ஆயுதப் போராட்டம் தவறென்ற உலகமே இப்போது நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்..? – தாயகத்தில் இருந்து காந்தரூபன் September 18, 2014 News சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு தனி அலகுக்கான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக ரீதியான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை தமிழ் மக்கள் அன்று போலவே இன்றும் உணர்ந்துள்ளனர். ஜனநாயக வழியில் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்று அறிந்த காரணத்தாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் தோற்றம் பெற்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், எடுத்த எடுப்பிற்கெல்லாம் விதண்டாவாதம் கதைக்கின்ற சில நாடுகள் தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தின. பிரச்சினைகள் இருப்பின் அதை ஜனநாயக வழியில் தீர்த்திருக்க முடியும். அதற்கு ஆயுதப் போராட்டம் தேவையில்லை. ஒரு ஜனநாயக அரசுக்கு எதிராக யாரும் வன்முறையைப் பிரயோகிக்க முடியாது என்று முட்டாள்தனமாக கதைபேசி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்திருக்கின்றன மேற்படி விதண்டாவாத நாடுகள். இந்த நாடுகளின் கடும்போக்கு காரணமாக தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனித்திருக்கின்றது. மேற்படி நாடுகள், தற்போது ஒரு துரும்பைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத ஜனநாயகத்தை நோக்கி மீண்டும் தமிழ் மக்களைத் தள்ளியிருக்கின்றது. உலகிலுள்ள சில நாடுகள் ஜனநாயகத்தின் மூலம் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டாலும் பல நாடுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமது இறைமையை நிலைநாட்டியிருக்கின்றன. தமது மக்களுக்காக போராடிய இளைஞர்களின் தியாகத்தாலேயே பல நாடுகள் இந்தப் பிரபஞ்சத்தில் சுதந்திர நாடுகளாக மலர்ந்திருக்கின்றன. ஆனால் தமிழர்கள் சுதந்திரத்திற்காகப் போராடிய போதுதான் அந்த நாடுகளுக்கு இது வன்முறையாகத் தெரிந்திருக்கின்றது. தமிழர்கள் ஆயுதம் தூக்கியபோதுதான்? அவர்களுக்கு இது அராஜகமாகத் தெரிந்திருக்கின்றது. தமிழர்கள் ஜனநாயக வழியில் உரிமைகளைப் பெறவேண்டும். தமிழர்களை அழிக்கின்ற, கொன்று குவிக்கின்ற சிறீலங்கா அரசுக்கு பின்னால் தமிழர்கள் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்பதே மேற்படி நாடுகளின் கருத்துருவாக்கம். இதனாலேயே சிறீலங்காவுக்கு ஆயுத உதவி செய்து, ஆளணி உதவி செய்து தமிழரின் போராட்டத்தை நசுக்கியிருக்கின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டம் தேவையற்றது என்று கருதி சிறீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து போராட்டத்தை அழித்த நாடுகள் இன்று தமிழ் மக்கள் அவலங்களைச் சந்திக்கின்ற போது எங்கே போய்த் தொலைந்திருக்கின்றன? தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் எழுப்புகின்ற கடும் வினாக்களுக்கு மேற்படி நாடுகளால் விடையளிக்க முடியுமா? சிறீலங்காவுக்கு ஆயுத உதவி செய்து தமிழரின் போராட்டத்தை அழித்த நாடுகளின் தலைவர்களே ஈழத்தில் இருந்து உங்களை நோக்கி குரல் எழுப்புகின்றோம். இப்போது நீங்கள் எங்கே ஒழிந்திருக்கின்றீர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நாங்கள் இங்கே எந்தவித அச்சுறுத்தலும் இன்றி இருந்தோம். ஆனால், இப்போது அந்நியப் படைகள் எங்கள் இரத்தம் குடிக்கின்றன. ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்றுகூறி எங்கள் போராட்டத்தை அழித்த நாடுகளே இன்று நீங்கள் எங்கே? புலிகளின் காலத்தில் எங்கள் நிலங்களில் நாங்கள் விவசாயம் செய்தோம். புலிகளின் காலத்தில் எங்கள் கடலில் நாங்கள் தொழில் செய்தோம். புலிகளின் காலத்தில் எங்கள் வீடுகளில் நாங்கள் நிம்மதியாக இருந்தோம். புலிகளின் காலத்தில் தமிழருக்கு என்று இருந்து அடையாளங்களை நாங்கள் பேணிப் பாதுகாத்தோம். ஆனால், இன்று எல்லாமே சிங்களவன் கையில். நாங்கள் காலை என்ன உணவை உண்ண வேண்டும்? மதியம் எதை உண்ண வேண்டும்? இரவு எதை உண்ணவேண்டும் என்பதை சிங்களப் படைகள் தீர்மானிக்கின்றன. இவர்களை நம்பித்தான் நாங்கள் அகிம்சையில் போராடியிருக்கவேண்டும் என்கிறீர்கள்? இவர்களை நம்பித்தானர் நாங்கள் ஆயுதம் தூக்கியது தவறு என்கிறீர்கள்? சர்வதேச நாடுகளே, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், பல தசாப்த காலங்களாக நாங்கள் அகிம்சை வழியில் போராடிய பின்னர்தான் ஆயுதம் தூக்கினோம். சிங்களவர்கள் எங்களை நசுக்கியதற்கு பின்னர்தான் அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தோம். அவர்களின் அராஜகத்திற்கு பின்னர்தான் நாங்கள் அகிம்சையைக் கைவிட்டோம். நாங்கள் ஆயுதம் தூக்கியது பிழை என்று வாதாடுகின்ற நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள்? தாயகத்தில் இன்று என்ன நடைபெறுகின்றது என்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் கைகளில் இன்று ஆயுதம் இல்லை. எங்களிடம் பலம் இல்லை. எங்களுக்காக அதிகாரத்துடன் நின்று பேசுவதற்கு யாருமில்லை. இதனால் இன்று தமிழர் தாயகத்தில் நடைபெறுவதை நீங்கள் பாருங்கள். எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. எங்கள் வீடுகள் உகைக்கப்படுகின்றன. எங்கள் ஆலயங்கள் அகற்றப்படுகின்றன. எங்கள் வீட்டுக் காணிக்குள் அந்நியனின் முகாம். எங்கள் இடுகாடுகளில் நாங்கள் இறந்தோரைப் புதைக்க முடியில்லை. சுடுகாட்டில் எரிக்க முடியவில்லை. எங்கள் காணிகளில் நாங்கள் விவசாயம் செய்ய முடியவில்லை. எங்கள் கடலில் நாங்கள் தொழில் செய்ய முடியவில்லை. எல்லாவற்றையும் எதிரி ஆக்கிரமித்திருக்கின்றான். நாங்கள் ஆயுதம் தூக்கியது தவறு என்று கூறுகின்ற நீங்கள் இன்று இவற்றையெல்லாம் தடுக்காமல் பார்த்திருப்பது ஏன்? சரி, ஜனநாயகத்திற்கு வந்தால், இன்று தமிழ் மக்களின் ஜனநாயகக் கட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருக்கின்றது. இந்த ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்கு எத்தனை தடைகள்? எத்தனை முட்டுக்கட்டைகள்? வடக்கு மாகாண சபைக்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்விற்குக்கூட அங்குள்ள மக்கள் செல்ல முடியாது. கூட்டமைப்பு சபையில் கொண்டுவருகின்ற பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிதிநிலைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. நீங்கள் எங்கே போனீர்கள்? நாங்கள் ஏன் ஆயுதம் தூக்கியது பிழை என்று வர்ணிக்கின்ற நீங்கள் இந்த அட்டூழியங்களை ஏன் கேட்காமல் இருக்கின்றீர்கள்? தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கியது தவறு என்று கருதுகின்ற நீங்கள், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த ஐந்து ஆண்டுக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதும் நடவடிக்கை எடுத்தீர்களா? நீங்களும் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள், எங்களையும் நடவடிக்கை எடுக்க விடமாட்டீர்கள்? என்ன இது அநியாயம்? நாங்கள் விடுதலைக்காக போராடியது தவறு என்று கருதுகின்ற நீங்கள், சிறீலங்கா அரசிடமிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டித்தர முடியுமா? முடியாது. நீங்களும் எங்கள் பிரச்சினைகளில் தலையிடமாட்டீர்கள். ஆனால், ஒன்று மட்டும் கூறுகின்றோம். நிலமை இப்படியே தொடருமாயின் குறுகிய காலத்தினுள் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது தவிர்க்க முடியாது. நன்றி: ஈழமுரசு