்டுள்ளது என சில தமிழ் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். இனப்படுகொலை ( Genocide) களை நிறுத்துவதற்கு சமஷ்டி வழியே சிறந்தது என்பதே பேராசிரியரின் கருத்துக்களின் மையக் கருவாக உள்ளது. இதனையே தனது 34 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த போதெல்லாம் வற்புறுத்தியும் தோல்வியில் முடிவடைந்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர் சமஷ்டித் தீர்வில் உள்ள நம்பிக்கையைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தி சமஷ்டி என்பது நெகிழ்ச்சித் தன்மையுள்ளதாக அமைதல் அவசியம் எனக் கூறுகிறார்.

தமிழர்களின் தமிழீழக் கோரிக்கை அல்லது தாயகக் கோட்பாட்டை அல்லது விடுதலை என்ற வார்த்தைப் பிரயோகங்களை தாம் எதிர்க்கவில்லை எனத் தெரிவிக்கும் அவர் அணுகுமுறை புலி என்ற விலங்குத் தன்மை அல்லாமல் சமாதானத்தை நேசிக்கம் ஓர் விலங்காக செயற்படவேண்டும். தமிழர்களால் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சாத்வீக போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றிருக்குமானால் சுயாட்சி எப்போதோ கிடைத்திருக்கும் என்கிறார். ராணுவச் சிந்தனைகளோடு விடுதலைப் புலிகள் செயற்பட்டது தவறாகும்.

தமிழ் செயற்பாட்டாளர்களில் சிலர் 30 வருடகால சாத்வீக போராட்டம் சமஷ்டித் தீர்வை நோக்கியே இடம் பெற்றதாகக் கூறும் வாதங்களை நிராகரி;க்கும் அவர், 1949ம் ஆண்டே சமஷ்டிக்கான போராட்டம் ஆரம்பித்துவிட்டதாகவும், 1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், தமிழர்களுக்கு எதிரான 1958 இல் இனக் கலவரம் என்பவற்றின் பின்னணியில்தான் இக் கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட்டதாக பதிலளிக்கிறார். சமாதான முயற்சிகளில் ஈடுபடும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் இவ்வாறே வரலாற்றினைப் பார்ப்பதும், இக் காரணங்களால்தான் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்ததாகவும் கூறுகிறார். புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலே காணப்படும் சக்தி யாவற்றையும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளை நோக்கி செலவிடப்பட்டிருந்தது. இப்போது மிகவும் பயனுள்ள, ஆற்றல் மிகுந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது. பிரச்சனைகளை தூர நோக்கோடும், பௌத்தர்களுக்கு அச்சம் ஏற்படாத வகையிலும், பௌத்தர்கள் பெரும்பான்மையானவர்கள் என்பதை அங்கீகரித்தும் செல்ல வேண்டும். அதேவேளை எமது மொழி, கலாச்சாரம் என்பவற்றை எமது வழியில் வளர்த்துக் கொள்ள சிறு சுயாட்சி ஏற்பாட்டைத் தாருங்கள். சமஷ்டியின் உயர் மட்டத்தோடு நாம் என்றும் கூட்டுறவோடு செயற்படுவோம். இவ்வாறுதான் தமிழர்களின் கதை பின்னப்பட்டு உலகின் முன்னிலையில் வைக்க வேண்டும்.

உலகின் பல பகுதிகளில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கான மூல காரணம் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் 200 அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் சாராசரி 10 தேசியங்கள் ஒரு நாட்டிற்குள் கட்டுப்பட்டு வாழ்வதையும், அதனால் தவிர்க்கமுடியாத நிலையில் எழக்கூடிய போராட்ட சூழல்களையும் முன்வைக்கும் அவர் ஒரே இனங்களை பெருமனவில்; கொண்ட தேசிய அரசுகளாக நோர்வே, இத்தாலி, யப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளைக் குறிப்பிடுகிறார்.

