கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.

கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் – நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.

ராஐன், மாத்தயா அண்ணையிடம் இன்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை மாத்தயா அண்ணை என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் பேசியதிலிருந்து அறிந்து கொண்டேன். என்னை வீணாகப் பட்டினி இடக்க வேண்டாம் என்று மாத்தயா வேண்டிக் கொண்டார். திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சோகச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ஓன்றுக்குமே நான் அழுததில்லை. இன்று?… மாத்தயா என்னை அதன் பின் வற்புறுத்தவில்லை.

ஆனால் இன்று காலை 10 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னதாக மாத்தயா என்னிடம் கூறியபோது, என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
தலைவர் மிகவும் கண்டிப்பானவர். ஏன்ன சொல்லப்போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக் கொண்டேன்.

தலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.
“இருங்க வாஞ்சி அண்ணா” என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது – ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று, ஒருகணம் சிந்தித்தேன்.

இல்லை !
என் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான் !
துறு, துறுவென்று பார்க்கும் அதே கண்கள். வட்ட முகம், கூரிய அழகான பெரிய மூக்கு,
அளவாக – அழகாக நறுக்கிவிடப்பட்ட நீண்ட மீசை.

“நீங்க படிச்சவர். வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்கவேண்டியது தான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது? நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் தலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள்? திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதனால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன். ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத்தர முயற்சிக்கிறேன். அதுமட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்கவேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்.”

என்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்தக் கிளாசை என்னிடம் நீட்டினார். ஆவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக் கூற முடியவில்லை.மடமடவென்று வாங்கிக் குடித்தேன்.

தலைவர் பிரபாகரன் கண்டிப்பானவர் என்பது தெரியும். ஆனால் அவரின் அன்பான வார்த்தைகள் எமது வாயைத் தானாகவே அடைக்கச் செய்துவிடும் என்பது எனக்கு இன்றுதான் புரிந்தது.

திலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டேயிருந்தன.
ஏன்? இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட பல நாட்டுப் பத்திரிகைகள் திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகத் தலைப்புச் செய்திகளைப் போட்டிருப்பதாக, எமது தகவல் தொடர்பு அறிக்கைகள் கூறுகின்றன.

இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது…..பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி, கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம், பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:

“அன்பார்ந்த தமிழீழ மக்களே !

விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும்.

எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. முக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்”.

நேற்று இரவு முழுவதும் அவர் ஆழ்ந்து தூங்கினார். இன்று காலை ஒன்பது மணி ஆகியும் தூக்கத்தைவிட்டு அவர் எழுந்திருக்கவில்லை.
இளைஞர்களான ‘நவீனன்கள்’ இருவரும், அவரின் இடப் பக்கத்திலும் வலப்பக்கத்திலுமாக அமர்ந்திருந்து விசிறியால் ஆள்மாறி ஆள் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன.
அவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பை மெதுவாகப் பரிசோதித்துக் கொண்டு சுவாசத்தையும் எண்ணுகின்றேன்.

நாடித்துடிப்பு – 120
சுவாசத்துடிப்பு – 24

ஆம். சாதாரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிக்கொண்டிருக்கிறது நாடித்துடிப்பு.
(நாடித்துடிப்பு – சாதாரணம் 72-80)(சுவாசம் – 16-22)

நான்கு நாட்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவநிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இருதயமும், சுவாசமும் பலமாக வேலை செய்யத் தொடங்கியிருந்தன. இதைவிட இரண்டு நாட்களாகச் சிறுநீர் கழியவில்லை.

தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்குச் சிறுநீர் கழியாமல் இருக்குமானால் சிறுநீரகத் தளர்ச்சி (Kidney Failiure) ஏற்படலாம். ‘கிட்னி பெயிலியர்’ ஏற்படுமானால் அது இருதயத்தில் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இறப்பை உண்டுபண்ணலாம்.

எனக்கு தெரிந்தவரை வழக்கமான நடைபெறக்கூடி இந்த நிகழ்சிகளினால் திலீபனின் உயிர் பறிக்கப்பட்டக்கூடிய வாய்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
நல்லூர்க்கந்தனிடம் முறையிட்ட மக்கள் நாச்சிமார் கோயில் அம்மனிடமும் மனமார வேண்டுவதைக் காதல் கேட்கிறேன்.

