வன்னியின் சுதந்திர ஊடகவியலாளரான சின்னராசா சிவேந்திரன் நேற்றிரவு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் தாக்குதலாளிகள் அவரை ஏ-9 வீதியினால் பயணித்த வாகனமொன்றுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்ய முற்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சின்னராசா சிவேந்திரன் (வயது 33) வழமை போலவே கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலுள்ள தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களுள் ஒன்றினது பிரதேச அலுவலகத்திற்கு செய்திகளை வழங்கிய பின்னர் வழமை போலவே பரந்தனிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அவ்வேளை அவரது துவிச்சக்கர வண்டியினை வழிமறித்து இரு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

தம்மை முதலில் சி.ஜ.டி என அறிமுகப்படுத்திக்கொண்ட இந்நபர்கள் தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் இருட்டினுள் மறைத்துக்கொண்டுள்ளனர். அவர் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல்களை நடத்திய நபர்கள் அவர் மயக்கமுற்றிருந்த நிலையில் அவரை தூக்கி வீதியில் பயணித்த வாகனமொன்றின் சில்லினுள் வீசியுள்ளனர்.எனினும் சுதாகரித்துக்கொண்டு வாகனத்தை திருப்பி மோதாது சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுதாகரித்துக்கொண்ட சிவேந்திரன் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு தப்பித்து அருகாகவுள்ள உணவகமொன்றை நோக்கி தப்பி சென்றுள்ளார். எனினும் தாக்குதலாளிகள் அவரை துரத்தி சென்றுள்ளனர். எனினும் அவர்களை பதிலுக்கு தாக்கிவிட்டு சிவேந்திரன் செல்ல பொதுமக்கள் திரண்டதையடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.

சின்னராசா சிவேந்திரன் வன்னியில் நீண்டகாலமாக ஊடகவியலாளராக செயற்பட்டுவருவதுடன் ஒரு ஆசிரியராகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.