ஓன்றிற்கு மேற்பட்ட தேசியங்கள் ஒரு அரசிற்கள் வாழும்போது அங்கு எழும் பிரச்சனைகள் தேசியம் சார்ந்ததாகவும், வர்க்கம் சார்ந்ததாகவும் அமைந்திருப்பதை அடையாளப்படுத்தும் அவர், உலகில் சமத்துவமற்ற போக்கு அதிகரித்துச் செல்லும் போது உள் நாட்டிலும் அவை தவிர்க்க முடியாததாகிறது. எனவே பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தேசியம் சார்ந்த அளவிலும், வர்க்கம் சார்ந்த அளவிலும் அணுகப்படவேண்டியுள்ளதாகவும், இதுவே இன்றைய அரசுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்கிறார். இங்குள்ள பிரச்சனை என்னவெனில் இவ் இரண்டையும் இன்றைய அரசுகள் கையாளுமா? என்பதே முக்கியமானது.

பெரும் தொகையான தேசியங்கள் சிறு தொகையான அரசிற்குள் கட்டுப்படுத்தப்படும்போது ஏற்படக்கூடிய பாரிய அளவிலான அழிவுகளைத் தடுப்பது எவ்வாறு? என்பது குறித்து விபரிக்கும்போது துருக்கியர்களால் ஆர்மேனியர்களும், ஜேர்மானியர்களால் யூதர்களும், ருவாண்டாவில் குஃரு ( HUTU ) இனத்தவர்கள் ருற்ஷி ( Tutsis ) இனத்தவர்களையும், சீனர்களால் இந்தோனேசிய முஸ்லீம்களும் ஒடுக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. இதற்கான தீர்வு சமஷ்டியே எனவும், தேசியங்கள் தமது விவகாரங்களைத் தாமே மேற்கொள்ளும் வகையில் அதாவது மொழி, மதம், உலகப் பார்வை, வரலாறு குறித்த அவர்களது பார்வை என்பன முக்கியமாக அமைகின்றன.

பிரதேச வாதங்கள் குறித்த அவரது கருத்துக்கள் மேலும் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. கல்வி, உள்ளுர் பொருளாதாரம் என்பன சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டும். அதேவேளை வெளிநாட்டுக் கொள்கை, ராணுவம், நிதிக் கொள்கை, இன்றைய தொலைத் தொடர்புகள், கப்பல். விமானம், புகையிரதம், பெரும் தெருக்கள் போன்றவை பற்றிய தீர்மானங்கள் இணைந்து தீர்மானிக்கக் கூடிய பொறிமுறைகள் தேவையாகிறது. இதற்கான பொருத்தமான மாதிரி நாடாக சுவிஸ் நாட்டினை உதாரணம் காட்டுகிறார்.

