ஈழத் தமிழரின் வாழ்விற்காகவும், சிங்கள அரசின் அடக்கு முறைகளில் இருந்து தமிழினத்தை காக்கும் நோக்குடன், இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளுக்காய் நீரும் அருந்தாது அஹிம்சை முறையில் போராடி, மரணத்தை தழுவிய நாட்கள் இவை: ஈழத் தமிழர்களின் மனதில் இந்தியா மீதான நம்பிக்கை தளர்ந்த நாட்கள் இவை……

தீலீபனின் வரலாறு (சுருக்கமாக)

சராசரி உயரமும் பொதுநிறமும் மிக மெல்லிய தோற்றமும் கொண்ட இளைஞன்தான் இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன்..(நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26,1987) யாழ் மாவட்டம்,வலிகாமம் பிரதேசத்தில் உள்ள ஊரெழு என்னும் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட திலீபன் இராசையா ஆசிரியரின் கடைசி மகன் ஆவான்..அவனுக்கு இரு அண்ணன்மார் உள்ளனர்.சிறு வயது முதல் மிகவும் புத்திக் கூர்மையும் அதீத திறமையும் கொண்டு வளர்ந்தவன் பார்த்தீபன்..அண்ணன்மார் இருவருமே படிப்பறிவும் அடக்கமும் உயர்ந்த பண்பாடுகளும் நிரம்ப பெற்றவர்கள்..தந்தையும் அப்படியே..அந்த ஊரில் மிகவும் மதிப்பும் செல்வாக்கும் மிக்க குடும்பம் ஆசிரியர் இராசையாவினுடையது..என்றால் மிகையாகாது..

சிறுவயதிலேயே திலீபன் தாயை பறி கொடுத்தவன்,தாயன்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த அவனை தந்தையும் அண்ணன்மார் இருவரும் ஒரு புறாக் குஞ்சைப்போல்தான் பொத்திப் பொத்தி வளர்த்தனர்..கைக்குழந்தையாக இருக்கும்போதே திலீபன் தாயைப் பறிகொடுத்தவன் என்பதால் ஆசிரியர் இராசையா தன் மகனுக்கு ஒரு தாயாகவும் இருந்து மகனை பாசமுடன் வளர்த்து வந்தார். சின்னஞ் சிறிய தன் மகன் தாயில்லாமல் வளர்ந்த காரணத்தினால் சின்னம்மாவின்அரவணைப்பில் உண்மைத் தாயன்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர், தன் மகனுக்காகவே மறுமணம் செய்வதைக்கூட இறுதிவரை தவிர்த்துக் கொண்டவர்.. மகன் பிற் காலத்தில் தனது மண்ணின் மக்களுக்காக தன்னையே தியாகம் செய்வான் அவன் என்பதை உணர்ந்திருந்ததால் போலும் தந்தையும் தன் மகனுக்காக தனது இன்ப வாழ்வை தியாகம் செய்து கொண்டார் போலும்..?என்னே அந்த தியாகக் குடும்பத்தின் பாரம்பரியம்..தனித் தன்மை..?

இயல்பிலேயே திலீபன் படிப்பில் ஆர்வம் உள்ளவன் என்பதால் சிறுவயதுக் கல்வியை தனது சொந்த ஊரான ஊரெழுவிலும் பள்ளி இறுதி வகுப்புவரை யாழ்.இந்துக் கல்லூரியிலும் பயின்றவன் பார்த்தீபன். அவனது படிப்பறிவுக்கு எல்லையே இல்லை என்னும் காலம் ஒன்று ஒரு காலத்தில் இந்துக் கல்லூரியில் இருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை..வகுப்பில் எப்போதும் முதலாவதாக வந்து தனது அறிவுத் திறமையை நிரூபித்துவந்தான் அவன்.
எழுபதுகளில் சிங்கள அரசு தமிழ் மாணவர்களின் பட்டக் கல்வியை மருத்துவ கல்வியை பாழடிக்க கொண்டுவந்த தரப்படுத்தல் என்னும் திட்டமிட்ட சதியினால் எண்ணிறைந்த தமிழ் மாணவர்கள் தமது உயர் கல்வியை இடை நிறுத்தி வெளிநாடுகளுக்கு ஓடத் தொடங்கிய காலம் அது..எண்பதுகளின் ஆரம்பத்தில் பாத்தீபன் க.பொ.த.உயர்தர வகுப்பில் மிகத் திறமையாக சித்தி பெற்று ஸ்ரீலங்கா அரசின் தரப்படுத்தல் அளவையும் தாண்டி யாழ் மருத்துவ பல்கலை கழகத்துக்கு தெரிவாகி படிக்கச் சென்றான்..அந்தக் காலங்கள் தமிழ் இனத்துக்கு கறுப்புக் காலங்கள் போலும்..? இனக்கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கி தமிழ் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்த காலம் அது.சிறிலங்காப் படைகளின் அட்டூழியம் எல்லை தாண்டி சென்று கொண்டிருந்த காலமும் கூட அதுதான்..

சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் சிங்களக் கொடுவெறியர்களால் ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டதும்..இலங்கை முழுவதும் பாரிய இனக் கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி தமிழர்களை சிங்களவர்கள் கொன்று குவித்ததும்.. தமிழ் பெண்கள் வகை தொகையின்றி சிங்களப் பகுதிகளில் சிங்களக் காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டதும் .அதே காலப்பகுதியில் தான்…இனப்பிரச்சனையும் தமிழர்களின் அழிவும் திலீபநின்மருத்துவக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.ஆம் ஊரெழுவில் பிறந்த அந்த விடுதலைப் புலிகளின் கூட்டை நோக்கி பறந்தது..திலீபன் என்னும் பெயரில் ஆயுத மேந்தி தன இனத்துக்காக சுதந்திர கீதம் பாட ஆரம்பித்தது..

திலிபன் எனும் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலிபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் மரணம் எய்தினார்.

திலீபனின் ஐந்து அம்ச கோரிக்கைகள் ::

1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.