அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழ விடுதலையை விரைவுபடுத்த நாமும் பங்கெடுப்போம்… September 20, 2014 News சிறிலங்கா மீதான ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையத்தின் விசாரணை ஆனது, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. நாம் எதற்காகப் போராடுகிறோம? சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புப் படைகளால் நாம் எந்த அளவுக்கு அடக்கி, ஒடுக்கப்படுகிறோம்? எமது இனம் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது? என்ற உண்மைகளை, சாட்சிகளை உலகின் ஐக்கிய நாடுகளிடம் பதிவுசெய்வதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. இது எமது இனத்துக்காக, மிகவும் விழிப்போடும் கடமையுணர்வோடும் செய்யவேண்டிய ஒரு உன்னத வரலாற்றுக் கடமையாகும்! எமது தேசிய சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, கடந்த 65வருடங்களைத் தாண்டி நாம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். அமைதி வழியில் போராடி, ஒருபோதும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து எமது உரிமைகளை மீட்கமுடியாது என்ற நிதர்சனத்தை தமிழ்மக்கள் உணர்ந்ததைத் தொடர்ந்தே எமது தேசிய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. 2009 ஆம் ஆணடு; இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் வகைதொகையின்றி சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளை சர்வதேசம் அதைத் தடுத்து நிறுத்தத் தவறியதால், வேறு வழியின்றி எமது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 5ஆண்டுகள் கடந்துள்ள இன்றைய காலகட்டமானது, தமிழர் தாயகத்தில் என்றுமே சந்தித்திராத மிக மோசமான இனவழிப்பை எமது இனம் சந்தித்துவருகிறது! இன்று சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புப் படைகளின் துணையோடு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தீவிர இனப்பரம்பல் மேற்கொள்ளப்படுகிறது. தமிழரின் பூர்வீக நிலப்பரப்பு பறிக்கப்படுகிறது. தமது சொந்த மண்ணில் தமிழர்கள் முன்னேறமுடியாத அளவுக்கு தமிழ் மக்களின் பொருளாதாரம் பறிக்கப்பட்டு, சொந்த நிலத்திலே வேற்றினத்தவர்களாக அடிமைப்படுத்தப் படுகிறார்கள். திட்டமிட்ட மொழி, கலாச்சார, பண்பாட்டு சிதைவு ஏற்படுத்தப்படுகிறது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். தமிழ்ப் பெண்கள் சிறுவர்கள் என்ற வேறுபாடு கூட இன்றி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ் இளைஞர்கள் திட்டமிட்டு கண்காணிக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தமிழர்கள் தமிழர்களாக வாழமுடியாத ஒரு தீவிர இனவழிப்பு அங்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் எமது இனத்தை அழிவிலிருந்து மீட்பதற்காக எதுவும் செய்யவில்லை என்றால், எதிர்வரும் பத்து அல்லது இருபது வருடங்களுக்குள் தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் காட்டிலும் தமிழர்கள் மிக அரிதாகவே இருக்கப்போகின்ற மிகவும் பேராபத்தான ஒரு நிலைமை எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது! இன்று சர்வதேசமெங்கும் நாம் அரசியல் ரீதியாகப் போராடிவருகிறோம். எமது நீதிக்காக வேற்று இனத்தவர்களும் இன்று எம்மோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எமது இனத்துக்கு நடந்த கொடுமைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதன் வாயிலாக எமது மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை, போர்க்குற்றங்களை பதிவுசெய்து விசாரிப்பதற்காக அல்லது ஆய்வுசெய்வதற்காக ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அவை நிறுவியுள்ளது. இந்த சர்வதேச விசாரணையை தமிழ்மக்கள் அலட்சியப்படுத்திவிடக் கூடாது! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனும் இது தங்கள் கடமையாக உணர்ந்து இந்த சர்வதேச விசாரணைக்கு முன்வந்து சாட்சிவழங்க வேண்டியுள்ளது. எமது இனத்துக்கு ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சமல்ல! நாம் எதற்காகப் போராடினோம், எந்தளவு அழிக்கப்படுகிறோம், தொடர்ந்து எதற்காகப் போராடுகிறோம் என்ற கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட எமது மக்களே சுயமாக முன்வந்து தங்கள் பதில்களை சர்வதேசத்திடம் பதிவுசெய்துகொள்கின்ற ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு வாய்ப்பு எமது மக்களிடம் இன்று விடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு மிகவும் குறுகிய வரையறுக்கப்பட்ட கால எல்லையாக உள்ளது, அதாவது வரும்மாதம் 30.10.2014 இற்கு முன்னர் எல்லோரும் தங்கள் சாட்சிகளைப் பதிவுசெய்ய வேண்டியுள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்தி எமது உரிமைப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதோடு, எமது இனத்தை அழிவிலிருந்து பாதுகாத்து, எம்மை தீவிரமாக இனவழிப்புச் செய்த கொடியோரை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சிக்கு உறுதுணை வழங்குமாறு அனைவரையும் அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம். அத்துடன், சாட்சிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பணியாற்றிவரும் அனைத்துத் தரப்பினரும் மற்றும் அனைத்து தமிழ் ஊடகங்களும் பொறுப்போடு செயற்பட்டு, சர்வதேச விசாரணையின் முக்கியத்துவமானது அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் மிக விரைவாகத் தங்கள் கடமைகளை மேற்கொள்ளுமாறு மிகவும் அன்போடும் பொறுப்போடும் கேட்டுக்கொள்கிறோம். நாடுவாரியாக சாட்சிகளைத் திரட்டி அனுப்பும் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளின் விபரங்கள், தொடர்பு இலக்கங்கள் என்பன கீழே தரப்பட்டுள்ளன. சாட்சிகளை வழங்கும் மக்கள், தமக்கு வேண்டிய விளக்கத்தினையும் ஆலோசனைகளையும் அவ்வெண்களைத் தொடர்புகொண்டு பெற்றுகொள்வதுடன் தமது சாட்சிகளைப்பதிவு செய்து தமிழீழ விடுதலையை விரைவுபடுத்தும் பணியில் தாமும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ➢ கனடா கனடியத் தமிழர் தேசிய அவை தொலைபேசி எண் : 416 830 77 03 போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்(CWVHR) தொலைபேசி எண் : 416 628 14 08 ➢ பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு –பிரித்தானியா தொலைபேசி எண் : 079 18 32 41 00 ➢ பிரான்சு பிரான்சு அனைத்துத் தமிழர் கட்டமைப்புக்களினதும் போர்க்குற்ற ஆதாரங்கள் சேகரிப்புக்குழு தொலைபேசி எண் : 06 52 72 58 67 – 06 05 51 42 77 அலுவலக முகவரி : தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு 28 Place de la Chappelle 75011 Paris Métro 2, la Chapelle ➢ சுவிஸ் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொலைபேசி எண் : 0041 78 66 29 306 அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை அமைப்பு தொலைபேசி எண் : 0041 79 19 38 668 ➢ யேர்மனி யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை தொலைபேசி எண் : 015 127 928 817 ➢ அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – அவுஸ்திரேலியா தொலைபேசி எண் : 046 90 89 883 ➢ நோர்வே நோர்வே ஈழத்தமிழர் அவை தொலைபேசி எண் : 0047 90 64 16 99 – 0047 93 42 22 29 ➢ டென்மார்க் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம். தொலைபேசி எண் : 0045 21 73 41 79 ➢ இத்தாலி தமிழ் அமைப்புகள் ஒன்றியம் தொலைபேசி எண் : பலர்மோ : 32 98 51 97 46 மேற்பிராந்தியம் : 32 92 41 09 80 ➢ நெதர்லாந்து நெதர்லாந்து தமிழர் அவை தொலைபேசி எண் 0031 64 02 29 481 ➢ பெல்ஜியம் தமிழர் பண்பாட்டுக் கழகம் – பெல்ஜியம் தொலைபேசி எண் : 0032 49 21 98 664 ➢ நியூசிலாந்து நியூசிலாந்து மக்கள் அவை தொலைபேசி எண் : 0064 21 07 50 029 ➢ பின்லாந்து தமிழ் சங்கம் – பின்லாந்து தொலைபேசி எண் : 0035 84 65 76 75 47 “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”