Johan_Galtung-3

தேசியங்கள், அரசுகள் பற்றிய விபரங்களின்போது ஆப்கானிஸ்தானில் 8 தேசியங்கள், சுமார் 25000 சுயாதீனமாக செயற்படும் கிராமங்கள் உள்ளதாகவும் கூறும் அவர், சுவிஸ் நாட்டில் 4 தேசியங்களும் 2300 சுயாதீன கிராமங்களும் உள்ளதாக கூறுகிறார். இங்குள்ள முக்கிய அம்சம் என்னவெனில் சில அரசுகள் தாம் தமது கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்வதால் ஒற்றை அரசின் மூலம் சகலவற்றையும் ஒரு மையத்தின் மூலம் கட்டுப்படுத்த விழைகின்றன. ஆதிக்கத்தைச் செலுத்த முடியாத தேசியங்கள் தம்மீதும் சூரிய ஒழி விழ வேண்டுமென எதிர்பார்க்கின்றன. இன்னொருவரின் நிழலில் வாழ அவர்கள் விரும்பவில்லை. இவர்கள் சுதந்திரத்தைக் கோரி நிற்கவில்லை. பதிலாக தமக்கு ஓர் அரசு தேவை என்பதைக் கோருவதை விட சுயாட்சி அதிகாரத்தையே விரும்புகின்றன. அரசு என்பது அத் தேசியங்களின் சக்திக்கு அப்பாற்றபட்ட ஒன்றாக கருதும் போக்கு வளர்ந்து வருகிறது. சுயாட்சியும் கிடைக்காத போது கோபம் அதிகரிக்கிறது. குண்டுகள் வீசப்படுகிறது. இவை படிப்படியாக அதிகரிக்கும்போது ராணுவம் அருகில் வருகிறது. இங்குதான் ஒரு அரசு. ஒரு ராணுவம் என்ற கோட்பாடு பலம்பெறுகிறது. இரண்டு அல்லது மூன்று என ஒரு அரசிற்குள் ராணுவம் தோற்றம் பெறும்போது இதர அரசுகளை தனது பக்கம் திரட்டுவதற்கு அந்த அரசிற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அந்த அரசுகளும் இதே கோட்பாட்டில் இயங்குகின்றன. இவ்வாறு பல அரசுகள் அந்த நாட்டிற்கு ஆதரவாக இணையும்போது அழிவுகளும் பல மடங்கு அதிகரிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டு வரும் மனித அழிவுகளுக்கான பின்னணிக்குரிய தத்தவார்த்த நெறி ‘மகாவம்ச மனநிலை’ எனக் கூறப்படுவதை இஸ்ரேலியர்களின் வாதங்களோடு ஒப்பிடுகிறார். பௌத்தபிரானால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் தாம் எனவும், அவரது தூதுவர்கள் கால் பதித்த நாடு எனவும் சிந்திப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இஸ்ரேலியர்கள் போலவே அமெரிக்கர், யப்பானியர் சிந்திக்கும்போது அவ்வாறான சிந்தனைப் போக்குள்ள பௌத்த சிங்களவர்களை இந் நாடுகள் ஆதரிக்காமல் இருக்க முடியாது.

சமீப காலமாக தமிழர் தரப்பில் கட்டுமானங்கள் ஊடாக திட்டமிட்ட இனப் படுகொலை ( Structural Genocide ) மேற்கொள்ளப்படுவதாக வாதிடப்படுகிறது. இது குறித்து அவரது வாதம் இவ்வாறு செல்கிறது. உலகில் தினமும் 140,000 பேர் மரணிக்கிறார்கள். 40,000 பேர் பட்டினியாலும், 100,000 பேர் தடுக்கக்கூடிய வியாதிகளாலும் மடிகிறார்கள். இம் மக்களைக் காப்பாற்றுவதற்கு மருந்து தேவைப்படுகிறது. மருந்துகளை வாங்க இந்த மக்களிடம் பணம் இல்லை. மிகவும் மலிவு விலையில் மருந்து கிடைக்க சில அரசுகள் வழி செய்கின்றன. பல அரசுகள் அவ்வாறு இல்லை. அமெரிக்காவிலுள்ள 16 சதவீத மக்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா? என நிச்சயமற்று வாழ்கிறார்கள். இவை உலகம் முழுவதிலும் வெவ்வேறு அளவில் காணப்படுகிறது. இதற்கான பிரதான விசைகளாக தேசியம், வர்க்கம் என்பன தொழிற்படுகின்றன.

