இலங்கை ஜனாதிபதியின் விசாரணைக்குழுவினது விசாரணையில் வாக்குமூலமளிக்க இராணுவப்புலனாய்வு பிரிவினர் தமது வாகனங்கள் மூலம் ஆட்களை தருவித்தமை விசாரணையின் நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையில் காணாமல் போனவர்களது சாட்சியப்பதிவுகள் நடைபெற்று வரும் பூநகரி பிரதேச செயலக சூழலில் இராணுவ புலனாய்வாளர்களது காலை முதல் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகவும் அச்சத்துடனேயே சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. 3ஆவது நாளாக இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் சாட்சியப் பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டு சாட்சயமளிக்கப்பட்ட 2பேர், புதிய பதிவு மேற்கொண்ட ஒருவர் மற்றும் அழைக்கப்படாத 4 பேருமாக 7 பேர் இராணுவத்தினரால் அவர்களது வாகனத்தில் சாட்சியப்பதிவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அவர்களது வீடுகளிற்கு இன்று காலை சென்ற இராணுவ சீருடை மற்றும் சிவில் உடையில் சென்ற படை புலனாய்வாளர்கள் பூநகரி பிரதேச செயலகத்தில் காணாமல் போனவர்களது பதிவுகள் நடைபெறுவதாக தெரிவித்து அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளிற்கு எதிராக வாக்குமூலமளிக்க நிர்ப்பந்தித்தே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இராணுவம் வாகனம் ஒழுங்கு செய்து குறிப்பிட்டவர்களை ஏற்றிக் கொண்டு வந்திருந்தனர்.

அதே வேளை பிரதேச செயலக வளாகத்திலும் வெளியிலும் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தேசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும சீருடை தரித்த இராணுவத்தினரும் குவிந்திருந்தனர்.

இதனால் சாட்சியமளிப்பவர்கள் முழுமையாக பதிலளிக்க அச்சப்பட்டனர். இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வெளியில் நின்ற சீருடை அணிந்த இராணுவத்தினரிடம் சென்ற ஆணைக்குழுவின் அதிகாரி அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த இடத்தை விட்டு இராணுவத்தினர் சென்று விட்டனர்.

எனினும் சிவில் உடையில் வளாகத்திற்குள் நின்ற புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்தவர்களையும் புகைப்படம் எடுப்பதில் முனைப்புடன் இருந்தனர். இது குறித்தும் ஆணையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களது நடவடிக்கையும் நிறுத்தப்பட்டதுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் புகைப்படம் எடுப்பவர்களையும் அகன்று செல்லுமாறு பணித்தனர். அத்துடன் அவர்களால் வாக்குமூலமளிக்க அழைத்து வரப்பட்டவர்களும் வெளியேற்றப்பட்டனர்.