“தாயே உன் பிள்ளையொன்று உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நீதானம்மா கடைசிவரையும் காப்பாற்ற வேண்டும்….”
நீண்ட, நாட்களுக்குப்பின், திலீபனுக்காக மக்களுடன் சேர்ந்து நானும் இப்படி வேண்டிக்கொள்கின்றேன்.
வெகு நேரத்தின்பின் கண் விழித்த திலீபன், எழும்புவதற்குச் சத்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார்.

மைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக்கொண்டிருக்கிறது.
தீபனைப் பார்ப்பதற்குகாக அணியணியாக மேடைக்கு முன் புறம் மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்………. ஓருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இல்லை. சில தாய்மார்கள் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்க முடியாடல் விம்மி விம்மி அழுகின்றனர்.

கிறிஸ்தவ பாதிரியாரும் – பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதினள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.

ஓரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்ளைப் பற்றி அவர் அன்போடு வருடினார்.உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம் திறந்து வெகுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்.

தீலீபனின் பிடிவாதத்தையும், திடமனத்தையும் நன்கு அறிந்தவர் துறவி அப்படிருத்தும் திலீபன் படுத்திருக்கம் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாடல் விசும்பினார்.
கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார்.

பாதர் சிங்கராயர்மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி- அதையே அவரின் – வேண்டுகோளுக்குப் பதிலாக்கிவிட்டு- மௌனமாகினார்- திலீபன்.

பாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ். மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் ‘பரா’ வும் வந்தனர்.
எந்த இயக்கத்தவர்களானாலும் அவர்ளுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான்.
அவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும்ப டிவற்புறுத்தினார். அனால், அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.

செல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக, சாகும்வரையிலான உண்ணாநோன்பினை ஆரம்பித்தனர். ஆத்துடன், வல்வெட்டித்துறையயில் 05 தமிழர்கள் ஏற்கெனவே உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

இன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ, இந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று. அவர் திலீபனிடம் கூறினார். அவருடன் திரு யோகியும் வந்திருந்தார்.

தீலீபனின் பொறுப்புக்களையெல்லாம் தன் தலைமீது சுமந்து கொண்டிருப்பவர் யோகி.சில நாட்களுக்குமுன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைளையும் கண்டித்து, ஓரு நாள் அடையாள மறியற் போராட்டம், சகல இராணுவ முகாம்களிலும் பொது மக்களால் நடத்தப்பட்டபோது, யாழ் கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என்நினைவுக்கு வருகின்றது.

“ இந்த யாழ்ப்பாணக் கோட்டையியே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்த அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்பணித்துக்கொண்டு வருகிறோம். அதில் என் பங்கு எப்போது……? என்பதுதான் எமது கேள்வியாக இருக்க வேண்டும் தவிர, பதவிகள் எமக்கு பெரியதல்ல.. பதவிகளைத்தேடிச் செய்பவர்கள் புலிகள் அல்ல. அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்!”
அந்த தீர்க்கரிசனப் உயிர்வடிவம் கொடுப்பதற்குற்காகத்தான், திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்.
திலீபன் ஓரு சிறப்பான சதுரங்க வீரன். தனது பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளை இதற்காக அவர் பெற்றுள்ளார். ஆரசியலில் எந்த காயை எப்படி, எந்த நேரத்தில், நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்துருக்க வேண்டும்.
அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதான படையினரின் கண்களைத் திறப்பதற்கு, இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது முற்றிலும் பொருத்தமானதே. இந்தியா உள்ப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால், நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது.

அன்றிரவு திலீபனுக்குத் தெரியாமல் அவரது இரத்த அழுத்தத்தைப் பதிவு செய்து விட்டேன். அது 100/65
நாடித்துடிப்பு – 114சுவாசம் – 25
இந்தியா என்ன செய்யப்போகிறது? ஏனக்கு ஒன்றும் புரியவில்லை. “வெள்ளையனே வெளியேறு” என்று ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்கதாகப் போராட்டம் நடாத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே! இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனக்கு எதுவும் புரியவில்லை.

பயணம் தொடரும்……..

நன்றி:பதிவு