அவரது வாதங்களில் பிரதான கருப் பொருளாக தேசியம், வர்க்கம் என்பனவற்றின் தொழிற்பாடுகள் வெளிப்படுகின்றன. தமிழர்களின் தரப்பில் இணைப்பாட்சி, சமஷ்டி என்பன குறித்து பேசப்படும் பின்னணியில் இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழர்கள், இந்திய தமிழ் நாட்டு தமிழர்கள் என்போருக்கான அகன்ற தேசியம் பற்றிய வாதங்கள் குறித்து அவரது கவனம் செல்கிறது.
‘ரஜிக்’ இனத்தவர் ஆப்கானிஸ்தானிலும், ரஜிக்கிஸ்தானிலும், உஷ்பெக் இனத்தவர் ஆப்கானிஸ்தானிலும், உஷ்பெகிஸ்தானிலும், தாரி மொழி பேசுபவர்கள் ஆப்கானிஸ்தானிலும், ஈரானிலும் வாழ்கிறார்கள். இந்த ஒரே இனங்களை இணைத்து ஓர் சமஷ்டியை உருவாக்கலாம். இவ்வாறான தேசியங்கள் ஒன்றிற்கு ஒன்று அண்மிக்க விரும்பாவிடில் வர்க்க அடிப்படையில் சமத்துவத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இலங்கையில் இன அழிப்பு என்பது அபிவிருத்தி என்ற பெயரால் நடைபெறுவதாகவும், இதற்கு உடந்தையாக அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளும் உதவுகின்றன. இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து குரல் எழுப்பும்போது பயங்கரவாத தடுப்பு என்ற பெயரில் அக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இதனால் குறிப்பாக இளைஞர்கள் அதிகாரத்தடன் இணங்கிச் செல்லும் போக்கே காணப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் இளைஞர்களின் அணுகுமுறை எவ்வாறு அமையவேண்டும்? என்பது குறித்து தெரிவிக்கையில் இளைஞர்கள் தமது தேவை என்ன? என்பதை தூர நோக்கோடு கூற முன்வரவேண்டும். தாம் எதனை எதிர்க்கிறோம்? என்பதை மட்டும் கூறுவதில் பயனில்லை. தவறுகள் குறித்த விமர்சனங்களை முன்வைப்பதற்கான நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அவை வன்முறைக்கான விதைகளை மறுபக்கத்தில் கொண்டிருப்பதாக கருதும் போக்கு காணப்படுவதையும் நோக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தானது என வன்முறை கலந்த குரலில் விமர்ச்சிக்கும்போது மறு சாராரின் விளக்கங்களைப்; புரிந்து கொண்டாலும் அது ஏன் தவறானது என்பதற்குரிய விளக்கம் முன் வைக்கப்பட வேண்டும். எமது அணுகு முறைகளில், புரிய வைப்பதில் இங்கிதம் தேவைப்படுகிறது. அது அங்கு இல்லை. இது எவ்வாறு நிகழ்கிறது? என்பதற்கு ஓர் உதாரணம் ஒன்றினை முன்வைக்கிறார்.

தனது 34 தடவைகள் இலங்கை விஜயத்தின்போது தமிழர் தரப்பினருடன் தான் நடத்திய ஆத்மார்த்தமான போராட்டம் என்னவெனில் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் உங்கள் பார்வையைத் தாருங்கள் என்பதுதான் என்கிறார். தமிழர் தரப்பினர் தமது பார்வையாக தீவின் ஒரு பகுதியை தமிழீழம் எனவும், ஏனைய பகுதி மனித குடியிருப்பில்லாத தரையாகவும் காண்கிறார்கள். அங்கு பெரும் தொகையான சிங்களவர்களும், அவர்களிடையே முஸ்லீம்களும் வாழ்கிறார்கள். அவர்களையும் எமது கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

பிரச்சனைக்கான தீர்வாக பல்வேறு சாத்தியங்களை விபரித்த அவர் இலங்கையின் ஒன்பது மாகாணங்களும் இணைந்து ஓர் சமஷ்டி அமைப்பாக செயற்படுவது குறித்த ஆலோசனை ஒன்றை முன்வைக்கிறார். இவ்வாறான ஏற்பாட்டின்போது முஸ்லீம் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண நிர்வாகம் மிகப் பொருத்தமான மாதிரியாக அதாவது மூவினங்களும் அமைதியோடு வாழ்வதற்கான உதாரணமாக அமையும் என்கிறார்.

Johan_Galtung-5

இன்னொரு தீர்வாக அதிக அளவிலான சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட ஓர் சமஷ்டி அமைப்பாக வடபகுதி செயற்படுவதாக எடுத்துக்கொண்டால், யாழ்ப்பாணமே அதன் தலைநகராகவும் இருப்பதாக கொள்வோம். அவ்வாறான ஓர் சூழலில் சென்னையில் ஓரளவு தரம் வாய்ந்த தூதராலயம் ( ஊழளெரடயவந ) ஒன்றை திறக்க உரிமை உண்டு. தமிழ்நாடு அருகில் இருப்பதால் முழு அளவில் அல்லாத தூதராலயம் ஒன்று செயற்படலாம். இக் காரியாலயம் தமிழர்களின் நலன்கள், அவர்களின் வர்த்தகம் என்பவற்றைக் கவனிப்பதாக அமையும். உதாரணமாக ஒருவர் தமிழ் நாட்டில் மரணித்து தமிழீழத்தில் அடக்கம் செய்யமாறு கோரியிருந்தால் அதனை தமிழ் மொழி மூலம் தொடர்புகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியும். இது இலங்கைக்கு ஆபத்து விளைவிக்கும் காரியம் அல்ல. ஏனெனில் எல்லைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னொரு வகையில் பார்ப்பதானால் இலங்கைக் கடவுச் சீட்டின் அடிப்பகுதியில் தமிழீழம் எனக் குறிப்பிட்டால் போதுமானது. இது நாம் இலங்கையர். அதன் தமிழீழப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதாக அர்த்தப்படுகிறது.

