புலி பதுங்குவது பாய்வதற்காகவே: சீ.வி.விக்னேஸ்வரன் September 25, 2014 News புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது தொடர்பில் இனி சபை அமர்வுகளில் கதைப்பதில்லையென கூறினார். இதன்போது குறுக்கிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அனைத்து விடயங்களுக்கும் ஆளுநருக்கு பயந்து விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். சிவாஜிலிங்கத்தின் கருத்திற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மத்திய அரசிடமிருந்து நிறைய விடயங்களை நாங்கள் பெறவேண்டிய தேவை இருக்கிறது. ஆகையால், முதலமைச்சர் நிதி நியதிச்சட்டத்தைப் பற்றி கதைப்பதை விடுவோம் என்றார். நாங்கள் தோற்றுப் போகவில்லை. நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த வெற்றி. வடமாகாண வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளிடம் உதவிகள் கோரி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குறுக்கிட்டு எங்களுக்கு உதவிகள் கிடைக்காமல் செய்வதுடன், தொடர்புகளை துண்டிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார். இருந்தும், ஜப்பான், நோர்வே, தென்கொரியா ஆகிய நாடுகளுடன் உதவித் திட்டங்கள் பெறுவது தொடர்பில் பேசி வருகின்றேன். வடமாகாண மக்களில் உதவிகள் தேவைப்படுவோருக்கான தரவுகள் அந்த நாடுகளின் பிரதிநிதிகளால் சேகரிக்கும் நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர். இதற்கும் குறுக்கீடுகளை மத்திய அரசாங்கமும், வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.