தர்க்க ரீதியான நியாயங்களுடன் தீர்வுகளை காத்திரமான வகையில் முன்வைக்கும்போது அவை மற்றவர்களை அச்சப்படுத்துவதாக அமையப் போவதில்லை. இவ்வாறுதான் பிரச்சனைகளுக்கான தீர்வகளை முன்னோக்கி நகர்த்தும் உபாயங்கள் அமையவேண்டுமென வாதிக்கிறார். உலகம் முழுவதும் பாதுகாப்பு தொடர்பான கற்கை நெறிகளை மேற்கொள்வோர் உள்ளனர். இவை ஒரு வகையான பயப் பீதியை எழுப்பும் போக்கைக் கொண்டன. இதனை அமெரிக்க, பிரித்தானிய சிந்தனைகளின் அடிப்படைகளில் காணக்கூடியதாக உள்ளது. எமக்கு எதிரிகள் இருப்பதாக கருதினால் அவர்களின் சிந்தனையைத் தட்டுவதற்கு இம் மாதிரி இணைந்து வாழ விரும்புவதை எடுத்துக் காட்டி புதிய நண்பர்களை உருவாக்க வேண்டும்.

தமிழ்ப் பிரதேச நில அபகரிப்பு, ராணுவ ஆக்கிரமிப்பு பற்றி கூறுகையில் இவ்வாறு தமிழர்களை நசுக்கி அவர்களைத் தமிழ்நாடு நோக்கித் தள்ளுவதே அதன் நோக்கமென அவர் பார்வை செல்கிறது. இத்தகைய நிலமைகளைத் தடுப்பதற்கு தற்போது நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஐ நா சபை மட்டத்திற்கு பிரச்சனைகள் சென்றுள்ளமை மிகப் பெரும் சாதனை எனக் கூறும் அவர், அவை பாதுகாப்புச் சபைக்குச் செல்லாமல் பொதுச்சபையில் விவாதிக்கப்படும் நிலை ஏற்படுவது நல்லது என்கிறார்.

இப் பிரச்சனைகளை அதாவது சமஷ்டி குறித்தும், தமிழ் நாட்டுடன் ராஜரீக தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்தும் கருத்துக்களை வெளியிட்ட அவர் இதனை மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் எடுத்துச் செல்லும் ஊடகங்களைக் கையாள்வது குறித்தும் கவனத்தைச் செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சீனாவிற்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை எனக் கருதும் அவர் செயல்முறைகள் வன்முறை அற்றதாக இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறார். ஊடகங்கள் அப் போராட்டங்களை வன்முறை அற்ற ஒன்றாக சித்திரிக்கும் நிலை ஏற்படவேண்டும் என்கிறார்.
அமைதியற்ற நிலை தொடர்வதால் தமிழ் நாட்டை நோக்கிச் செல்வோர் குறித்து கவனம் திரும்புகையில் தமது அடையாளங்களைப் பாதுகாக்கலாம் என அவ்வாறு செல்பவர்கள் கருதுகின்ற போதிலும் நிலமைகள் அவ்வாறு இல்லை. நக்ஸல்பாரிகள் தொடர்பாக இந்திய அரசு மிக மோசமாக செயற்படுகிறது. அங்கு ஒரு வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. சாதிகளைச் சார்ந்தவர்கள், மரபுவழி இனத்தவர்( வுசiடிநள ) என்போர் ஓட்டி அற்ற விமானங்கள் மூலம் கொடுமையாக தாக்கப்படுகின்றனர். இவை அசாமிலிருந்து கேரளா வரை தொடர்கிறது. இந் நிலையில் தமிழ்நாடு சென்றால் பாதுகாப்பு உண்டா? என்பதை அவர்களே சிந்திக்க வேண்டும்.

இலங்கைப் பிரச்சனையில் நோர்வே ஈடுபடுவதற்குக் காரணம் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களே எனக் கூறும் அவர் நோர்வேயின் தவறுகளையும் முன்வைக்கிறார். குறிப்பாக போர் நிறுத்தத்தினையும், சமாதானத்தை எட்டுவதையும் அவர்கள் குழப்பநிலையில் கையாண்டுள்ளதாக கூறும் அவர், போரைக் கண்காணித்தவர்கள் சகவாழ்வு என்ற முக்கிய அம்சத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. அரசுக் கட்டுமானத்தில் பிரதமர் ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், ஜனாதிபதி இன்னொரு கட்சியைச் சார்ந்தவராகவும், ஒருவர் முடிவை மற்றவர் எதிர்க்கும் வகையிலான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. பிரதமர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறார். ஆனால் ஜனாதிபதியின் சம்மதம் இல்லை. பிரதமர் தலைமையிலான அரசுடன் பேசி முடிந்ததைப் பெற முயற்சிக்கப்படுகிறது. ஒரு சாரார் அவ்வாறு செல்ல இன்னொரு சாரார் பழிவாங்கும் தருணத்திற்கு தயாராகின்றனர். மிகவும் கொடுமையான ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். இத்தகைய பின்புலத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சம்பவங்களை உதாரணம் காட்டி தற்போது நடைபெறும் காணி அபகரிப்பு, ராணுவ பிரசன்னம் என்பன யாவும் தமிழர்களது நடத்தைகளில்தான் தங்கியுள்ளதாக கூறுகிறார்.

மேற்குலக நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை அவர் இன்னொரு கோணத்தில் காண்கிறார். இந்த நாடுகளின் பொருளாதாரம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் உலகின் 37 சதவீதமான மக்கள் தொகையையும், உலகிற்கு தேவையான உற்பத்தியில் 120 சதவீதத்தினை வழங்கும் நிலையில் அதுவும் மேற்குலக தரத்திற்கும், மலிவு விலையிலும் வழங்க தயாராக உள்ளன. இந்த இரண்டு நாடுகளுடன் தற்போது ரஷ்யா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளும் இணைந்து டீசுஐஊளு என்ற அமைப்பைத் தோற்றுவித்து நான்கு கண்டங்களைச் சார்ந்த அமைப்பாக தோற்றம் பெற்றுள்ளன. அதாவது தென்னமெரிக்கா சார்பில் பிரேசில், ஆபிரிக்கா சார்பில் தென்னாபிரிக்கா, ஐரோப்பா சார்பிர் ரஷ்யா, ஆசியா சார்பில் சீனா, இந்தியா உள்ளன. இந்த நாடுகளின் உற்பத்தி அதிகரிக்கும்போது அமெரிக்க நாணயம் உலக வைப்பு நாணயம் என்ற தகுதியை படிப்படியாக இழக்க வாய்ப்பு உண்டு. அத்துடன் முஸ்லீம் நாடுகளும் இதில் இணைகின்றன. அமெரிக்க துணைக் கண்டத்தில் கடந்த காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரியாக கியூபா மட்டுமே காணப்பட்டது. தற்போது 33 நாடுகளில் ஒரு நாடு மட்டுமே நட்புறவாக உள்ளது. தென்னமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளின் சபை பலமான அமைப்பாக உள்ளது. அமெரிக்காவுடன் சம அளவு உரிமைகளை வற்புறுத்த ஆரம்பித்துள்ளன. இவை அமெரிக்காவிற்கு மேலும் கவலைகளைக் கூட்டியுள்ளது.

இச் சிக்கலான சூழலில் சீனா மீது தாக்கதலை நடத்துவது அமெரிக்காவிற்கு விருப்பமான ஒன்றாக இருக்கலாம் என்கிறார். இதனை விளக்க அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் மீது மேற்கொண்ட படையெடுப்பை உதாரணம் காட்டுகிறார். ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள் செப்டெம்பர் 11ம் திகதிய சம்பவங்களைக் காரணம் காட்டி இடம்பெற்றிருந்தாலும், உண்மையில் இதற்கான திட்டமிடுதல்கள் வெகு காலத்திற்கு முன்பதாகவே தயாராகிவிட்டதாகவும், இக் கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் பற்றிய பேச்சவார்த்தைகளில் அந் நாட்டின் முக்கிய அதிகாரி ஒருவருடன் தாம் ஈடுபட்டிருந்ததாகவம் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் மீதான தாக்குதல்கள் 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இதனைத் தாம் 2001ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதாவது தாக்கதல்களுக்கு 9 மாதங்களுக்கு முன்பதாகவே அறிந்ததாகவும் கூறுகிறார். எண்ணெய் வளங்களை எடுத்துச் செல்லும் குழாய் வசதிகளை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் வரைபடத்தில் பாஃறம் ( டீயபசயஅ ) பகுதியை அவ் அதிகாரி தனக்கு தொட்டுக் காட்டி கூறியதாக குறிப்பிடுகிறார்.

Johan_Galtung-6

இலங்கைப் பிரச்சனையில் பல நாடுகளின் ஈடுபாடுகள் குறித்த பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கும் அவர் நிரந்தர நண்பர்கள், நிரந்தர எதிரிகள் இல்லை எனினும் நிரந்தர நலன் என்ற ஒன்று உண்டு என்பதால் யாரையும் எத் தருணத்திலும் அவர்கள் கைவிடத் தயாராக உள்ளனர். உலகின் முதலாவது நாடாக அமெரிக்கா இருக்க வேண்டும் என்பதே அந்த நிரந்தர நலனாகும். இதன் காரணமாக தமக்கு எதிராக சீனா இருப்பதாக கருதுவதால்தான் தாக்குவதற்கு அவர்கள் விரும்பவார்கள் என்கிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாடசாலையில் அதன் உயர்மட்ட உறுப்பினர்களோடு பேச தமக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்ததாக கூறும் அவர் சீனாவிற்கு அவ்வாறான உலக எகாதிபத்திய எண்ணங்கள் எதுவும் இல்லை எனவும், அவ்வாறான வரலாறுகள் சீனாவின் கடந்த காலத்தில் உருவாகி அழிந்துவிட்டதாக அவர்கள் கருதுவதாகவும், இத்தகைய சிந்தனைப் போக்கின் விளைவுகள் அங்கு சாட்சியமாக உள்ளதாகவும் கூறுகிறார்.

உலகிலுள்ள 134 நாடுகளில் இடம்பெறும் படுகொலைகளின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கூறும் அவர் சீரான முறையில் செயற்படும் ஏகாதிபத்தியம் இவ்வாறு செயற்பட முடியாது. தம்மால் முடியாத போது உள்ளுரில் அவ்வாறான நிலமைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறான ஓர் செயற்பாடுகளின் தோற்றமே தற்போது உக்ரெய்ன் நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் எனக் குறிப்பிடுகிறார்.
2009 ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தமை குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ நா சபை என்பன அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுவது குறித்து தெரிவிக்கையில் அது அவற்றின் அபிப்பிராயமே அது தங்களுடைய கருத்தாக முன்வைக்கவில்லை வெறும் அபிப்பிராயமே என்கிறார். ஏனெனில் தற்போது முன்னரை விட முரண்பாடுகள் அவை ஒன்றிற்கொன்று இணக்கமில்லாத இலக்குகளைக் கொண்டதாக உள்ளது. பௌத்தர்கள் தம்மிடம் மகாவம்சம் உள்ளது என்கிறனர். நாடு தமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்கின்றனர். இது போன்றே யூதர்களும், அமெரிக்க கிறிஸ்தவர்களும் தமது நாடு குறித்து நம்புகின்றனர். இப் பின்னணியில் தமிழர்களுக்கு மனித உரிமை அடிப்படையில் சுயாதீனமாக செயற்பட பூரண உரிமை உண்டு. இதனையே 1966ம் ஆண்டு டிசெம்பர் 16ம் திகதிய சர்வதேச பிரகடனம் கூறுகிறது. ஒருவர் தமது மொழியைத் தேர்ந்தெடுக்கவும், உலகம் குறித்து சுயாதீமான பார்வையைச் செலுத்தவும் உரிமை உண்டு. உதாரணமாக ஒருவர் தனது வீட்டில் சுயாதீனமாக அதிகாரத்தைச் செலுத்த வேண்டுமெனில் அது அவரது சுதந்திர சொத்தாகவும், அதன்மீது சுயாதீனமாக அதிகாரத்தைச் செலுத்;தக் கூடியதாக அமைதல் வேண்டும். எனவே முரண்பாடுகள் இன்னமும் காணப்படுகின்றன. அவை இன்னமும் தீர்க்கப்படவில்லை. அவ்வாறான சூழலில் வன்முறை மீண்டும் தோன்றும். விடுதலைப்புலிகள் தமது இறுதிக் காலம் வரை வன்முறையாகவே நடந்தார்கள் எனக் குற்றம் சுமத்தும் அவர் இப் பிரச்சனைக்கு இரு பக்கங்கள் இருப்பதாக கூறுகிறார்.

வடக்கில் நீண்ட காலமாக வாழும் தமிழர்கள் இந்தியாவுடன் நீண்டகால தொடர்புகளை உடையவர்கள். அத்துடன் மலையக மக்கள் நீண்ட காலமாக அங்கு வாழ்கிறார்கள். மிகவும் தரமான கல்விமான்கள், அறிஞர்கள் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். மறு பக்கத்தில்பௌத்தர்கள் தரப்பு உள்ளது. தரமான அறிஞர்கள் ஒரே பல்கலைக் கழகங்களில் பயின்றவர்கள் உள்ளனர். இவ் இரு தரப்பாரும் ஆங்கிலேய பேராசிரியர்களிடமே கல்வி பயின்றனர். இதனை உதாரணம் காட்டி அடிப்படையை பின்வருமாறு மாற்றம்படி கோருகிறார். ஆங்கிலப் பேராசிரியர்கள் பிரித்தானியர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பிரித்தானியாவில் ராஜ்யங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுவது போன்று சமஷ்டிக்குப் பதிலாக ஒன்றியம் என அழைக்கும்படி வற்புறுத்தினார். உலகில் வாழும் மனித சமூகத்தின் 40 சதவீதமானவர்கள் 25 சமஷ்டிக் கட்டுமானங்களுக்குள் வாழ்கின்றனர். சோவியத் ரஷ்யா, செக்கோஸ்லோவாக்யா, யூகோஸ்லேவியா என்பன சரியாக நிர்மாணிக்கப்படாததால் பிரிந்துள்ளன. இருப்பினும் அரசுகள் ஒரே அரசு, ஒரே ராணுவம் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளன. இதனை உறுதி செய்யவே கூட்டுத் தலைமை நாடுகளும் செயற்பட்டன. அதுவே விடுதலைப் புலிகளை ஒழிக்கவும் காரணமாக அமைந்தது.

இலங்கையின் இனப் பிரச்சனைக்கான புதிய அணுகுமுறைகள் வன்முறை அற்றதாகவும், தூர நோக்குள்ளதாகவும், எதிரிகளைப் பயமுறுத்தாததாகவும், மாற்றுத் தீர்வுகள் பற்றிய நியாயங்களை அழுத்தம் திருத்தமாகவும் ஒரே ஒன்றியத்திற்குள் சுயாதீனமாகச் செயற்படும் அரச கட்டமைப்பைக் கொண்டதாகவும் அமையும் வகையிலான கோரிக்கையாக மாற்றம் பெறவேண்டும் என்பதே அவரது அவாவாக அமைந்திருந்தது.

Saurce: Tamilnet
Translation: V.Sivalingam